டெல்லி, ஜூலை 4–
மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த டெல்லி எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் 4 பேரை அதிரடியாக டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் மருத்துவம் பயில ‘நீட்’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை சார்பில் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அந்த வகையில் ‘நீட்’ தேர்வு முறைகேடு தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
4 மாணவர்கள் கைது
இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் நரேஷ் பிஷ்ரோய், முதலாமாண்டு மாணவர் சஞ்சு யாதவ், மகாவீர் மற்றும் ஜிதேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நரேஷ் பிஷ்ரோய் மற்றும் சஞ்சு யாதவ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாவீர், ஜிதேந்திரா ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நீட் தேர்வுக்கான இந்த ஆள்மாறாட்ட கும்பல் நரேஷ் பிஷ்ரோய் தலைமையில் செயல்பட்டு வந்துள்ளது. இவர் ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு பதிலாக முதலாமாண்டு பயிலும் மாணவர்களை தேர்வில் பங்கேற்க வைத்து ஆள்மாறாட்டம் செய்துள்ளார்.
இதற்காக இந்த கும்பல் ஒருவருக்கு ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இத்தகைய மோசடியில் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் இவர்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைதானவர்களிடம் இரந்து லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.