செய்திகள்

நீண்ட நாள் விருப்பம்: மனநிறைவோடு அரசியலில் இருந்து விலகுகிறேன் : சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை

ஈரோடு, செப். 20–

திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசன், நீண்டநாள் விருப்பத்தின் அடிப்படையில் மனநிறைவோடு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

திமுகவின் 15வது உட்கட்சி பொதுத்தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் மாவட்ட செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளது. பலரும் ஆர்வத்துடன் மாவட்ட செயலாளர் பதவிக்கு போட்டியிட தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் 1989ஆம் ஆண்டு முதல் திமுகவில் பணியாற்றி வருகிறார்.

ஈரோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் சமூகத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2004ல் நடந்த மக்களவை தேர்தலில் திமுக சார்பில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆனார். 2021 சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதற்கிடையில் திமுக தலைமையை விமர்சித்து சுப்புலட்சுமியின் கணவர் ஜெகதீசன் கடுமையாக பேசி வந்தார்.

சுப்புலட்சுமி கடிதம்

இத்தகைய சூழலில், ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்து விடைபெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள விலகல் அறிக்கையில், 2009-ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு, மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல், கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன்.

தலைவர் கலைஞர் மறைவுக்கு பின், அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன். 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று, தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியன்று பதவியில் இருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிவிட்டேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.