ராஜஸ்தான் மாணவன் முதலிடம்
புதுடெல்லி, ஜூன் 14–
நாடு முழுவதும் கடந்த மே 4ம் தேதி நடைபெற்ற ‘நீட்’ தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. தமிழகத்தில் 1.35 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய நிலையில், அவர்களில் 76,181 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான ‘நீட் யூஜி 2025’ தேர்வுக்கு 22 லட்சத்து 76 ஆயிரத்து 69 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 22 லட்சத்து 9 ஆயிரத்து 318 பேர் தேர்வு எழுதினர். 66,751 பேர் தேர்வு எழுதவில்லை.
557 நகரங்களில் மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் மொழியில் 26,580 மாணவர்கள் நீட் தேர்வை எழுதினார்கள்.
இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது. மாணவர்கள் இந்த விடைக்குறிப்பின் மீது தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் முடிவடைந்தது. மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு இறுதி விடைக்குறிப்பு தயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ‘நீட் யூஜி 2025’ தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை தற்போது இணையதளத்தில் இன்று பகல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் 1.35 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 76,181 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
ராஜஸ்தான் மாணவர் முதலிடம்
ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ்குமார் முதலிடம் பிடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த சூரிய நாராயணன் 99.99 சதவீத மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் 27வது இடத்தை பிடித்துள்ளார். தமிழக மாணவர் அபிநீத் நாகராஜ் தேசிய அளவில் 50வது இடம் பிடித்துள்ளார்.
தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளநிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவிகித இடங்களுக்கு (எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உட்பட) மருத்துவ கலந்தாய்வு குழு கலந்தாய்வை நடத்த உள்ளது. மீதமுள்ள 85 சதவிகித இடங்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் கலந்தாய்வை நடத்துகிறார்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு நீட் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும். அதன்படி 2024ம் ஆண்டில் பொதுப் பிரிவு போட்டியாளர்களுக்கான தகுதி 50% ஆகவும், ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளுக்கான தகுதி 40% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.