செய்திகள்

‘நீட்’ தேர்வு முறைகேடுகளை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை

Makkal Kural Official

சென்னை, ஜூன் 24-–

நீட் தேர்வு முறைகேடுகளை மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜூன் 4-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்தன. இத்தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு முதல் குரல் கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரை தொடர்ந்து கல்வியாளர்களும், மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர். நீட் தேர்வு மோசடியான தேர்வு என ஆரம்பத்தி லிருந்து சொல்லிக் கொண்டிருந்ததை இன்று வடமாநிலத்தவரும் உணர ஆரம்பித்துள்ளனர்.

2017-ம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் நீட் தேர்வு முறை இருந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2016-ம் ஆண்டு இறுதியிலேயே நீட் தேர்விற்கு எதிரான கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார்.

2017-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்காலத்தில் இத்தேர்வு முறை நடைமுறைக்கு வந்தது. நீட் தேர்வு முறை நடைமுறைக்கு வந்ததில் இருந்து நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரைகளை சட்ட மசோதாவாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.

இந்தநிலையில், நீட் தேர்வில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும், குளறுபடிகளும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது.

2021-ம் ஆண்டு நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண் 2 பேர், 2022-ம் ஆண்டு யாருமே முழுமையான மதிப்பெண் பெறவில்லை. 2023-ம் ஆண்டு 2 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றனர்.

இந்த ஆண்டு 2024-ல் 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் குழப்பத்திற்கான முக்கிய காரணம், 720-க்கு 720 முழு மதிப்பெண்ணாக 67 பேர் பெற்றதும், அதன் தொடர்ச்சியாக 719, 718 போன்ற மதிப்பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

மொத்தம் 180 கேள்விகள் ஒவ்வொரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், மாணவர் ஒரு கேள்வி விட்டு விட்டால் அவருக்கு 716 மதிப்பெண்கள் கிடைக்கும். அதுவே அனைத்து கேள்விகளுக்கு பதிலளித்து அதில் ஒன்று தவறாக பதில் அளிக்கப்பட்டால் அந்த மாணவருக்கு 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும், காரணம் ஒரு கேள்வி தவறானதாக பதில் அளித்தற்கு அபராதமாக 4 மதிப்பெண் மற்றும் கூடுதலாக அபராதமாக 1 மதிப்பெண் குறைக்கப்பட்டு, 715 மதிப்பெண்கள் தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இத்தகைய வரைமுறையில் உள்ள இந்த தேர்வில் இந்த ஆண்டு மாணவர்கள் 719, 718 போன்ற மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதற்கு தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண் வழங்கியதாக குழப்பியது.

23 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில் குறிப்பிட்ட 1,563 மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் கொடுத்தது ஏன்? இந்த கருணை மதிப்பெண் யார் யாருக்கு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது? எந்தெந்த தேர்வு மையங்களில் காலதாமதம் ஏற்பட்டது? ஏன் மற்ற மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கவில்லை? போன்ற கேள்விகளுக்கு தேசிய தேர்வு முகமையிடம் பதில் இல்லை.

நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடு நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்தது.

தற்போது தேர்வில் முறைகேடு நடை பெற்றுள்ளதை மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை தலைவராக உள்ள சுபோத்குமாரை திடீரென்று மத்திய அரசு நீக்கி நீட் தேர்வு குழப்பங்களையும், குளறுபடிகளையும் மெய்ப்பித்துள்ளது.

மத்திய அரசின் குழப்பங்களின் தொடர்ச்சியாக 23-ந்தேதி (நேற்று) நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைத்துள்ளது. நாட்டில் 297 நகரங்களில் நடைபெற இருந்த தேர்வில் 2,28,757 மாணவர்கள் கலந்து கொள்ள இருந்த நிலையில் சரியான திட்டமிடல் இல்லாமல் மாணவர்களை அலைக்கழிக்கும் நிலையில் மத்திய அரசின் போக்கு உள்ளது. மத்திய அரசின் மெத்தனப் போக்கால் இன்னும் எத்தனை குழப்பங்களும், குளறுபடிகளும் நடைபெறும் என்று கணிக்க முடியாத சூழல் உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *