நெல்லை, ஜூன்.15-
நீட் நுழைவு தேர்வில் பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரிய நாராயணன் 720-க்கு 665 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 27-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார்.
நாடு முழுவதும் 22 லட்சத்து 9 ஆயிரத்து 318 பேர் எழுதிய நீட் தேர்வு முடிவு நேற்று வெளியானது. தேர்வு எழுதியவர்களில் 5 லட்சத்து 14 ஆயிரத்து 63 மாணவர்கள், 7 லட்சத்து 22 ஆயிரத்து 462 மாணவிகள், 6 திருநங்கைகள் என மொத்தம் 12 லட்சத்து 36 ஆயிரத்து 531 பேர் தகுதி பெற்று இருக்கின்றனர்.
தேர்வு முடிவில் தகுதி பெற்றவர் களில், அதிக மதிப்பெண் எடுத்த முதல் 100 பேர் பட்டியலை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
அதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ்குமார் 686 மதிப்பெண் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக உத்கார்ஷ் அவத்யா (மத்திய பிரதேசம்), கிரிஷாங் ஜோஷி (மராட்டியம்), மிரினல் கிஷோர் ஜா (டெல்லி), அவிகா அகர்வால் (டெல்லி) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.
இந்த முதல் 100 பேர் பட்டியலில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 6 பேர் இடம் பெற்று சாதனை படைத்திருக்கின்றனர். அதில் 27-வது இடத்தில் எஸ்.சூர்ய நாராயணன், 50-வது இடத்தில் அபினீத் நாகராஜ், 61-வது இடத்தில் ஜி.எஸ்.புகழேந்தி, 63-வது இடத்தில் கே.எஸ்.ஹூருதிக் விஜயராஜா, 78-வது இடத்தில் ஏ.ஜே.ராகேஷ், 88-வது இடத்தில் ஜி.பிரஜான் ஸ்ரீவாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டில் 100 பேர் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 10 பேர் இடம்பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், அதிக மதிப்பெண் பெற்ற முதல் 100 பேர் பட்டியலில் மாணவர்களே உள்ளனர். அதாவது, முதல் 100 பேரில் 85 மாணவர்களும், 15 மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர்.
முதல் மதிப்பெண் 686 ஆகவும், பொதுப்பிரிவினருக்கான இறுதி தகுதி மதிப்பெண் 144 ஆகவும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கான இறுதி தகுதி மதிப்பெண் 113 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூரிய நாராயணன் பேட்டி
இதில் நெல்லை மாணவர் சூரிய நாராயணன் 720-க்கு 665 மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 27-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தார். இவர் மழலையர் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளிக்கூடத்தில் படித்துள்ளார். மாணவன் சூரிய நாராயணன் பாளையங்கோட்டை மகாராஜநகரில் வசித்து வருகிறார். இவரது தந்தை சங்கரசுப்பிரமணியன் நெல்லை ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக உள்ளார். தாயார் சுப்புலட்சுமி. அண்ணன் முத்தையா சிவவேலன்.
இந்த மாணவர் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்களை பெற்றிருந்தார். மேலும், ஜேஇஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
சாதனை படைத்தது குறித்து சூரிய நாராயணன் கூறியதாவது:-
‘நீட்’ தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க எனது ஆசிரியர்கள், பெற்றோர் ஊக்கமளித்தனர். எப்போதும் படிப்பு சிந்தனை மட்டுமே உண்டு. ‘நீட்’ தேர்வு தொடர்பான பயம், சோர்வு தேவை இல்லை. இலக்குடன் படித்தால் யாரும் தேர்ச்சி பெறலாம். டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படித்து நியூரோ அல்லது கார்டியாலஜி துறையில் மருத்துவ நிபுணராகி ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது நோக்கமாக உள்ளது என்றார்.
வித்யா மந்திர் பள்ளித் தாளாளர் புஷ்பலதா பூரணன், முதன்மை முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர் சூரிய நாராயணனை பாராட்டினார்கள்.