செய்திகள்

நீட்’ தேர்வு விலக்கு: ஆயூஸ் அமைச்சகம் கேட்டுள்ள விளக்கத்திற்கு விரைவில் பதில்

சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தகவல்

புதுக்கோட்டை, ஜன. 23–

‘நீட்’ விலக்கு தொடர்பாக ஆயுஸ் அமைச்சகம் கேட்டுள்ள விளக்கத்திற்கு விரைவில் மக்கள் நல்வாழ்வு துறை உதவியுடன் ஒரு வாரத்தில் பதில் அனுப்பப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் முதலமைச்சரின் முத்தான திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா, கலெக்டர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதற்கு பின்னர் தமிழ்நாடு முதலமைச்சர் தீட்டிய திட்டங்கள் மற்றும் திறந்து வைத்த பணிகள் ஆகியவை குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை அமைச்சர் பார்வையிட்டார்.

ஒரு வாரத்தில் பதில்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:–

‘நீட்’ விலக்கு தொடர்பாக ஆயுஸ் அமைச்சகம் கேட்டுள்ள விளக்கத்திற்கு சட்டத்துறை அமைச்சகம், மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உதவிகள் செய்து வருகிறது. ஒரு வார காலத்திற்குள் விளக்கத்திற்கான அறிக்கையில் சட்டத்துறைக்கு அனுப்புவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியுள்ளது. அவர்களிடமிருந்து அறிக்கை வந்த பிறகு ஆயுஸ் அமைச்சகத்திற்கு சட்டத்துறை மூலமாக விளக்கம் அனுப்பப்படும்.

சிறுவர் சிறுத்தைப் பள்ளியில் தவறு செய்து சிறையில் உள்ள சிறுவர்களுக்கு நல்வழிப்படுத்துவதற்காக பல்வேறு ஆசிரியர்களை கொண்டு பல்வேறு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தந்தை பெரியார் பிறந்த திராவிட மண், தமிழ்நாடு என்பதுதான் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கூறிவரும் ஆளுநர், தமிழகம் என்று கூறிய பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பின் காரணத்தினால் தற்போது தமிழ்நாடு என்ற வார்த்தையைதான் ஆளுநர் பயன்படுத்தி வருகிறார். இது எங்களுக்கு கிடைத்த வெற்றி.

இந்த ஆண்டு காரைக்குடி பகுதிக்கு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதலமைச்சரிடம் எடுத்து கூறி புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சட்டக் கல்லூரி தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *