சென்னை, மே 4–
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு தொடங்கியது. தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவர்கள் கடும் சோதனைக்கு பின்னர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் மாணவ-மாணவிகள் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மேற்சொன்ன படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது.
22 லட்சம் பேர்
அதன்படி 2025–-26–-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கியது. 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வில் நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை நீட் தேர்வு எழுத இருக்கின்றனர். சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதுகின்றனர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் (ஹால்டிக்கெட்டில்) தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தன.
கடும் சோதனை
அந்தவகையில் தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.30 மணி முதல் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கடுமையான சோதனைக்கு பின்னரே மாணவர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வழக்கம்போல் முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி ஆகியவற்றை அணிந்து வந்தவர்கள் அவற்றை கழற்றி தங்களது பெற்றோர்களிடம் கொடுத்துச் சென்றனர். செல்போன், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்கள் தேர்வு மையத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டனர். கடும் வெயிலில் அவர்கள் மிகவும் அவதிப்பட்டனர். தேர்வு மையத்தின் சார்பில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படாததால் பெற்றோர்கள் அவதி அடைந்தனர்.
மாணவிக்கு ஆடை வாங்கிக்
கொடுத்த பெண் காவலர்
திருப்பூர் திருமுருகன்பூண்டியில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு மையத்திற்கு நீட் தேர்வு எழுத வந்த மாணவி அணிந்திருந்த ஆடையில் அதிக பட்டன்கள் இருந்ததால் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்துள்ளார். தேர்வு எழுத முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் அந்த மாணவி அங்கேயே கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் அந்த மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று வேறு உடை வாங்கிக் கொடுத்து, மீண்டும் அழைத்து வந்து நீட் தேர்வு மையத்திற்கு கொண்டு வந்து விட்டார். இதையடுத்து, அந்த மாணவி, நீட் தேர்வு எழுத, தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே நீட் உட்பட தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதற்காக பொதுத் தேர்வு நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு சட்டம்-2024 கடந்தாண்டு (2024) ஜூனில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. எனவே, நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு அல்லது விடைத்தாளை மாற்றியமைத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.