தலையங்கம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) டிஆர்டிஓ இந்தியாவின் முதல் நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஒடிஷா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவிலிருந்து இந்த சோதனை சனிக்கிழமையன்று நடைபெற்றது.
டிஆர்டிஓ வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஏவுகணை ஆயுதப் படைகளுக்காக 1,500 கிமீட்டருக்கும் அப்பால் உள்ள இலக்கையும் நெடிப்பொழுதில் துல்லியமாய் தாக்கும் வல்லமை கொண்டதாய் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பல பகுதிளில் இருந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட அமைப்புகள் இந்த ஏவுகணையின் இறுதி கட்ட வேகத்தையும் இலக்கையும் துல்லியமாகத் தாக்கியதையும் உறுதி செய்தன.
இந்த ஏவுகணை, ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் மிஸ்ஸைல் காம்ப்ளெக்ஸ் மற்றும் பல்வேறு DRDO, டிஆர்டிஓ, ஆய்வகங்கள், தொழில்துறை நிபுணர்களுடன் ஒருங்கிணைந்த செயலாற்றி முழுவதுமாக நம் அறிவியல் ஞானத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது..
இந்த சோதனை டிஆர்டிஓவின் மூத்த விஞ்ஞானிகளும் ராணுவ அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இதைப் பற்றிப் பதிவு செய்யும் போது, இதை ஒரு வரலாற்றுச் சாதனையாகக் குறிப்பிடுவதோடு, இதுபோன்ற முக்கியத்துவம் மிக்க புதிய ராணுவ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியாவையும் சேர்த்துவிட்டதாகப் பாராட்டினார்.
பாதுகாப்புத் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை செயலாளர் மற்றும் டிஆர்டிஓவின் தலைவர் டாக்டர் சமீர் வி காமத், இந்தத் திட்டத்தில் உழைத்த அனைத்து விஞ்ஞானிகளையும் மற்றும் அதிகாரிகளை வாழ்த்தினார்.
இந்த ஏவுகணை மேக் 10 அதாவது ஒலியின் வேகத்தை விட பத்து மடங்கு அதிவேகத்தில் பயுலாய் பறந்ததுடன் இந்தியாவின் முன்னேற்றமான பாதுகாப்பு தொழில்நுட்ப திறன்களை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. இந்த துறையில் சீனா, ரஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக இந்தியா நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆராய்ச்சியில் முன்னோடியாகியுள்ளது.
இந்த சாதனை இந்திய பாதுகாப்புத் துறையில் முக்கிய முன்னேற்றமாக காணப்படுகிறது.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது, டிஆர்டிஓவின் புதுமைகளை தொழில்நுட்ப மேன்மையையும் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி 2023-24 நிதியாண்டில் சுமார் ₹1.27 லட்சம் கோடியாக இருந்தது, அதன் வளர்ச்சி ஒரு புதிய உச்சத்தை தொட்டது.
2024-2025 முதல் காலாண்டில் குறிப்பிடத்தக்க வகையில் 78% அதிகரித்துள்ளது. ஏப்ரல்-ஜூன் காலத்தில் ஏற்றுமதி ₹6,915 கோடியாக உயர்ந்துள்ளது,
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதியில் டிஆர்டிஓவின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்று பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஆகும். ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள பிரம்மோஸ் ஏவுகணை, சுமார் 290 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக்கூடிய சக்தி கொண்டது. உலக அளவில் அதிவேக ஏவுகணைகளில் இதுவும் ஒன்றாகும். அதன் பன்முகத்தன்மை, நிலம், கடல் மற்றும் வான்வழியாக ஏவப்படும் திறன் கொண்டது, இது சர்வதேச அளவில் மிகவும் விரும்பப்படும் ஆயுதமாக உயர்ந்துவிட்டது.. ஏவுகணை அமைப்புகளுக்கு கூடுதலாக, ரேடார்கள், மின்னணு போர் முறைகள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் (யுஏவிகள்), கவச வாகனங்கள் மற்றும் கடற்படை அமைப்புகள் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிக்கு டிஆர்டிஓ பங்களித்துள்ளது.