செய்திகள்

‘நீட்’ மறுதேர்வு நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அறிவுரை

Makkal Kural Official

புதுடெல்லி, ஜூலை9-–

‘நீட்’ முறைகேடு வழக்கில் வினாத்தாள் கசிவு தெளிவாகி இருக்கிறது, குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாவிட்டால், மறுதேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியுள்ளது.

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மே 5ம்தேதி நடந்தது. 24 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய இந்த தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு என பல்வேறு புகார்கள் எழுந்தன. ஜூன் 4ம்தேதி தேர்வு முடிவுகள் வெளியானபோது 67 மாணவ-–மாணவிகள் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றிருந்தனர். இதில் அரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்களும் அடங்குவர்.

இதைப்போல தேர்வின் போது பல்வேறு வகையில் ஏற்பட்ட நேரமிழப்புக்காக 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டு இருந்தது. இவ்வாறு மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் அம்பலமானதால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவ-ர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களுக்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

இந்த மோசடிகளுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த அதில் கோரப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் 1563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்வதாக கோர்ட்டில் அரசு தெரிவித்து, அவர்களுக்கு மறுதேர்வு நடத்தவும் நடவடிக்கை எடுத்தது.

அதன்படி கடந்த மாதம் 23ம்தேதி அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த 1ம்தேதி வெளியிடப்பட்டன. அதன் அடிப்படையில் புதிய தரவரிசைப்பட்டியலும் வெளி யிடப்பட்டது.

முன்னதாக நீட் தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை மத்திய அரசு சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. ஜார்கண்ட், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமானோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.

மாணவர்களின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினை என்பதால் மத்திய அரசையும், தேசிய தேர்வு முகமையையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க, நீட் தேர்வை ரத்து செய்யக்கூடாது என நேர்மையாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற குஜராத்தை சேர்ந்த 50க்கு மேற்பட்ட மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த மாணவர்களுக்கு மத்திய அரசும் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வது அறிவுப்பூர்வமாக இருக்காது என சுப்ரீம் கோர்ட்டிலும் மத்திய அரசு கூறியுள்ளது.

30 வழக்குகள் விசாரணை

இவ்வாறு நீட் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள 30-க்கு மேற்பட்ட வழக்குகள் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

விசாரணை தொடங்கியதுமே, பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் ஆஜராக வக்கீல் ஒருவர், நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, விடைத்தாள் மோசடி, ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் அதிகமாக நடந்துள்ளதால் இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆனால் தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள், தேர்வை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டனர்.

அப்போது நீட் முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமையை நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அவர்கள் கூறியதாவது:-

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்துள்ளது தெளிவாகி இருக்கிறது.

டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் வழியாக வினாத்தாள் கசிந்திருந்தால் அது காட்டுத்தீ போல பரவும். அப்படி சமூக ஊடகங்கள் மூலம் வினாத்தாள் கசிந்திருந்தால், மறுதேர்வுக்கு உத்தரவிட வேண்டும்.

தேர்வின் புனிதத்தன்மை இழந்திருந்தால், மறுதேர்வு கட்டாயம். நம்மால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாவிட்டால், மறுதேர்வுக்கு உத்தரவிட வேண்டும்.

நடந்ததை பற்றி நாம் மறுத்து சாதிக்க வேண்டாம். நீட் தேர்வை அரசு ரத்து செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம், ஆனால் கேள்வித்தாள் கசிந்ததன் மூலம் பயன்பெற்றவர்களை அடையாளம் காண அரசு என்ன செய்யும்?

வினாத்தாள் கசிந்ததன் மூலம் எத்தனை பேர் பயன்பெற்றார்கள்? என்பதையும், அவர்களுக்கு எதிராக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்பதையும் அறிய விரும்புகிறோம்.

வினாத்தாள் கசிவு நடந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கசிவின் அளவை நாங்கள் தீர்மானிக்கிறோம்.

இந்த மோசடிகள், அமைப்பு ரீதியாக நடந்துள்ளதா? இது முழு தேர்வு நடைமுறையின் கண்ணியத்தை பாதித்துள்ளதா? மோசடியால் பயனடைந்தவர்களை, கறைபடியாத மாணவர்களிடமிருந்து பிரிக்க முடியுமா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அப்படி இந்த மோசடி அனைத்து தேர்வு நடைமுறைகளையும் பாதித்து, மோசடிதாரர்களை மற்றவர்களிட மிருந்து பிரிக்க முடியாத சூழ்நிலையில், மறுதேர்வுக்கு உத்தரவிட வேண்டியது அவசியம்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

11ம்தேதிக்கு ஒத்திவைப்பு

பின்னர் இந்த வழக்கின் விசாரணைைய வருகிற 11ம்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் அதற்குமுன் இந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகள் நடந்த மையங்கள், நகரங்களை அடையாளம் காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்குமாறு தேசிய தேர்வு முகமையையும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதைப்போல மோசடியால் பயனடைந்தவர்களை அடையாளம் காண பின்பற்றப்பட்ட முறைகள் மற்றும் அவர்களின் எண்ணிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *