சிறுகதை

நீங்காத நினைவுகள்- இரா.இரவிக்குமார்

அழையாத விருந்தாளியாக வந்த ‘கஜா’ புயலும் விவசாயிகளுக்குக் குறிப்பிட்ட காலத்தில் பெய்து அவர்களின் வாழ்வாதாரமான வீடு, நிலம், ஆடுமாடு, தோட்டம், மரம் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் முதலியவற்றைச் செழிக்கவைக்கும் அன்பு உயிர் உயர் விருந்தாளியான ‘மழை’யும் வேகம் கொண்டு விவேகமற்றுத் தங்களையும் தங்கள் இடத்தையும் சூறையாட நிலைகுலைந்து போனார்கள்.

தஞ்சை மாவட்ட மக்கள், பேராவூரணி அருகே நாடியம் என்னும் கிராமத்து விவசாயிகளும் இதில் அடக்கம்.

வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்த பல மாவட்ட மக்கள் அவர்களில் முக்கியமாக விவசாயிகள் கொடூரமான இயற்கை சீற்றத்தால் அடிபட்டு அனைத்து அடிப்படை வசதிகளையும் இழந்து உண்ண உணவின்றி குடிக்க தண்ணியின்றி எங்கும் வெள்ளத்தால் சூழப்பட்டு உயிருக்குப் போராடிக் கெண்டிருந்த வேளையில் எங்களைப் போல மற்ற மழை வெள்ளத்தால் பாதிக்கப்படாத மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு உதவ உறுதி பூண்டோம்.

தூத்துக்குடியிலிருந்து எங்கள் நண்பர்கள் குழாம் அங்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் உதவுவது என்று தீர்மானித்தோம்.

என் நண்பர்கள் சலீம், ரகு, ஜுடு ராஜா ஃபர்ணான்டஸ், நான் எங்கள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் யாவரிடமும் உதவி நாடி ரொட்டி, பிஸ்கட் போன்ற உடனடியாகச் சாப்பிடும் பண்டங்கள், ரவை, அரிசி. கோதுமைமாவு போன்ற சமைத்து உண்ணும் உணவு வகைகளைச் சேகரித்த பின் பாதிக்கப்பட்ட பகுதிக்குக் கிளம்பினோம். சலீம்தான் தன் சொந்த லாரியைத் தானே ஓட்டிக்கொண்டு வந்து பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று உதவும் எங்களது இந்தப் பணிக்கு வித்திட்டவன்.

அந்த இரவில் பசியுடன் கழிந்த இரண்டு நாட்களுக்குப் பின் அவர்கள் ஓரளவு வயிறாரச் சாப்பிட்டதைப் பார்த்த எங்களுக்கு மனதில் மகிழ்ச்சி. அதே நேரத்தில் ஊருக்காக நெல் வயலில் பாடுபட்டுப் படியளக்கும் அவர்களுக்கு வந்த இயற்கை இடர்கள் அவை விளைவித்த கொடுமைகள் நாங்கள் வழியில் பார்த்த சீரழிந்த காட்சிகள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கவே மனம் அச்சம் கொண்டது.

“நீங்க சாப்பிட்டீங்களா?” நாங்கள் எடுத்துச் சென்றவற்றை உண்டபின்னால் சிறிது களைப்பாறியபின் அவர்கள் எங்களிடம் கேட்டார்கள்.

“வர்ற வழியில திருச்சியில சாப்பிட்டோம்! இப்ப நீங்க சாப்பிட்டதே நாங்க சாப்பிட்ட மாதிரிதான்!” என்றான் ஜூடு.

“அப்ப ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சே! நீங்களும் எங்களோட சாப்பிட்டிருக்கலாமே!” என்றார் பெரியவர் ஒருவர்.

“எங்கள விடுங்க! நாங்க சாப்பிடுறதா முக்கியம்? எங்க சாப்பாட்டை அடுத்த வேளைக்கு நீங்க நாலு பேரு சாப்பிடலாமே!” என்றேன் நான்.

திடீரென்று அந்த இளைஞன் சொன்னான்:

“இங்கேருந்து ஏழு கிலோமீட்டர் தள்ளி இருபது குடிசைகள் இருக்கு. அங்க உள்ளவங்க என்ன ஆனாங்கன்னு தெரியல. நீங்க அங்க போய் அவங்களுக்குச் சோறு தண்ணி கொடுக்க முடியுமா?”

கொண்டு வந்த உடனடியாகச் சாப்பிடும் தின்பண்டங்கள் பேக்கரிரொட்டி, பன், பிஸ்கெட் எல்லாம் ஒன்றுவிடாமல் கொடுத்துவிட்டோம். இனி நாங்கள் கொண்டு சென்றிருந்த உணவுப் பொருள்களைச் சமைத்தால்தான் உண்டு என்று பதில் சொன்னான் ரகு.

“நீங்க சொல்றதப் பார்த்தா நிலைமை இங்கவிட அங்க மோசமாயிருக்கும்னு தெரியுது! ஒண்ணு செய்யலாம்… நாங்க ரவை கொண்டுவந்திருக்கோம். அத நீங்க உப்புமா பண்ணிவையுங்க. நாங்க லாரியில போய் அவங்களக் கூட்டிட்டு வர்றோம்!” என்றான் சலீம் சமயோசிதமாக.

உடனடியாக அவனது ஆலோசனையை ஏற்றுக்கொண்ட அவர்கள் தங்களது ஓர் இயலாமையைக் கூறினார்கள். மண்ணெண்ணெய் ஸ்டவ்வை அது ஈரத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு வைத்திருந்தாலும் பற்றவைப்பது கடினம் என்றார்கள்.

எங்கும் மழைநீர் சூழ்ந்ததால் குடிசைகள் முன்னே வழிப்போக்கர்களுக்காகக் கட்டப்பட்டிருந்த திண்ணைதான் இப்போது அங்குள்ள மக்களுக்கு உறைவிடமாக உதவிபுரிந்தது. அதிலும் திண்ணைகள் மீது கோணிப்பைகள், நெல், அரிசி மூட்டைகளாகப் பயன்படுத்தப்பட்ட வெற்று சணல் உறைகள் எல்லாம் போட்டப் பின்தான் ஈரமின்று உட்காரவும் உறங்கவும் அவர்களுக்குப் பாதுகாப்பாகச் செயல்பட வழி உண்டானது.

சலீம்தான் அதற்கும் ஒரு தீர்வு கண்டுபிடித்தான். லாரியிலிருந்து கொஞ்சம் டீசல் எடுத்துப் பற்றவைத்து ஸ்டவ்வின் ஈரத்தைப் போக்கி அதைப் பற்றவைத்துக் கொடுத்தான்.

ஏழு கிலோமீட்டர் சென்று கொலைப்பட்டினியுடன் இருந்த ஐம்பதுபேரை அவர்கள் சொன்னபடி எங்கள் லாரியில் அழைத்து வந்தபோது அவர்களுக்கு உப்புமா தயாராக இருந்தது. அதைச் சாப்பிட்டுவிட்டு அவர்கள் எங்களைக் கையெடுத்துக் கும்பிட்டபோது எங்கள் கண்ணீரைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருந்தது.

ஊருக்காக வயலில் பாடுபட்டு உழைத்து மக்களுக்கு உணவளித்தவர்களின் பசியைப் போக்கிய திருப்தி எங்கள் மனதில் தோன்றியது. அவர்களுக்கு இடுக்கண் வந்தபோது அவர்களின் இடரைப் பகிர்ந்துகொண்ட ஒரு அமைதி மனதில் ஏற்பட்டது. இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியுள்ளது என்ற மலைப்பும் ஒருங்கே உண்டானது.

நாங்கள் கொண்டுசென்ற எல்லாப் பொருட்களையும் அவர்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு நாங்கள் திரும்ப ஆயத்தமானோம்.

“தம்பி ரொம்பத் தூரத்திலிருந்து வேகு வேகுனு வந்து எங்களக் காப்பாத்திட்டீங்க. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திகிட்டு அப்புறம் கிளம்புங்க. மறுபடி வண்டி ஓட்டிட்டுப் போக உடம்பில தெம்பு வேணும்ல!” என்றார் பெரியவர் ஒருவர்.

அவர் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. கண்களும் உடலும் ஓய்வுக்காக ஏங்கின. அங்கிருந்த குடிசை ஒன்றின் திண்ணையில் லாரியிலிருந்த தார்ப்பாயைக் கொண்டுவந்து படுத்ததுதான் தெரியும் நாங்கள் நால்வரும் மெய் மறந்து கண்ணயர்ந்தோம்.

நாங்கள் ஒவ்வொருவராகக் கண் விழித்தபோது அங்கிருந்தவர்கள் எங்கள் லாரியில் எதையோ ஏற்றிக் கொண்டிருந்தார்கள். அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது அவர்கள் புயலால் வேரோடு சாய்க்கப்பட்ட தென்னை மரங்களிலிருந்த தேங்காய், இளநீர்க்காய்கள், வாழைமரங்களின் குலைகள், மாமரங்களின் காய்கள் எல்லாவற்றையும் வெவ்வேறு இடங்களிலிருந்து சேகரித்து ஏற்றிக்கொண்டிருந்தார்கள். லாரியின் பின்புறம் அவற்றால் நிரம்பி வழிந்தது.

“என்ன இது?” என்று கேட்க முனைந்த எங்களைத் தடுத்து நிறுத்திய அவர்கள் ஒட்டு மொத்தக் குரலில் சொன்னார்கள்:

“இதுவரைக்கும் எங்க கிராமத்துக்கு வந்தவங்கள வெறும் கையோட திருப்பி அனுப்பிச்சதில்ல! எங்களக் காப்பாத்த ஓடோடி வந்த உங்களுக்கு இப்ப இததான் எங்களால பண்ண முடியும்!… தயவுசெஞ்சு வேண்டானு சொல்லிறாதீங்க!”

எங்கள் நால்வருக்கும் கண்களில் நீர் கோத்து அழுகை நெஞ்சை முட்டிக்கொண்டு வந்தது. மிகவும் சிரமப்பட்டு எங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டோம்.

அவர்களிடமிருந்து கையசைத்துப் பிரியா விடைபெறும்போது அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. லாரியைச் சலீம் ஓட்ட ஆயத்தம் பண்ணபோது அருகிலிருந்த குடிசைத் திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்த எட்டு வயதுச் சிறுமி ஒருத்தி லாரி புறப்படும் ஓசை கேட்டு எழுந்து ஓடிவந்து லாரியிலிருந்த எங்களைத் தடுத்து நிறுத்தினாள்.

“அங்கிள்… அங்கிள் எனக்கு ஒண்ணு செய்வீங்களா?”

“சொல்லு… தங்கம், என்ன செய்யணும்?” என்று கேட்டான் ரகு.

“நீங்க போற வழியிலதான் என் ஃபிரெண்டு ஜோதியோட வீடு இருக்குது. அவளும் சாப்பிட எதுவும் இல்லாம என்னமாதிரி அழுதுட்டிருப்பா. இத அவளுக்குக் கொடுப்பீங்களா?”

மடித்துவைத்திருந்த தன் வலது உள்ளங்கையைத் திறந்து அதிலிருந்த இரண்டு பிஸ்கெட்களைக் காட்டினாள் தூக்கக் கலக்கத்திலிருந்த அந்தச் சிறுமி.

மீண்டும் அங்கே மழை பொழியத் தொடங்கியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *