சென்னை, ஏப். 4–
நீட் தேர்வு ரத்துச் செய்யப்படும் என்று கடந்த சட்டசபை தேர்தலில் பொய் வாக்குறுதி அளித்து ஓட்டுக்களை பெற்ற தி.மு.க.,வுக்கு 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மரண அடி கொடுப்பார்கள் என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
10 நாட்களுக்கு முன்பு சவுக்கு சங்கர் வீட்டில் 50 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தி, அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றதுடன், பல பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். வீட்டுக்குள் மனிதக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுகளை கொட்டியுள்ளனர். இதை வன்மையாக கண்டித்துள்ளோம். இதுபோன்ற கீழ்த்தரமான சம்பவம் தமிழகத்தில் நடந்ததே இல்லை. இது கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. தூய்மைப்பணியாளர்கள் போர்வையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம்.
சாதாரண மக்களுக்கு
என்ன பாதுகாப்பு?
ஆனால், அரசு நாங்கள் கொண்டு வந்த தீர்மானத்தை அவையில் எடுத்துக் கொள்ளவில்லை. பிறகு, நாங்கள் கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வந்தோம். ஆனால் எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். ஆனால், அதனை தொடர்ந்து நிராகரித்தனர். அவை முன்னவர் இதனை பொருட்படுத்தவில்லை. நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். பத்திரிகையாளருக்கு இந்த நிலை. அப்படி என்றால் சாதாரண மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு கிடைக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக சிலரை கைது செய்தாலும், சாதாரண வழக்கை போட்டு, அன்றைய தினம் மாலையே அவர்கள் ஜாமினில் வெளியே வந்து விட்டனர். எங்கள் கட்சி தோழர்கள், நிர்வாகிகளை சிறையில் அடைத்தால் போராடி ஜாமீன் எடுக்கிறோம். ஆனால் பட்டப்பகலில் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்தவர்களை அப்படிபட்டவர்கள் மீது என்ன வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வாதிகாரம்
ஒருவரின் வீட்டில் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி, மனிதக் கழிவை வீசி அசுத்தம் செய்தவர்களை இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவேண்டும். இங்கு ஆட்சி நடக்கிறதா? சர்வாதிகாரம் நடக்கிறதா? மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே, இதை கண்டுகொள்ளவில்லை எனில், சட்டம் ஒழுங்கை எப்படி பாதுகாக்கும் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், எங்களை பேச அனுமதித்திருப்பார்கள். ஆனால், அவர்கள் எடுக்கவில்லை. இதனால், எங்களை பேச அனுமதிக்கவில்லை. ஒரு அரசை மக்கள் எதற்காக தேர்ந்தெடுக்கிறார்கள். மக்களை பாதுகாக்க வேண்டும். நாங்கள் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கிறோம். தி.மு.க.வினர் மக்கள் பிரச்சனையை கண்டுகொள்ளவில்லை.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு. இரட்டை நிலைப்பாடு கொண்ட கட்சி தான் தி.மு.க., 2021 சட்டசபை தேர்தலின் போது, தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாள் சட்டசபை நடக்கும் என்று சொன்னார்கள். மொத்தமாகவே 119 நாட்கள் நடத்தியிருக்கிறார்கள். எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. சட்டசபையிலும் அவர்கள் பேச அனுமதிப்பதில்லை.
எத்தனை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளோம். மாலை 5 மணி வரை அவையை நடத்தி பேசியிருக்கிறோம். மக்களுடைய பிரச்சனைகளை பற்றி பேச எதிர்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். நாங்கள் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். அவர்கள் பேசியதை கவனமாக கேட்டு அதை தீர்த்த்து வைத்தோம். அதனால் எங்கள் ஆட்சி சிறப்பான ஆட்சி என்று கூறினார்கள். இந்த அரசாங்கத்தை பற்றி பேச முடியவில்லை. 10 நிமிடம் தான் பேச வேண்டும் என்கிறார்கள். இந்த சட்டமன்றம் மக்கள் பிரச்சினை பற்ற பேச அனுமதிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் அறிவித்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அது குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மக்களிடம் தி.மு.க., வாக்குறுதி அளித்துள்ளது. நாட்டு மக்களிடம் சென்றால் கேள்வி கேட்பார்கள். அதற்கு மழுப்பலான பதிலுக்காக தான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் ரத்து என்று சொன்னார்கள். அதை நிறைவேற்றவில்லை.
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம் தன்னிடம் இருப்பதாக கூறினார். ஆனால் இதுவரை அதை வெளியிடவில்லை. எத்தனை நாட்கள் தான் மக்களை ஏமாற்றுவார்கள். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய முதலமைச்சர், நீட் தேர்வு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், ரத்து செய்ய முடியாது என்று கூறினார்.
அப்படியிருக்கையில் மீண்டும் இளைஞர்கள், மக்களை ஏமாற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நாடகத்தை நடத்துகிறது. தேர்தல் வந்தவுடன் மக்களிடம் சென்றால் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக, மக்களிடம் தங்களின் தவறை மறைப்பதற்காக இந்த கூட்டம் கூட்டீனார்கள். நாங்களும் நீட் தேர்வுக்கு விலக்குக் கேட்டு தீர்மானம் நிறைவேற்றினோம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அப்போது கிண்டல் செய்தனர்.
20 பேர் பலி
இன்றுவரை நீட் தேர்வு பயத்தால் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கூட ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர்களின் பேச்சை நம்பி தான் மாணவர்கள் இருக்கின்றனர். பொய்யை சொல்லி சொல்லி 4 ஆண்டுகளை ஓட்டி விட்டனர். தற்போது வேறு வழியில்லை. சட்டமன்றத்திலே முதலமைச்சர் கூறிவிட்டார். தற்போது மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற காரணத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ற நாடக்கத்தை நடத்துகின்றனர்.
2021 சட்டமன்றத் தேர்தலில் போது பெற்றோர்களையும், இளைஞர்களையும் ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த கட்சி தி.மு.க. வருகின்ற சட்டசபை தேர்தலில் இப்படி பொய் பேசி ஓட்டுக்களை பெற்ற தி.மு.க.,வுக்கு மரண அடி கொடுப்பார்கள். ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அறிவித்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியது அண்ணா தி.மு.க. ஆட்சி தான். இந்த சாதனையை செய்தது அண்ணா தி.மு.க.
தி.மு.க.., அரசு அமைந்த பிறகு எந்த திட்டத்தையும் உருப்படியாக அறிவிக்கவில்லை. எந்த திட்டத்தை அறிவித்தாலும் மக்களை ஏமாற்று வகையில் உள்ளது. மக்களுக்கு நன்மை கிடைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை. நீட் தேர்வை கொண்டு வந்ததே காங்கிரசும் தி.மு.க.வுதான். இதற்கு முழுக்க முழுக்க காரணம் 2010ல் மத்தியில் தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்தது தான். தற்போது இரட்டை வேடம் போடுகிறது தி.மு.க.
இவ்வாறு அவர் கூறினார்.