செய்திகள்

‘நீட்’ தேர்வு விவாதம்: ஸ்டாலின் – எடப்பாடி எதிர் சவால்கள்

சென்னை, பிப்.11–

‘நீட்’ தேர்வு குறித்து விவாதிக்க தயாரா என நேற்று எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்திருந்தார்.

பொது இடத்தில் விவாதிக்க தயார். நீங்கள் தயாரா என்று அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்சவால் விடுத்தார்.

நேற்று காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

நுழைவுத் தேர்வை சட்டப்பூர்வமாக ரத்து செய்தது கருணாநிதி தான். நுழைவுத் தேர்வு என்பது எந்த வடிவத்திலும் வரக்கூடாது என்பது தான் கருணாநிதியின் கொள்கை என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

கடந்த தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்தத் தேர்வு மையத்தில் ‘நீட்’ தேர்வு நடந்தது என்று எடப்பாடி சொல்ல திராணி உள்ளதா? கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு 4 ஆண்டுகளாக நுழையாமல் போனதற்கு யார் காரணம்? இதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பதில் சொல்ல தயாரா என்றும் ஸ்டாலின் கேட்டார்.

இதற்கு இன்று மதுரை புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். பொது இடத்தில் நானும், ஓ.பன்னீர் செல்வமும் விவாதிக்க தயார். நீங்கள் தயாரா என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார்.தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ந் தேதி பிரசாரத்தை தொடங்கினார். இதையடுத்து அவர் சிவகாசி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய இடங்களில் சூறாவளி பிரசாரம் செய்தார்.

இந்த நிலையில் அவர் மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். இதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை மதுரைக்கு வந்தார். பின்பு புதூர் பஸ்நிலைய பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அப்போது மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசியதாவது:-–

நீட் தேர்வு வருவதற்கு யாருடைய ஆட்சியில் நச்சு விதை தமிழகத்தில் ஊன்றப்பட்டது? அதுகுறித்து விவாதிக்க நாங்கள் தயார். நீங்கள் அறிவிக்கும் ஒரு பொதுவான இடத்தில் நாங்களும் பேசுகிறோம். நீங்களும் பேசுங்கள். மக்கள் நீதிபதியாக இருந்து தீர்ப்பை வழங்கட்டும்.

எதையாவது கூறி மு.க.ஸ்டாலின் தப்பிக்க பார்க்கிறார். 2021 சட்டமன்ற பொது தேர்தலின்போது தி.மு.க. ஆட்சி அமைந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், தற்போது அமைச்சர்களாக உள்ளவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் ஆகிறது. ஏன் அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. அவர்கள் பேசுவது அனைத்தும் பொய்தான். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் ஸ்டாலினுக்குதான் கொடுக்க வேண்டும்.

என்ன ரகசியம்?

அவரது மகன் உதயநிதி 2021 சட்டமன்ற தேர்தலின்போது பேசும்போது, நீட் தேர்வை ரத்து செய்வதற்கு எங்களிடம் ரகசியம் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த ரகசியத்தை வைத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்.

அந்த ரகசியம் என்ன என்று கேட்டால் நீட் தேர்வை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்துவோம் என்பதுதான் அந்த ரகசியமாம். இதற்காக அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். இவ்வளவு பெரிய ரகசியத்தை வெளியிட்ட அவருக்கு தமிழக அரசு சார்பிலேயே டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

பல வகையில் பேசி மக்களை ஏமாற்றுகின்றனர். கவர்ச்சிகரமாக பேசி வாக்குகளை பெற்ற பிறகு தற்போது மாற்றி பேசி வருகிறார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அவரது கட்சி அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் என அவர்கள் அனைவரும் கூறுவது பொய்.

சவால் ஏற்பு

நீட் தேர்வு குறித்து விவாதம் செய்ய தயாரா? என்று எங்களுக்கு ஸ்டாலின் சவால் விடுகிறார். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எந்த பொது இடத்தில் நீங்கள் எப்போது அழைத்தாலும் நானும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் மேடையில் தோன்றி விவாதத்தில் கலந்து கொள்ள தயாராக உள்ளோம். நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? சவால் விட்டால் அதனை அவர்கள் சந்திக்க வேண்டும்.

தேர்தல் வரும்போது சவால் விடுவார்கள். தேர்தல் வரும்போது ஏராளமான வாக்குறுதிகளை அளிப்பார்கள். ஆனால் அந்த தேர்தலோடு அதனை கைவிட்டு விடுவார்கள். 2021 சட்டமன்ற பொது தேர்தலில் எத்தனை அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். அதில் எதையாவது நிறைவேற்றினார்களா?

நீட் தேர்வு ஜெயலலிதா ஆட்சியின்போது வந்ததாக ஒரு தவறான பொய் தகவலை முதல்-அமைச்சர் கூறுகிறார் என்றால் அதை மன்னிக்க முடியுமா? ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சரே இவ்வாறு பொய் கூறினால் எப்படி நாட்டை காப்பாற்ற முடியும் என்று மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கொண்டு வந்தது காங்கிரஸ் – தி.மு.க.

2010 டிசம்பர் 21-ந்தேதி இந்திய மருத்துவ கவுன்சில் நீட் தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிட்டனர். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. அவர்களுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருந்தது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும், தி.மு.க.வும்தான். அதனை மறுக்க முடியுமா?

நீட் தேர்வு என்ற நச்சு விதையை தமிழகத்தில் ஊன்றியது தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி தான். அதன் பிறகு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வை ரத்து செய்வதற்கு பல்வேறு சட்ட போராட்டங்களை மேற்கொண்டார். அப்போது இருந்த காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு கோரிக்கைகளை வைத்தார்.

கிராமப்புற மாணவர்கள், ஏழை மாணவர்கள் நீட் தேர்வால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று பலமுறை கடிதம் எழுதினார். அப்போதைய பாரத பிரதமருக்கு வலியுறுத்தினார். ஆனால் அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

2013-ம் ஆண்டு பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்த சூழலில் 3 நீதி அரசர்கள் கொண்ட அமர்வு நீட் விவகாரத்தை எடுத்து விவாதித்தது. அதில் 2 நீதி அரசர்கள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தீர்ப்பு வழங்கினர். அதோடு விட்டிருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது. பிரச்சினைகளும் ஏற்பட்டிருக்காது.

அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த தி.மு.க. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. ஜெயலலிதா எவ்வளவோ கேட்டும் காங்கிரசும், தி.மு.க.வும் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது விசாரணை நடத்திய உச்சநீதிமன்ற 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு மாநிலம் முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.

யாருடைய ஆட்சியில் நீட் தேர்வு வந்தது என்பதை யாரும் மறைக்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது. யார் சீராய்வு மனு தாக்கல் செய்தார்கள் என்று நாட்டு மக்களுக்கு தெரியும். ஆனால் வேண்டும் என்றே திட்டமிட்டு நிறைவேற்ற முடியாத திட்டங்களை வெளியிட்டு மு.க. ஸ்டாலின் விழிபிதுங்கி நிற்கிறார்.

பொய்யை மறைப்பதற்கு ஆதங்கமாக பேசுகிறார். சவால் விடுகிறார். உங்கள் சவாலை ஏற்று விவாதங்களுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.