சென்னை, மே 30–
“நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு, அது ரொம்ப பெருசு” என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது, காசுக்காக ஓட்டுப்போடும் கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமிழகம், புதுச்சேரியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள், சமீபத்தில் வெளியாகின. இந்த தேர்வுகளில் சட்டசபை தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டினார்.
இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டலில் விஜய் கல்வி விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் என 2000க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 88 சட்டசபை தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கி விஜய் பாராட்டினார்.
இந்த விருது வழங்கும் விழாவின் தொடக்கத்தில் விஜய் பேசியதாவது:– படிப்பில் சாதிக்கணும் என்பது முக்கியம்தான். அதுக்குன்னு ஒரே ஒரு படிப்புல மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிச்சு அதுல மட்டும் சாதிக்கணும்னு அழுத்தம் ஏத்திக்க தேவை இல்லை. நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு. அதுல நீங்க சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கு.
ஜனநாயகத்தோடு இருங்க. ஜனநாயகவாதியா இருந்தாதான் சுதந்திரமா இருக்க முடியும். உங்க வீட்ல இருக்க எல்லாரிடமும் அவங்க ஜனநாயகக் கடமையை சரியா செய்ய சொல்லுங்க. ஜனநாயக கடமையை சரியாக செய்வது ரொம்ப எளிமையான விஷயம்தான். அதாவது நல்லவங்க, நேர்மையானவங்க, இதுவரைக்கும் ஊழல் பண்ணாத நல்லவங்கள நம்பிக்கையானவங்களை தேர்வு செய்ய சொல்லுங்க.
ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே நிகழ்வுல, ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது, அந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்காதீங்கன்னு பெற்றோரிடம் சொல்லுங்க என்று சொல்லியிருந்தேன். அதை அப்படியே இப்பவும் பின்பற்றுங்கள். ஆனா, நீங்களே பாருங்க. அடுத்த வருஷம் வண்டி வண்டியா பணத்தை கொண்டு வந்து கொட்ட போறாங்க. அது எல்லாமே உங்கக்கிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம். நீங்க என்ன பண்ண போறீங்க. என்ன பண்ணணும்னு உங்களுக்கு சரியா தெரியும்.
பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள். உங்க குழந்தைகள் மேல எந்த அழுத்தத்தையும் போடாதீங்க. அவங்களுக்கு என்ன பிடிக்குதுன்னு தெரிஞ்சு வழிநடத்துங்க. எத்தனை தடைகள் வந்தாலும் அவரவருக்கு பிடித்த துறைகளில் நிச்சயம் சாதித்து காட்டுவார்கள். சாதி மதத்தை வைத்து பிரிவினையை வளர்க்கிற சிந்தனை பக்கம் போய் விடாதீர்கள். மாணவர்களிடம் சாதி, மத சிந்தனை கூடாது. விவசாயிகள் என்ன சாதி மதம் பார்த்தா விதைக்கிறாங்க? தொழிலாளர்கள் சாதி மதம் பார்த்தா தொழில் செய்கிறார்கள். இயற்கையோட வெயில் மழைல சாதி இருக்கா?. போதைப்பொருள் போல சாதி மதத்தையும் தூரமாக தள்ளிவைக்க வேண்டும்.
இப்போது பெரியாருக்கே சாதி சாயம் பூச முற்படுகிறார்கள். ஒன்றிய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் பெரியாருக்கு சாதி சாயம் பூசுவது போல கேள்வி கேட்டுள்ளார்கள். இந்த உலகில் எது சரி எது தவறு என யோசித்தாலே குழப்பம் இல்லாத வாழ்க்கையை வாழலாம். எதுக்கும் ரொம்ப எமோஷனல் ஆகாதீங்க. தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் சிந்தனையோடு இருங்கள், அதுதான் ஏஐ உலகத்தை எதிர்கொள்ள ஒரே வழி.
இவ்வாறு அவர் பேசினார்.
![]()





