செய்திகள்

நீட்’ தேர்வை விலக்கி, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்

Makkal Kural Official

மோடிக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை, ஜூன் 11–

3 வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், ‘நீட்’ தேர்வை விலக்கி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் நரேந்திர மோடி அவர்களுக்கும், அவரது அமைச்சர்களுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமர் பதவியை தொடர்ந்து மூன்றாவது முறையாக அலங்கரிப்பது எளிதான ஒன்றல்ல.

சாதிவாரி கணக்கெடுப்பு

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு மட்டும் தான் இதுவரை அப்பெருமையை பெற்றிருந்தார். எளிய குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி, நேருவுக்கு அடுத்தபடியாக அந்த சாதனையை படைத்துள்ள இரண்டாவது பிரதமர் ஆவார். அடுத்தக்கட்டமாக அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பொருளாதார வல்லரசு என்ற இலக்கை நோக்கி இந்தியா பயணித்து வருகிறது.

மூன்றாவது முறையாக தொடர்ந்து பிரதமர் பதவியை வகிக்கும் நரேந்திர மோடி அவர்களிடமிருந்து இந்த நாடு, குறிப்பாக தமிழ்நாடு நிறைய எதிர்பார்க்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது உள்ளிட்ட சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகள், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைகளில் மாநில ஒதுக்கீடு வழங்குதல், ‘நீட்’ விலக்கு உள்ளிட்ட மாநிலங்களின் உரிமைகளை அதிகரித்தல் போன்றவை சார்ந்த கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் நிலவுகிறது. அதை கண்டிப்பாக ஒன்றிய அரசு செய்யும் என்று நம்புகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *