செய்திகள்

நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று விழுப்புரம் மாணவர் சாதனை

Makkal Kural Official

விழுப்புரம், ஜூன் 6–-

2024-– 25-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் 13 மொழிகளில் கடந்த மே மாதம் 5-ந்தேதி நடந்தது. இந்த தேர்வு முடிவு நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 36 மாணவர்கள், 7 லட்சத்து 69 ஆயிரத்து 222 மாணவிகள், 10 திருநங்கைகள் என 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 மாணவ-மாணவிகள் உள்பட 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

அந்த வகையில், விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன்- – விமலாதேவி தம்பதியின் மகனான ரஜநீஷ் என்ற மாணவர், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்ததோடு விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்ந்துள்ளார். இவர் நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் இண்டர்நேஷனல் பள்ளியில் 11, 12-ம் வகுப்பு படித்தார். அதே பள்ளியில் நீட் தேர்விற்கான சிறப்பு வகுப்புகளில் பயிற்சி பெற்று வந்த நிலையில் தற்போது நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார்.

இதுபற்றி மாணவர் ரஜநீஷ் கூறுகையில், மருத்துவத்தில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவாகும். தற்போது அதற்கான பலன் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆகவே நீட் தேர்வில் சாதிக்க நினைப்பவர்கள், கடின உழைப்புடனும், தன்னம்பிக்கையுடனும் படித்தால் எளிதில் சாதிக்கலாம். குறிப்பாக ஆன்லைன் தோ்வு (மாக் டெஸ்ட்) அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என்றார்.

ரஜநீஷின் தந்தை பிரபாகரன், திருச்சியில் ரெயில்வே அதிகாரியாக பணியாற்றி வருகிறார். தாய் விமலாதேவி விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கணித துறைத்தலைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *