செய்திகள்

நீட் தேர்வு பயம்: அரியலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை

அரியலூர், ஜூலை 16–

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வு பாடங்கள் கடினமாக உள்ளதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு அரியலூர் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

அரியலூர் ரெயில் நிலையம் அருகே வசித்து வருபவர் நடராஜன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா. இவர்களுக்கு நிஷாந்தினி (வயது 18) என்ற மகளும், நிவாஸ் (16) என்ற மகனும் உள்ளனர். இதில் நிஷாந்தினி அருகிலுள்ள ஒரு தனியார் பெண்கள் மெட்ரிக் பள்ளியில் படித்து கடந்தாண்டு நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வில் 600 க்கு 539 மதிப்பெண்கள் பெற்றார். சின்ன வயதில் இருந்தே டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் மிதந்தார்.

இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தயாராகி வந்துள்ளார். இதை அடுத்து கடந்த 2 மாதமாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் நீட் பயிற்சி மையத்தில் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.

நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்காக தயாராகி வந்த நிஷாந்தினி தோல்வி பயம் காரணமாக இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் தற்கொலை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து அரியலூர் டிஎஸ்பி கூறுகையில், மாணவி நிஷாந்தி தனது குடும்பத்தினற்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் தனது அப்பா அரியலூரிலே வந்து இருக்க வேண்டும். நீட் தேர்வு பாடங்கள் கடினமாக உள்ளது. வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்கள் கடினமாக உள்ளதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக எழுதி வைத்துள்ளாக கூறினார்.

நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 7 ஆம் தேதி ஓசூர் அரசனட்டி பகுதியை சேர்ந்த கோபி என்பவரது 18 வயது மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில் அ இம்முறையும் தோல்வியடைவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை முடிவை தேடிச் செல்வது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.