செய்திகள்

நீதி கிடைக்க பா.ம.க. போராட்டம் நடத்தும் அன்புமணி ராமதாஸ் அறிக்கை

Makkal Kural Official

தர்மபுரி, டிச.16:

தர்மபுரியில் பள்ளி மாணவி உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மூடி மறைக்க ரூ. 10 லட்சம் வாங்கிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து நடைபெற்றதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் திமுகவின் நீதியா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட வேண்டும். அவரின் தவறை மூடி மறைக்கும் வகையில் கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களும், அதற்கு துணை நின்ற கல்வித்துறை அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி பெற்றுத் தர பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘‘தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-–ம் வகுப்பு மாணவிக்கு அந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மணிவண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதற்குக் காரணமான ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து அவர் தப்பிக்க விடப்பட்டதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு பள்ளிகளில் பயிலும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலை திமுக அரசு உருவாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

வன்கொடுமை விவாகரம் வெளியானதைத் தொடந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட சிலர் குடிப்பட்டியைச் சேர்ந்த துணை நடிகர் ஒருவரின் வீட்டில் கூடி கட்டப்பஞ்சாயத்து பேசியுள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்க ஆசிரியர் மணிவண்ணனிடம் ரூ.10 லட்சம் வாங்கிய கட்டப்பஞ்சாயத்து கும்பல், அதில் ரூ.6 லட்சத்தை பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு கொடுத்து விட்டு மீதமுள்ள தொகையை தங்களுக்குள் பிரித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதில் தொடர்புடைய ஒருவர் இந்த விவரங்களை பொதுவெளியில் தெரிவித்ததைத் தொடர்ந்து தான் மாணவிக்கு இழைக்கப்பட்ட கொடுமை வெளியில் தெரியவந்துள்ளது.

அந்த மாணவி பெரிய பின்புலம் இல்லாத குறும்பர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதையும், அவரது தந்தை இல்லாத நிலையில், தாயும் இந்த சிக்கல் தொடர்பாக அலையும் போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பதையும் பயன்படுத்திக் கொண்டு மாணவிக்கு கொடுமை இழைத்தவர்களை ஒரு தரப்பினர் காப்பாற்றியுள்ளனர்.

குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் ஆசிரியர் மணிவண்ணன் இதற்கு முன் பணியாற்றிய பள்ளிகளிலும் இதே குற்றச்சாட்டுக்கு ஆளாகி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் என்று கூறப்படுகிறது. ஆசிரியர்கள் எனப்படுபவர்கள் தாய், தந்தைக்கு அடுத்த நிலையில், கடவுளுக்கும் கூடுதலான இடத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை நம்பித் தான் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். ஆனால், வேலிகளே பயிர்களை மேய்வதைப் போல குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது மன்னிக்கவே முடியாத குற்றம் ஆகும்’’.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *