செய்திகள்

‘நீட்’ தேர்வுக்கான தகுதி பாடத் திட்டங்கள் மாற்றியமைப்பு: தேசிய மருத்துவ கவுன்சில்

டெல்லி, நவ. 23–

12-ம் வகுப்பில் தேர்ச்சியடைந்த பிறகு, கூடுதல் பாடங்களாக ஆங்கிலத்துடன் சேர்த்து இயற்பியல், வேதியியல், உயிரியல் படித்த மாணவர்களும் ‘நீட்’ இளநிலை தேர்வுகளில் பங்கேற்கலாம் என தேசிய மருத்துவ கவுன்சில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்பின் மாணவர் சேர்க்கை மற்றும் தேர்வு தொடர்பான விதிமுறைகளில், எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், 11,12-ஆம் வகுப்புகளில் ஆங்கிலத்துடன் சேர்த்து இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பத்தை 2 ஆண்டுகளுக்குப் பள்ளிகளில் சேர்ந்து படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.

பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு, இந்த பாடங்களைக் கூடுதலாக பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த விதியை ரத்து செய்து 2018-இல் தீர்ப்பளித்தது.

இது தொடர்பான சட்ட விதிமுறைகள் முறையாக வகுக்கப்படாததால் குறிப்பிட்ட தகுதிகளுடன் மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பிய மாணவர்களுக்கு சிக்கல் நீடித்தது. மேலும், மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

பாட விதிகளில் திருத்தம்

இந்த சூழலில் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பளிக்கும் விதமாக, விதிகளை மாற்றியமைக்க தேசிய மருத்துவ கவுன்சிலின் கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன்படி ‘நீட்’ இளநிலை தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான தகுதி பாட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையில், பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சியடைந்த பிறகு, கூடுதல் பாடங்களாக ஆங்கிலத்துடன் சேர்த்து இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரிதொழில்நுட்பத்தை படித்த மாணவர்களும் ‘நீட்’ இளநிலை தேர்வுகளில் பங்கேற்கலாம் என விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விதிகளுக்காக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட மாணவர்களுக்கு பின்தேதியிட்டு இந்த புதிய விதி பொருந்தும். புதிய விதிகள் வரும் நீட் தேர்வு முதலே நடைமுறைப்படுத்தப்படும். இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றங்களில் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் தேசிய மருத்துவ கவுன்சில் வாபஸ் பெற்றுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *