மதுரை, அக். 10–
மதுரையில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
மதுரையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டுகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தேகத்திற்குரிய நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மதுரை அண்ணாநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட யாகப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகன் தினேஷ்குமார் (வயது 31). இவர், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர்கள் அஜித்கண்ணா, பிரகாஷ். இவர்கள் 3 பேர் மீதும் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை திருட்டு வழக்குகளில் தொடர்புடைய தினேஷ்குமார், அஜித்குமா, பிரகாஷ் ஆகியோரை அண்ணாநகர் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா தலைமையிலான போலீசார் வண்டியூர் டோல்கேட் அருகேயுள்ள போலீஸ் அவுட்போஸ்ட்டிற்கு அழைத்து சென்று விசாரித்தனர். பின் அவர்களை ‘ரிமாண்ட்’ செய்ய முடிவு செய்து நேற்று காலை 10:30 மணியளவில் ஸ்டேஷனிற்கு அழைத்துச்செல்ல வேனில் ஏற்றினர். அப்போது தினேஷ்குமார் தப்பி ஓடியுள்ளார். அவரை போலீசார் துரத்தினர். ஓடும் வழியில் வண்டியூர் கழிவுநீர் கால்வாயை தினேஷ்குமார் தாண்ட முயன்றபோது தவறி விழுந்து மூழ்கினார். உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சில மணி நேரம் தேடிய பிறகு, இறந்த நிலையில் தினேஷ்குமார் உடலை கண்டெடுத்தனர். தினேஷ்குமார் மீது 8 திருட்டு வழக்குகள் உள்ளன. அவரது இறப்பு குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடந்தது.
இதற்கிடையே தினேஷ்குமார் உயிரிழந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அண்ணாநகர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். அப்போது, தினேஷ்குமாரை போலீசார் அடித்துக்கொன்று, உடலை கழிவுநீர் கால்வாய் சேற்றில் வீசி நாடகமாடுவதாகவும் தெரிவித்தனர். தினேஷ்குமார் மரணத்தில் தொடர்புடைய போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அங்குள்ள பிரதான சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தினேஷ் குமார் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதால் தினேஷ்குமாரின் உடலை நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோ பதிவு ஆவணங்கள் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை பின்பற்றி உடற்கூறாய்வு மேற்கொள்ள வேண்டும் என மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு தினேஷ் குமார் தரப்பினர் கடிதம் கொடுத்தனர். இதனிடையே தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் நீதி விசாரணை நடத்த கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
இளைஞர் தினேஷ்குமார் உயிரிழப்பு விவகாரத்தில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெறும் என்பதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, அண்ணாநகர் பிரதான சாலை, மருத்துவமனை பிணவறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
![]()





