செய்திகள்

நீட் தேர்வு சரியாக எழுதாததால் விரக்தி: வேலூர் மாணவி தூக்கிட்டு தற்கொலை

வேலூர், செப். 15–

நீட் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் வராது என்ற விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த 4 நாள்களில் நீட் தேர்வு பயத்தால் மேட்டூர் தனுஷ் என்ற மாணவரும், அரியலூர் கனிமொழி என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில் மூன்றாவதாக ஒரு சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தலையாரம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி திருநாவுக்கரசு, ருக்மணி. இவர்களது மகள் சௌந்தர்யா (17). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், நீட் தேர்வில் சரியாக எழுதவில்லை. இதனால் மதிப்பெண் குறையும் என்று தவறான எண்ணத்தால் மாணவி சௌந்தர்யா கடந்த சில நாட்களாக மிகுந்த விரக்தி மற்றும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது புடவையின் மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட் தேர்வு எழுதிய மாணவ/மாணவிகள் மனரீதியிலான கவுன்சிலிங் பெற ’104’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *