சுரேந்திரன் ஒரு கல்லூரி விரிவுரையாளன். நல்ல துடிப்பான இளைஞன். நல்ல குணமான பெண் மல்லிகாவை திருமணம் செய்து கொண்டான்.
அவர்களுக்கு பெண் ஒன்றும் ஆண் ஒன்றுமாக இரு குழந்தைகளும் பிறந்தன.
திடீரென சுரேந்திரன் டாக்டர் பட்டம் வாங்க ஆசைப்பட்டான். பெயரையும் பதிவு செய்து விட்டான். தலைப்பு ‘நிலவுப் பயணம்’ என்று முடிவு செய்தான். நிலவுக்குப் போக என்ன செய்வது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான். அடிக்கடி இஸ்ரோவுடன் தொடர்பு கொண்டான். அதன் செலவுகள் பல கோடிகள் ஆகும் என தெரிந்து கொண்டான்.
அவன் யோசிக்கையில் ஒன்று புலப்பட்டது. இவ்வளவு செலவு நமக்குத் தேவை தானா என்று சிந்தித்தான். அவனுக்குள் ஒரு எண்ணம் ஏற்பட்டது. முற்காலத்தில் அனுமார் எப்படிப் போனார். யோகிகள், முனிவர்கள் எப்படி மற்ற கிரகங்களுக்குப் போனார்கள் என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்தான். அவனுக்குத் தெளிவாக ஒன்று புலப்பட்டது. ஏதாவது ஒரு ‘மந்திரம்’ அல்லது மூலிகைகளுடன் பிரயாணம் செய்திருப்பார்கள் என்று முடிவு எடுத்தான். அதைப் பற்றித் தீவிரமாக தெரிந்துகொள்ள முடிவெடுத்தான்.
ஏட்டுச்சுவடிகள் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தேடித்தேடி அலைந்தான். பல புதிய செய்திகளை கண்டுபிடித்தான். அதில் அவனுக்கு மிகவும் ஈடுபாடு ஏற்பட்டது. புதிய மருத்துவ மூலிகைகளைக் கண்டுபிடித்தான். கொரானாவுக்கு கைகண்ட மருந்து என்று கண்டங்கத்திரியைப் பற்றி தெரிந்து கொண்டான். அத்துடன் கச்சந்திரா, காதட்டி என்ற மூலிகைகளை பற்றியும் அறிந்து கொண்டான். இவை மிக மிக கசப்புத் தன்மை கொண்டவை. புற்றுநோய் தீர்க்க ‘கச்சந்திரா’ என்ற மூலிகை ஏற்றது என்றும் கண்டுபிடித்தான்.
ஒரு புதிய செய்தியையும் கண்டறிந்தான். ஆம் அது தான் ‘பெரு மரம்’ பற்றிய செய்தி . அது ஒரு அபூர்வ மரம் எவ்வளவு வெப்பத்தையும் குளிரையும் தாங்கிக் கொள்ளும்… அதனால் அம்மரம் பெருமைக்குரிய மரம் என்று புகழப்பட்டது. அதில் பேய்கள் எல்லாம் குடியிருக்குமாம். இது மிகவும் அரிய வகை மரமாகக் கருதப்படுகிறது. ஒரு கோவிலில் மட்டும் ஸ்தல விருட்சமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மட்டும் ஒன்று அல்லது 2 மரங்கள் மட்டும் உள்ளதாக அறிந்தான்.
சுரேந்திரனுக்கு தானே நிலவுப் பயணம் போய்விட்டு வந்தால் என்ன என்று யோசித்தான். வேலையையும் சரிவர செய்ய முடியாததால் வேலையிலிருந்தும் நீக்கப் பட்டான். ஆனால் அது பற்றி சுரேந்திரன் கவலை கொள்ளவில்லை.
வேலையில்லாததால் சுரேந்திரன் குடும்பம் வறுமையில் தள்ளப்பட்டது. மனைவி மல்லிகா கையிருப்பு வைத்து சில மாதங்களைத் தள்ளினான். சுரேந்திரன் அவளிடம் ஒன்றும் கவலைப்படாதே, நிலாவிற்குப் போய் தங்கங்களை அள்ளி வருவேன். பிறகு நாம் தான் மிகப்பெரிய பணக்காரர்களாகி விடுவோம் என்று சொன்னான். இப்போதெல்லாம் கணவனை நம்பவில்லை. தானும் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்ந்து விட்டாள். குழந்தைகளையும் சாதாரண கார்ப்பரேஷன் ஸ்கூலில் சேர்த்தாள்.
எந்நேரமும் இதே புலம்பல் தான். நிலவின் எல்லா மூல முடுக்குகளைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்தான். மக்கள் ‘நிலாப்பித்தன்’ என்றே கூப்பிட ஆரம்பித்தார்கள்.
சுரேந்திரன் தன் முயற்சியைக் கைவிடவில்லை. பெருமரத்தைக் கண்டுபிடித்தான். அதையும் அதிக விலை கொடுத்து வாங்கி லாரியில் ஏற்றிக்கொண்டு வந்து விட்டான். அதைத் தன் சிறிய தோட்டத்தில் இறக்கி வைத்து விட்டான். ஒரு கூட்டு வண்டி போல் செய்ய ஏற்பாடு செய்தான். வண்டியும் தயாரித்து விட்டான். தன் வசதிக்கேற்ப அதில் அறைகள் அமைத்து விட்டான். சாப்பிட வேண்டிய உணவில் கவனம் செலுத்தினான்.
இந்த கூட்டு வண்டியை எப்படி இயக்குவது என்று யோசித்து எல்லா இடங்களிலும் தேடித் திரிந்தான். அதற்கும் ஒரு யுக்தி கிடைத்தது.
ஒரு மலைத் தொடரைச் சுற்றியபோது அங்கே ஒரு மலைவாழ் மக்கள் கூட்டத்தைக் கண்டான். அவர்களிடம் அனுமாரை வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பேசும் மொழி எதுவும் புரியவில்லை. ஒருவன் மட்டும் சிறிது தமிழ் பேசினான். இவர் எப்படி சந்திரனைத் தொட்டார் என்று வினவினான். ஒரு ஆக்சனைக் காட்டினான்.
‘நச்சீஸ்த்ர பகா’ என்று சொன்னால் பறக்கலாம் என்றான். இதுவே இந்த அனுமானின் பெயர் கூட என்றான். சுரேந்திரனுக்கு பளிச்சென்று புரிந்து விட்டது. ஆம் இது தான் அந்த மந்திரச் சொல் என்று.
உணவுக்கும் விடை கிடைத்துவிட்டது. அரிசியை பொரியாக்கி மாவாக திரித்து வெல்லப்பாகு ஊற்றி கிளறு பொரி மாவு உருண்டையாகப் பிடித்து தேவையான அளவை கணக்கிட்டுக் கொண்டு செல்ல வேண்டும் என்று தீர்மானித்தான். தண்ணீருக்கும் ஒரு திட்டம் வகுத்தான். அவன் ஒவ்வொன்றாக ஆராய்ந்ததில் அதிமருதத்தை தேர்ந்தெடுத்தான். ஒரு துண்டை வாயில் அடக்கிக் கொண்டால் தண்ணீர் தாகமே எடுக்கவில்லை. அதுவும் ஒவ்வொரு ஊராகப் போய் 2 மூட்டைகள் சேகரித்து விட்டான்.
சுரேந்திரன் கணக்குப்படி கிட்டத்தட்ட 50 (ஐம்பது) மூட்ட புழுங்கல் அரிசி தேவைப்பட்டது. இதை மனைவியிடம் சொன்னதும் மல்லிகா அலறி விட்டாள். என்னிடம் கொஞ்சம் கூட பணம் இல்லை. இன்றைய சாப்பாட்டிற்கு ரேஷன் கடையில் போய் வாங்கி வாருங்கள் என்று கார்டை கொடுத்தனுப்பினாள் மல்லிகா. சுரேந்திரன் கையில் பையுடன் ரேசன் கடைக்குச் சென்றான். இதுவரை ரேசன் கடை சென்றறியான். ஒரு பெரிய வரிசை நின்றிருந்தது. சாப்பாடு வேண்டும் என்றால் இந்த இலவச அரிசி கண்டிப்பாக வேண்டுமே என்றான். ஒரு வழியாக அரிசியும் சர்க்கரையும் வாங்கி வந்தான்.
வீட்டிற்கு அசதியாக மிகவும் களைப்பாக வந்தான். அவன் வந்தவுடன் ஒரு தட்டில் முறுக்கும் காபியும் கொடுத்தாள். மிகமிக ருசியாகத் இருந்தது. இந்த முறுக்கும் நான் சுட்டு விற்கிறேன் என்றாள். பிறகு தான் வாங்கி வந்த சர்க்கரையைக் கலந்து காபியும் கொடுத்தாள். அதன் சுவையும் மனமும் அலாதியாக இருந்தது.
குழந்தைகள் கபிலாவும் விக்னேஷ் எங்கே? மல்லிகா சொன்னாள், இருவரும் பீச்சுக்குச் சென்றிருக்கிறார்கள். சுண்டல், முறுக்கு விற்க. இன்று இதை விற்றால் தான் நாளை புத்தகங்கள் வாங்க முடியும் என்றாள்.
சுரேந்திரனுக்கு வெட்கமாகப் போய் விட்டது. தன் நிலா பயணமே இந்த கோலத்தில் இந்த வீட்டிற்கு இந்த நிலமை என்று எண்ணியது மனம். மறுநாளே ஒரு சிறிய கல்லூரியில் மீண்டும் லெக்சரராக பணிக்குச் சென்றான். தன் குழந்தைகளையும் பள்ளிக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான்.
‘‘நச்சீஸ்திர பாகா’விற்கும் விடை கொடுத்தான் நிலாப்பித்தன்.