சிறுகதை

நீயே என் காதல் ராஜா ராமன்

Spread the love

கார்த்தியை அடித்து துவைத்துக் கொண்டிருந்தாள் சிவரஞ்சனி.
செங்கல் சூளையில் வேலைபார்ப்பவர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சிவரஞ்சனியின் குரலைக்கேட்டு வேகமாக ஓடி வந்தான் சுரேஷ்.
கார்த்தியை சிவரஞ்சனி அடிப்பதைப் பார்த்து சுரேஷுக்கு பயம் ஏற்பட்டது.
கார்த்தியும் பலமானவன் தான். ஆனால் சிவரஞ்சனியிடம் அடி வாங்குவதை பார்க்கும் போது அவனுக்கு சிரிப்பு வந்தது.
அவள் கொடுக்கும் அடி இடி மாதிரி இருப்பதை பார்த்து ஒரு வித பதட்டம் சுரேஷுக்கு பற்றிக் கொண்டது.
‘‘ஒரு வாரத்திற்கு முன்பு தான் சிவரஞ்சனியை விரும்புவதை கார்த்தியிடம் சொன்னமே அதை எதுவும் சொல்லி அடிவாங்கிறானோ’’என்று சுரேஷுக்கு நினைவு ஓடியது.
இல்லையே அப்படியே இருந்தாலும் அவ எங்கிட்டதானே சண்ட போடனும் என்று எண்ணி குழம்பி நின்றான்.
சிவரஞ்சனி கார்த்திகை பார்த்து
‘‘ இந்த மாதிரி இன்னொரு தடவை சொன்னா. இதை விட அடி இன்னும் பல மடங்கு இருக்கும் பார்த்துக்கோ’’ என்று கோபமாக சொல்லிவிட்டு தன் சுடிதாரில் ஒட்டியிருந்த மண்ணை தட்டிவிட்டு சைக்கிளில் ஏறி வேகமாக
சென்றாள்.
அவளை அவள் உருவம் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தான் சுரேஷ்.
தன்னை யாரோ தொடுவது போல் இருந்ததை உணர்ந்து திடுக்கிட்டுத் திரும்பினான் சுரேஷ்.
கார்த்திக் நின்றுகொண்டிருந்தான்
‘என்னடா கார்த்தி, என்ன ஆச்சு,ஏன் சண்ட’
‘இல்லடா மாப்பிள்ளை. நம்ம செங்க சூளையில நம்மல விட அதிகமான செங்கலை அடுக்கி சிவரஞ்சனி தானேஅதிகமாச் சம்பாதிக்கிறா’
‘ஆமா அதுக்கு என்ன?’
‘இல்ல மாப்பிள்ளை. நான் அவகிட்ட சொன்னேன் நீ எப்படி எங்களை விட அதிகமாச் சம்பாதிக்கிறாய்? நீ என்ன ஆம்பளயான்னு
தான் கேட்டேன் போட்டு என்னை கும்மிட்டாடா’’
‘அதை ஏன்டா போய் அவகிட்ட கேட்ட’
‘மாப்பிள்ளை உண்மைய சொல்லு. அவ ஆம்பளை மாதிரி தானே வேலபாக்குறா?’
‘ஏன்டா அதுக்காக ஒரு பொண்ணுக்கிட்ட இப்படியா போயி கேட்பே’
‘சரி…. அதவிடு மாப்பிள்ளை. கொஞ்சம் உசாரா இருந்துக்க. நீ பாட்டுக்கு போய் நான் உன்னை விரும்புரேன்னு சொன்னேன்னு வச்சுக்க கட்டாயம் இது மாதிரி உதை உனக்கு உண்டு ஓ கேயா’என்று கார்த்திக் சொன்னதை கேட்டவுடன் சுரேஷுக்கு பயம் வந்தது.
ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளாதபடி இருந்தான்.
மறு நாள் காலையில்….
வழக்கம் போல் சுரேஷ் செங்கல் சூளைக்கு சீக்கிரமாகவே போய் சிவரஞ்சனிக்காக காத்திருந்தான்.
பழக்க பட்ட சைக்கிள் சத்தம் கேட்டு சிவரஞ்சனி வருவதை உணர்ந்தான்.
சுரேஷ் அருகில் வந்த சிவரஞ்சனி
‘ இந்தா பனியாரம் என்று டிப்பன் பாக்ஸை நீட்டினாள்’
பனியாரத்தை எடுத்து அதை சாப்பிட்டபடியே சிவரஞ்சனியை பார்த்து.
‘என்னைய உனக்கு பிடிக்குமா’
‘ஏன் ரொம்ப பிடிக்குமே’ என்னைக்கும் இல்லாம இன்னைக்கு ஏன் கேட்கிறே?’
‘இல்லை நேத்து கார்த்திக்கைப் போட்டு அடிச்சியே அவன் நல்லவன் தானே’
‘அவன் நல்லவன் தான் ஆனால் அவன் கேட்ட கேள்வி என்னை கோபமாக்கியது அதான் அடுச்சேன்’
‘சரி அதை விடு’என் அம்மா, தங்கச்சி அவங்க எல்லாரையும் உனக்கு பிடிக்குமா?’
‘ரொம்ப புடிக்குமே . உங்கம்மா என் மேல ரெம்ப பாசமா இருப்பாங்களே. அது உனக்கு என்ன தெரியாதா என்ன’
‘தெரியுமே’
‘அப்ப எதுக்கு கேட்கிற’
‘இல்லை….. இன்னைக்கு சாயங்காலம் வேலை முடிஞ்சதும் அரச மரத்தடிக்கு வந்துரு. நான் உன்கிட்ட ஒன்னு
சொல்லனும். வருவியா….?
‘ம்’ வரேன் என்றவள் சுரேஷ் பார்த்து நாம பழகி நாலுவருஷம் இருக்குமா?’
‘இருக்கும் . ஏன் கேக்குரே’
‘இல்ல இது நாள் வரை இப்படி நீ பேசினதுதில்லையே’
‘சரி அதையெல்லாம் விடு, சாயாங்காலம் வந்திடு’என்று சொல்லிவிட்டு தன் வேலையை கவனிக்கச் சென்றான் சுரேஷ்.
சிவரஞ்சனி வேலையை முடிப்பதற்கு முன்பாகவே அரச மரத்திற்கு சென்று அவளுக்காக காத்திருந்தான் சுரேஷ்.
காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. காற்றின் வேகத்தை தாங்காத காய்ந்த இலைகள் ஒவ்வொன்றாக கீழே விழுந்தன.
காற்று குளுமையாக இருந்தாலும் சுவாசத்தை மீறி வீசிய காற்றை அவனால் ரசிக்க முடியவில்லை.
சுரேஷுக்கு வேர்த்தது. அவன் குனிந்து தரையில் கிடந்த இலையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனின் வேர்வைத்துளிகள் கீழே விழுந்து கிடந்த அரச மர இலையின் மீது விழுந்தது.
நிமிர்ந்து சிவரஞ்சனி வரும் பாதையையே பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ் ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு
உருண்டையும் உருளுதடி’ என்ற பாடல் வரியின் தாக்கத்தை அப்பொழுது உணர்ந்தான்.
தூரத்தில் சிவரஞ்சனி வருவதை கண்டவுடன் தன் முகத்தை துடைத்துக் கொண்டான்.
அரசமரத்தடிக்கு வந்த சிவரஞ்சனியை பார்த்து.
‘வா சிவரஞ்சனி’
‘ம்’என்ன சுரேஷ் எதுக்கு வரச் சொன்னாய்?’
‘நான் சுத்திவளைக்கவில்லை நேரடியாகவே விசயத்திற்கு வரேன், நான் உன்னை விரும்புரேன் சிவரஞ்சனி. உன்னைக் கல்யாண பண்ணிக்கிறேன்’’.
பதட்டத்துடன் கீழே குனிந்த படியே பேசினான் சுரேஷ்.
அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் சைக்கிளில் ஏறி வேகமாக சென்றாள் சிவரஞ்சனி.
உருவம் சிறியதாக தோன்றி அவள்மறையும் வரை சிவரஞ்சனியை கண் கலங்கிய படியே பார்த்துக்கொண்டிருந்தான் சுரேஷ்.
வீட்டிக்குள் நுழைந்த சிவரஞ்சனியை அவளுடைய அம்மா
‘வாடா சிவா’ என்றாள்
‘ஏம்மா எத்தனை தடவை சொல்லியிருக்கேன் என்ன சிவா என்று கூப்பிடாதேனு’’ சொல்லிவிட்டு கோவமாக சென்றாள் சிவரஞ்சனி.
‘சிவா தானே உன் பேர்’ நீயா சிவரஞ்சனி என்று நீ மாத்திகிட்டா. நான் என்ன செய்வது புலம்பியபடியே சுவற்றில் மாட்டியிருந்த சிவ ரஞ்சனி சிறுவனாக இருந்த போது எடுத்த போட்டாவை கண் கலங்கியபடி பார்த்தாள்
சிவரஞ்சனின் அம்மா…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *