கனமழை, மின் தடையால் மாணவர்கள் பாதிப்பு :
சென்னை, மே.18-
கனமழை, மின்தடையால் இருளில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை ஐகோர்ட். தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடை விதித்துள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், மாணவிகள் எஸ்.சாய் பிரியா, எம்.பி. ஆர்த்திகா, நவீன்குமார் ராஜசேகர் உள்பட 13 மாணவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்பில் சேருவதற்காக ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த 4-ந்தேதி நாடு முழுவதும் நடந்தது. நாங்கள் ஆவடியில் உள்ள ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேர்வை எழுதினோம். தேர்வு விதிகளின்படி காலை 11 மணிக்கு பள்ளிக்குள் சென்று விட்டோம். பிற்பகல் 2 மணியில் இருந்து 5 மணி வரை தேர்வு நடந்தது.
அன்று சுமார் 2.45 மணிக்கு மேகம் கருத்து, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால், மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஜெனரேட்டர், இன்வெட்டர் வசதிகள் அந்த பள்ளியில் இல்லை. இதனால், 3 மணி முதல் 4.15 மணி வரை குறைவான வெளிச்சத்தில் தேர்வு எழுதினோம். அதுமட்டுமல்ல மழை நீர் வகுப்பறைக்குள் புகுந்து தேர்வு எழுத முடியாத வகையில் மேலும் சிரமத்தை தந்தது.
எங்களால் முடிந்த அளவுக்கு தேர்வை எழுதினோம். அதேநேரம், 3 மணி நேரம் போதாது, எங்களுக்கு கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆனால், தேர்வு மைய அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை. கூடுதல் நேரத்தையும் வழங்கவில்லை. இதனால், தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை.தேர்வு மையத்துக்கு வெளியில் இருந்த பெற்றோர்களிடம் மாணவர்கள் இதுகுறித்து கூறியதால், தேர்வு மையத்துக்கு வெளியில் போராட்டம் நடந்தது.
பின்னர், அன்றைய தினமே தேசிய தேர்வு முகமைக்கு ‘இ-மெயில்’ மூலம் புகார் மனு அனுப்பி, மறு தேர்வு நடத்த வேண்டும் கோரிக்கை விடுத்தோம்.
இதுவரை எந்த பதிலும் வரவில்லை. ‘நீட்’ என்பது மருத்துவ படிப்புக்கான தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வு ஆகும். இதுபோல சிறு இடையூறுகளினால், தேர்வு எழுத முடியாமல், எங்களை போன்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மனவேதனையில் உள்ளோம். ‘நீட்’ தேர்வு முடிவு அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, எங்களது கோரிக்கையின் அடிப்படையில், எங்களுக்கு ‘நீட்’ தேர்வை மீண்டும் நடத்தும்படி மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உத்தரவிட வேண்டும். அதுவரை ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் சாய்கிருஷ்ணா, இஸ்மாயில் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன் ஆஜராகி, தேர்வு நாளில் மின் தடை ஏற்பட்டு மாணவர்களுக்கு தேர்வு எழுத சிரமம் ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரித்து, மறு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
முடிவுகளை வெளியிட தடை
இதையடுத்து, இந்த வழக்கிற்கு வருகிற 2-ந்தேதிக்குள் மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை இயக்குனர் ஜெனரல், தமிழ்நாடு பொது மருத்துவ சேவை இயக்குனர் ஆகியோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ‘நீட்’ தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்கிறேன் என்று உத்தரவிட்டார்.
ஏற்கனவே, இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த மத்திய பிரதேச மாநில ஐகோர்ட்டு, ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட தடை விதித்து விசாரணையை ஜூன் 30-ந்தேதிக்கு தள்ளிவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.