சிறுகதை

நிலைமை | ராஜா செல்லமுத்து

மக்களால் பெரிதும் பாராட்டப்பட்ட அந்த திரைப்படம் பல தேசிய விருதுகள் மாநில விருதுகள் என்று நிறைய குவித்தது. ஆண்டு முழுவதும் அந்த திரைப்படத்திற்கு எண்ணற்ற விருதுகள் வந்து சேர்ந்தன. அந்த திரைப்படம் மக்கைளை வெகுவாக கவர்ந்தது.

இன்று சென்னையில் உள்ள ஓர் அமைப்பு அந்த திரைப்படத்தில் பணிபுரிந்தவர்களை அழைத்து விழா ஏற்பாடு செய்திருந்தது. விழா பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

முதலில் இயக்குனர் அதன் பிறகு ஒளிப்பதிவாளர், அதன் பிறகு தொழில்நுட்ப கலைஞர்கள் என்று வரிசையாக அழைத்து சால்வையும் கேடயமும் கொடுத்து கௌரவம் செய்தார்கள். அப்போது விழா மேடையில் தயாரிப்பாளர் பேசினார்

இந்த திரைப்படம் உருவாக மிகவும் உதவியாகவும் தோளோடு தோள் நின்று இன்றைக்கு இவ்வளவு பெரிய வெற்றியை தேடித்தந்த உதவி இயக்குனர்களை நான் வெகுவாக பாராட்டுகிறேன் என்று மேடையில் பேசினார் அந்த தயாரிப்பாளர்

பார்வையாளர்கள் அத்தனை பேரும் இடைவிடாது கைதட்டினார்கள். பத்திரிக்கைகளும் ஊடகங்களும் உதவி இயக்குனர்களைப் புகழ்ந்தனர்.

உதவி இயக்குனர்களில் குறிப்பாக தாமோதரன் என்ற உதவி இயக்குனர் இரவு பகல் பாராது உழைத்ததால் இந்தப் படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த திரைப்படத்தின் வெற்றி அதன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் லாபம் அத்தனைக்கும் மூல காரணம் உதவி இயக்குனர் தாமோதரன் தான் என்று புகழ்ந்தார் தயாரிப்பாளர்.

தாமோதரனுக்கு சால்வை அணிவிக்கப்பட்டது மரக்கட்டையால் ஆன கேடயம் கொடுக்கப்பட்டது. அடுத்து வந்த இயக்குனரும் தாமோதரனை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினார். மற்றவர்களும் தாமோதரன உழைப்பு தாமோதரன் அர்ப்பணிப்பு ஆகியவற்றை உச்சிமுகர்ந்து பாராட்டினார்கள் பத்திரிகைகளும் மீடியாக்களும் தாமோதரனை இன்டர்வியூ எடுத்தனர்.

தாமோதரனின் வெற்றி வெளிச்ச புள்ளியாக அந்த விழாவிற்கு வந்தவர்கள் கட்டியம் கூறினார்கள்.

அடுத்த ஆண்டு தாமோதரன் மிகப்பெரிய ஒரு திரைப்படத்தை இயக்குவார் என்றும் அவர் பொருளாதார ரீதியாக உயர்ந்த இடத்திற்கு போவார் என்றும் அச்சாரம் வைத்தார்கள்.

அங்கிருந்தவர்கள் பேசிய பேச்சில் தாமோதரன் மகிழ்ச்சியில் கலங்கிய போனார். அன்றைக்கு அந்த திரைப்படத்தின் விழா என்பதைவிட தாமோதரனுக்கு நடத்திய பாராட்டுவிழா என்பது போலவே இருந்தது. அந்த அளவிற்கு மிக ஈடுபாட்டுடன் ஒரு திரைப்படத்தை எப்படி கொண்டு போகவேண்டும் என்று தாமோதரன் செய்திருப்பதாக அங்கிருந்தவர்கள் எல்லாம் அவருக்கு அங்கீகாரம் கொடுத்தனர்.

அன்று சிலர் தாமோதரனின் வெற்றி குறிக்கப்பட்டு விட்டது என்றும் அடுத்த ஆண்டு அவர் கையில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்றும் கட்டியம் கூறினர். தாமோதரனுக்கு தலைகால் புரியவில்லை.

விழா முடிந்தது; அவரவர் இருக்கையை விட்டு கிளம்பிக் கொண்டிருந்தார்கள் தாமோதரன் சுற்றி சுற்றி யாரையோ பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் யாரை பார்க்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. வந்தவர்கள் எல்லாம் தாமோதரனுக்கு கை கொடுத்துவிட்டு வாழ்த்திவிட்டு சென்றார் .

ஆனால் தாமோதரன் மட்டும் யாரையோ எதிர்பார்த்துக் கொண்டே இருந்தார்.

கிட்டத்தட்ட அந்த இடத்திலிருந்து அத்தனை பேரும் எழும்பி ஆயிற்று.

எஞ்சியிருப்பது அந்த விழா மண்டபத்தில் வேலையாட்களும் தாமோதரன் மட்டுமே .

தாமோதரன் வெளியே வந்தான் . அவன் வீட்டிற்கு செல்வதற்கான இருசக்கர வாகனமும் நான்கு சக்கர வாகனம் எதுவுமில்லை.

பறக்க பறக்க நின்றுகொண்டிருந்தார்.

கையில் சால்வை, மரக்கட்டையால் ஆன ஒரு கேடயம் இருந்தது.

அவன் வீடு விழா நடக்கும் இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தள்ளி இருந்தது.

அவன் வரும் பேருந்து எதிர் நோக்கி நின்றான். அவன் இல்லத்திற்கு செல்லும் பேருந்து வரும். அது வராமல் நின்று கொண்டிருந்தான்.

அவன் ஏன் பேருந்தில் ஏறாமல் நின்று கொண்டிருக்கிறான் என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும் .

ஒரு நண்பரை எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தான்.

அவன் வந்து சேரவில்லை. தொலைபேசியும் செய்யவில்லை. ரொம்பவே மனமுடைந்து போன தாமோதரன் இரவு வெகு நேரமாகி விட்டபடியால் கையிலிருந்த சால்வையும் மரக்கட்டை கேடயத்தையும் அந்த விழாவில் தாமோதரன் பற்றி பெட்டி பெட்டியாக பேசிய அத்தனை மகிழ்ச்சி செய்திகளையும் மனதில் சுமந்து கொண்டு நின்று கொண்டிருந்தான் .

அவன் இனிமேல் தாமதித்தால் வீட்டிற்கு போக முடியாது என்று நினைத்து வருகிறேன் என்று சொன்ன நண்பனை மனதிற்குள்ளே திட்டினான்.

வேறு வழியில்லை என்று ஒரு முடிவுக்கு வந்த பின்னர், அந்தப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த சில மனிதர்களிடம் வாய்விட்டே கேட்டான்

சார் பஸ்சுக்கு காசு இல்ல. என் பிரண்டு வரேன்னு சொன்னான். அவன் வரல. நான் ஊருக்கு போகணும். என் வீட்டுக்கு போகணும். ஒரு இருபது ரூபாய் கொடுங்க சார் என்று ஒருவரிடம் கேட்டான்

தாமோதரன் உடை கையில் வைத்திருக்கும் சால்வை மரக்கட்டை கேடயத்தை பார்த்து சிலர் தள்ளி நின்றனர்.

உனக்கு என்ன கேடு, நல்லா தான் இருக்கே. ஏன் அடுத்தவன் கிட்ட பிச்சை எடுக்கலாமா? உழைத்துச் சம்பாதிக்கணும். அப்பத்தான் இந்த இருபது ரூபாேட வலி தெரியும். வந்துட்டானுங்க என்று சில திட்டிக்கொண்டே தாமோதரன் இருந்த இடத்தை விட்டு நகர்ந்தனர் .

வேறு வழியில்லாமல் ஒரு இருபது ரூபா இருந்தா குடுங்க. நான் வீட்டுக்கு போகணும் என்று பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் “பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான் தாமோதரன்.

யாரும் தருவதாக தெரியவில்லை. அவன் கண்களில் கண்ணீர் திரண்டது.

சற்றுமுன் நடந்த விழாவில் தாமோதரனை பற்றி பேசிய பேச்சுக்கள் அவன் காதில் வந்து விழுந்தன.

அடுத்த வருஷம் தாமோதரன் பெரிய இயக்குனர்பா, அவன் கையில கோடிக்கணக்கான பணம் புரளும். நிச்சயமா உயர்ந்த இடத்திற்கு வருவான் என்று பேசிய பேச்சுக்கள் அவன் காதில் விழுந்தது.

கண்ணீரோடு அங்கு நின்றுகொண்டிருந்தவன், இன்னொரு நபரிடம் தன் வெட்கத்தை அவமானத்தை சுயமரியாதையை விட்டு இருபது ரூபாய் கேட்டுக்கொண்டிருந்தான்

அவன் கையில் சால்வையும் மரக்கட்டை கேடயமும் அப்போது ரொம்பவே அவனுக்கு கனமாகத் தெரிந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *