சிறுகதை

நீங்க அறிவாளியா? புத்திசாலியா? | ராஜா செல்லமுத்து

அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மேலாளர் தன் மூக்குக்கண்ணாடியை கொஞ்சம் மேலே ஏற்றி விட்டு கம்பெனியின் லாப நட்டக் கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

‘‘ம்ம்.. இந்த வருசம் ரொம்ப லாபம் கெடச்சிருக்கு. என்ன.. செலவும் முன்னைவிட அதிகமாத்தான் ஆகி இருந்திருக்கு.. எல்லாம் நம்மோட உழைப்பு..’’ என்று தனக்குத்தானே தட்டிக்கொடுத்துக்கொண்டு சந்தோசத்தில் மூழ்கிக்கிடந்தார்.

அப்போது அலுவலகத்தைச் சுற்றி நோட்டமிட்டார்.

‘‘பெருமாள்.. இங்க வாங்க..’’ என்று குரல் தாழ்த்தி விரல் உயர்த்திக் கூப்பிட்டார்

‘‘ஐயய்யோ.. இவர் எதுக்கு நம்மள கூப்பிடுறாரு.. ?’’ என்றபடியே மேலாளரின் அருகே வந்தார்.

‘‘எனக்கு.. சமையல்ன்னா.. ரொம்ப பிடிக்கும்.. ஆனா..! சமைக்கத் தெரியாது வீட்டுல வொய்ப் வெளியூர் போயிட்டாங்க.. நான் தான் இன்னைக்கு சமையல். என் கூட இன்னைக்கு சாப்பிடுங்க..’’ என்று புன்சிரிப்போடு மேலாளர் சொன்னார்.

‘‘இல்ல சார்.. நானும் வீட்டுல இருந்து சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்..’’ என்றார் பெருமாள்.

‘‘இருக்கட்டும் பெருமாள் அத வீட்டுக்கு கொண்டு போங்க.. இல்ல யார்கிட்டயாவது குடுத்திருங்க.. இன்னைக்கு மதியம் நீங்க.. என் கூடதான் சாப்பிடுறீங்க..’’ என்று பிடிவாதம் பிடித்தார் மேலாளர்.

தலையைச் சொறிந்துகொண்ட பெருமாள் வேறுவழியில்லாமல் ஒத்துக்கொண்டார்.

‘‘என்ன பெருமாள்.. மேலிடத்தில் இருந்து உங்களுக்கு சாப்பாடு போல..

ம்.. புகுந்து விளையாடுங்க..’’ என்று ஒரு நக்கல் சிரிப்புடன் பேசினார் உடன் பணிபுரியும் ஓர் ஊழியர்.

‘‘போய்யா.. நீ.. வேற ; நானே எம் பொண்டாட்டி ஆசையா மட்டன் குழம்பு வச்சுக்குடுத்து விட்டுருந்தா.. அதச்சாப்பிட முடியலேன்னு வருத்தத்தில இருக்கேன்.. இதுல பெரிய இடம்.. சின்ன இடம்னு.. நீ சொல்லிட்டு இருக்க..

என்று கோபத்தை கக்கினார் பெருமாள்.

மதியம் லஞ்ச் டைமில் டைனிங்க் ஹாலில்…

மேலாளர் சமைத்துக் கொண்டு வந்த சாப்பாட்டைத் தட்டில் போட்டு பெருமாளுக்கு கொடுத்தார்.

‘‘சாப்பிடுங்க.. பெருமாள்..’’ என்று சாப்பாட்டுத் தட்டை அவர் முன்னால் தள்ளி வைக்க வேண்டா வெறுப்பாகச் சாப்பிட ஆரம்பித்தார் பெருமாள்.

தட்டிலிருந்து ஒருவாய் சோற்றை எடுத்து வைத்த பெருமாள்

‘த்தூ..’’ எனத் துப்பிவிட்டார்

‘‘என்ன.. இது..? இதெல்லாம் சாப்பாடா..? நீங்கெல்லாம் ஏன் சமைக்கிறீங்க..? ஹோட்டல்ல வாங்கிச் சாப்பிட வேண்டியது தானே..! இதெல்லாம ஒரு சமையலா..?’’ என்று மேலாளர் மீது எரிந்து விழ மேலாளருக்குக் கடுங்கோபம் வந்தது.

‘‘ஏய்யா.. நான் ஒரு ஆம்பளை கஷ்டப்பட்டு சமச்சு கொண்டு வந்திருக்கேன்.. நல்லா சாப்பிடாமக்கூட என் முன்னாடியே.. என்னைய குறை சொல்றியா..?’’ என்ற மேலாளர் பெருமாளை திட்டித்தீர்த்தார்.

‘‘இல்லங்க.. உண்மைய சொன்னா தப்பா..?’’ என்று பெருமாள் பேச

‘‘எது நீ.. சொல்றது உண்மையா..? என்னோட சமையல நிறையப்பேரு.. நல்லா இருக்குன்னு சொல்றாங்க.. நீ தான்.. இப்பிடி சொல்லிட்டு இருக்க..’’ என்றார் மேலாளர். அதன்பிறகு பெருமாளுடன் அவ்வளவாகப் பேசவில்லை.

நாட்கள் நகர்ந்தன…

ஒரு நாள் பெருமாளுடன் வேலை செய்து கொண்டிருக்கும் சேவற்கொடியான் அருகில் வந்தார்.

‘‘என்ன.. பெருமாள் இப்பவெல்லாம் நீங்க மேனேஜர் கூட சரியா பேசுறது இல்ல.. போல.. என்ன காரணம்னு நீங்க சொல்லாமலே எனக்கு தெரியும்..’’ என்ற சேவற்கொடியான் ஏற இறங்கப் பெருமாளை பார்த்துவிட்டு பிறகு மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தார்.

‘‘இங்க பாரு.. பெருமாள் நீங்க அறிவாளியா..? புத்திசாலியா..?’’ என்று ஒரு புதிரைப் போட்டார்.

‘‘தெரியலையே..!’’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார்.

‘‘நீங்க.. அறிவாளி.. பெருமாள் . இதுல என்ன சந்தேகம்.. ஒங்களோட அறிவால தான் இப்ப சம்பாதிச்சிட்டு இருக்கீங்க.. அதுல எந்தச் சந்தேகமுமில்ல..

அறிவாளிக்கு இங்க வேலை இல்ல பெருமாள்.. நீங்க.. என்ன தான் அறிவாளியா இருந்தாலும் அந்த அறிவ வச்சு இங்க எதுவும் செய்ய முடியாது பெருமாள்..

நீங்க புத்திசாலியா இருந்தா மட்டும் தான் இங்க நிறைய சாதிக்க முடியும்..’’ என்றார் சேவற்கொடியான்

‘‘எப்படி?..’’ என்றார் பெருமாள்.

உங்களுக்கு புரியுற மாதிரி ஒரு கதை சொல்றேன். கேளுங்க.. என்ற சேவற்கொடியான் கதை சொல்ல ஆரம்பித்தார்

‘‘ஒரு காட்டுல.. இருந்த பயங்கரமான சிங்கம் ஒன்னுக்கு வாய் துர்நாற்றம் எடுக்க ஆரம்பிருச்சுருக்கு. இத யார்கிட்டயாவது கேக்கணும்னு நெனச்ச சிங்கம் அந்த வழியா போன சின்ன முயலக் கூப்பிட்டுது..’’

‘‘ஏய்.. முயலே இங்கே வா..’’ என்று அதட்டி கூப்பிட்டிருக்கு சிங்கம். பயந்திட்டே போன முயல்

‘‘என்ன.. சிங்க ராஜான்னு..’’ கேட்டிருக்கு.

‘‘என் வாய் துர்நாற்றம் அடிக்கிற மாதிரி இருக்கு.. என்னன்னு பாத்து சொல்லு..’’ அப்பிடின்னு வாயத்தெறந்து சிங்கம் காட்ட

‘‘ஆமா.. சிங்க ராஜா.. உங்க வாய்ல் துர் நாற்றம் தான் அடிக்குது..’’ அப்பிடின்னு முயல் சொல்லிச்சு.

‘‘ஏய்.. குட்டி முயலே.. என்னயை பாத்தா.. வாய் துர்நாற்றம் எடுக்குதுன்னு சொல்ற..’’ அப்படின்னு முயல அடிச்சுக்கொன்னுபுடுச்சு சிங்கம்.

அடுத்து வந்த ஒரு மான்கிட்ட இதையே கேட்டிருக்கு.

‘ஆகா வாய் துர்நாற்றம் அடிக்குதுன்னு சொன்ன.. முயல.. அடிச்சு கொன்னு புடுச்சு.. நாம ஏன்..? உண்மைய சொல்லணும்..’ அப்பிடின்னு நினைச்ச மான்

‘‘யார்..? சொன்னது.. சிங்க ராஜா.. ஒங்க வாயில இருந்து துர்நாற்றம் அடிக்குதுன்னு சொன்னது..? அப்பிடியெல்லாம் அதுவும் அடிக்கல..’’ என்று மான் சொன்னது.

‘‘ஏய்.. மானே என்னோட வாய் வீசுறது எனக்கே தெரியுது.. நீ ஏன்..? இப்படி பொய் சொல்ற..?’’ என்று அந்த மானையும் அடிச்சு கொன்னுருச்சு சிங்கம்.

அடுத்ததா ஒரு நரி அந்தப் பக்கமா போச்சு.

அந்த நரிய சிங்கம் கூப்பிட்டது.

பக்கத்துல வந்த நரி

‘‘என்ன சிங்க ராஜான்னு..’’ பயந்திட்டே கேட்டுது.

‘‘என்னோட வாய் வீசுதான்னு பாருன்னு..’’ வாயத் தெறந்து காட்டியிருக்கு.

‘ஆகா உண்மைய சொன்ன முயலையும் கொன்னு புடுச்சு ; பொய் சொன்ன மானையும் கொன்னு புடுச்சு.. நாம என்ன சொல்றது..’ அப்பிடின்னு யோசிச்ச நரி

வாயத்தெறந்திட்டு நின்ன சிங்கத்த பாத்து

‘‘சிங்க ராஜா.. மன்னிக்கனும் எனக்கு ஜலதோசம்.. மூக்கடைப்பு.. எந்த வாசனைன்னு என்னால.. சொல்ல முடியல.. மூக்கு அடைச்சிருக்கு..’’ அப்படின்னு சொல்ல நரிய எதுவுமே செய்யாம விட்டுருச்சாம் சிங்கம்..

‘‘இது தான் புத்திசாலித்தனம். நரிய மாதிரி நாம இருந்தா.. தான் இந்த சிங்கம் மாதிரி இருக்கிறவங்ககிட்டே பிழைக்க முடியும்; வாழ முடியும்; ஜெயிக்க முடியும் பெருமாள். இல்லன்னா முயல் மான் மாதிரி அடிபட்டு சாக வேண்டியது தான் என்று சேவற்கொடியான் கதையைச்சொல்லி முடிக்கப் பெருமாளின் புத்தியில் உரைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *