செய்திகள்

நீட் தேர்வு முறைகேடு: ஜார்க்கண்ட் மாநிலத்தில் முக்கிய நபரை கைது செய்தது சிபிஐ

Makkal Kural Official

புதுடெல்லி, ஜூலை 4–

‘நீட்’ தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் அமன் சிங் என்பவரை சிபிஐ கைது செய்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் குஜராத், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. குஜராத், பிகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் நீட் முறைகேடு தொடர்புடைய நபர்களை சிபிஐ கைது செய்துள்ளது.

இந்நிலையில், தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் போராட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளின் அழுத்தமும் இதில் உள்ளது. என்டிஏ-வை கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த நிலையில், ‘நீட்’ தேர்வு முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் அமன் சிங் என்பவரை ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் வைத்து சிபிஐ கைது செய்துள்ளது முன்னதாக, கடந்த வாரம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹஸாரிபாக் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி ஒன்றின் முதல்வர் இஷான் உல் ஹக் மற்றும் துணை முதல்வர் இம்தியாஸ் அலாம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் இஷான் உல் ஹக் அந்த நகரின் நீட் – யுஜி 2024 தேர்வுக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர். அதே போல இது தொடர்பாக பிகாரின் பாட்னாவில் மனீஷ் பிரகாஷ் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நீட் தேர்வுக்கு முந்தைய நாள் இவர்கள் மாணவர்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்கி அவர்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைகள் வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மனீஷ் மாணவர்களை தனது காரில் அழைத்து சென்றுள்ளார். அசுதோஷ் மாணவர்களுக்கு வீட்டில் அடைக்கலம் தந்துள்ளார்.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை, ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் சேர்த்து வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதோடு நீட் விடைத்தாள் நகலை என்டிஏ தர மறுப்பதாக புகார் தெரிவித்து தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணையையும் உச்சநீதிமன்றம் வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

உச்சநீதிமன்ற கோடைக்கால விடுமுறை முடிவடைந்து 8ம் தேதி மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், நீட் முறைகேடு வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடத்தவுள்ளதுகடந்த மாதம் கருணை அடிப்படையில் 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு மீண்டும் மறு தேர்வு நடத்தப்பட்டது. அதில் 813 பேர் பங்கேற்றனர். மீதமுள்ள தேர்வர்கள் கருணை மதிப்பெண்களுக்கு முன்பு தாங்கள் பெற்றிருந்த மதிப்பெண்ணையே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொண்டனர்.

இந்த நிலையில், மறுதேர்வு முடிவுகளை என்டிஏ கடந்த 1–ந்தேதி வெளியிட்டது. அத்துடன் கடந்த மே 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வின் திருத்தப்பட்ட தரவரிசைப் பட்டியலும் வெளியிடப்பட்டது. முந்தைய முடிவுகளில் கருணை மதிப்பெண்களுடன் 6 மாணவர்கள் முழு மதிப்பெண்ணான 720-ஐ பெற்றிருந்தனர். அதில் 5 மாணவர்கள் மட்டுமே மறுதேர்வு எழுதினர். மற்றொரு மாணவர் கருணை மதிப்பெண்ணுக்கு முந்தைய மதிப்பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். மறுதேர்வெழுதிய 5 மாணவர்களில் யாரும் முழு மதிப்பெண்ணை மீண்டும் பெறவில்லை. அதேசமயம், 5 மாணவர்களின் புதிய மதிப்பெண்கள் குறித்தும் என்டிஏ எந்தத் தகவலும் வெளியிடவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *