சென்னை, மே 4–
நீட் தேர்வு பயத்தில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மாணவி கயல்விழி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, ஏப்ரல் 3-ஆம் தேதி எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி உள்பட கடந்த 2 மாதத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் மதுராந்தகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் கயல்விழி. இவர் நீட் தேர்வுக்கு பயற்சி பெற்று வந்தார். ஏற்கெனவே நீட் தேர்வு எழுதியும் வெற்றி பெறவில்லையாம். இந்த நிலையில், தற்போது நடைபெறும் நீட் தேர்வுக்காக மீண்டும் பயிற்சி பெற்று வந்தார். தமிழகம் முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதில், கயல்விழி தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கான நுழைவு சீட்டையும் பதிவிறக்கம் செய்திருந்தார். இவருக்கு தாம்பரத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று கயல்விழி இரவு தூங்கச் சென்றார். இன்று அதிகாலை அவரை பெற்றோர் எழுப்ப சென்றனர். அங்கு, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நீட் தேர்வு அச்சத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கடந்த இரு மாதங்களில் தமிழகத்தில் 5 பேர் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளனர்;
ராஜஸ்தானில்
மாணவி தற்கொலை
இந்த நிலையில், ராஜஸ்தானின் கோட்டாவில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேர்வு அச்சத்தால் மாணவி உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிந்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களின் மையப்புள்ளியாக விளங்கும் கோட்டா நகரில் தேர்வுக்கான பயிற்சி பெறும் மாணவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 14 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.