செய்திகள்

நிலவின் வரலாற்றில் சந்திராயன் 3 வெற்றி சரித்திரம்


நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார்


இந்த தலையங்கத்தை படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நமது இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திராயன் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி இருப்பார்கள். நாடே மட்டுமின்றி உலகமே இந்திய நேரப்படி மாலை 5.27 மணி முதல் நேரலையில் பார்த்து வியந்து இருக்கும்.

குருவை மிஞ்சிய சிஷ்யன் என்பதை இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதித்து இருப்பார்கள்! காரணம் விண்வெளி ஜாம்பவான்கள் ரஷ்யாவின் லூனா 25 இரண்டு நாட்களுக்கு முன்பு தரையிறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து சுக்கு நூறாக உடைந்து விட்டது.

இத்தலையங்கத்தை தயாரிக்கும் இத்தருணத்தில் வெற்றியா? தோல்வியா? என்ற கேள்விக்கு பதிலை தெரிந்து கொள்ளாமல் பாராட்டி வியப்பது சரிதானா? என கேட்கலாம்.

சைக்கிள் ஓட்டப்பழகும் போது சிறு வயதில் சமநிலையை இழந்து சரிந்து வீழ்ந்து விட்டதால் சைக்கிள் ஓட்டப் பழகாமல் இருந்தவர்கள் யாரும் இருக்கவே முடியாது அல்லவா?

அதுபோன்று நிலாவில் கடைசி நிமிடத்தில் ஏதேனும் விபத்து என்று மாறினாலும் அந்த கணத்தை எட்ட செய்த புரட்சி உண்மையிலேயே விஞ்ஞான உச்சமாகும்!

அதை எட்டும் நாடுகளில் நாம் அன்றே எட்டி விட்டோம். நிலவை எட்டிய நாம், அதில் தரையிறங்கிட நெருங்கிய நொடியில் சென்ற முறை தோல்வியுற்றோம் என்று நமக்கு தோன்றலாம். ஆனால் சந்திரயான் –2 தந்த அனுபவங்கள் கொண்டு இதோ சந்திராயன் 3 நிலவை எட்டி விட்டது.

எட்ட இருக்கும் நொடிக்கு 28 மணி நேரத்திற்கு முன்பு சந்திராயன் 3 தனது ‘சீனியர்’ சந்திராயன் 2 ‘வருக நண்பா’ என்று அழைத்து இருக்கும் செய்தி 140 கோடி இந்தியர்களுக்கும் மகிழ்ச்சி தரும் ஆரவார செய்தியாக இருக்கிறது.

இஸ்ரோ கடந்த 2019-ல் அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டர்,தொடர்ந்து நிலவை சுற்றி வருகிறது. அதற்கும், தற்போது அங்கு சென்றுள்ள சந்திரயான்-3 லேண்டருக்கும் தகவல்தொடர்பு வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ‘Welcome, buddy!’ (வருக நண்பா) என லேண்டரை சந்திரயான்-2 ஆர்பிட்டர் வரவேற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

திகில் மர்ம கதை போல் நம் கண் முன் நிகழ்ந்த அந்த கடைசி 15 நிமிட சினிமா பாணி காட்சிகள் என்றும் நம் மனதில் இருந்து நீங்கா காட்சிகளாகும்.

சென்ற முறை 2019–ல் பிரதமர் மோடி திடீர் விஜயமாக இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் அமர்ந்து அந்தத் தருணத்தை கண்டு ரசித்தபடி விஞ்ஞானிகளை பாராட்டினார்.

இறுதி நொடியில் நேர்ந்த விபத்தை பார்த்து அதிர்ந்த பலரில் பிரதமர் மோடியும் ஒருவராக இருந்தும் அந்த திட்டப்பணியின் தலைவர் டாக்டர் சிவனை தோளில் தட்டி அழாதீர்கள்; இதற்கு கண் கலங்க கூடாது, ‘தோல்வியே வெற்றியின் முதல் படி’ என்று அறிவுறுத்தி தொடர்ந்து விபத்துக்கான காரணத்தை புரிந்து கொண்டு அடுத்தமுறை இந்த தவறுகள் தவிர்க்கப்பட உறுதியாக இருங்கள் என்று கூறியிருந்தார்.

அதை மனதில் கொண்டு இம்முறையும் சந்திரயான் 3 அதே பகுதியில் தரையிறங்க தயாராகியது.

முந்தைய படங்களையும் இறுதி கட்ட நொடிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படங்களையும் கொண்டு அந்த கலத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கணினிகள் சரியான முறையில் எந்த இடத்தில் தரையிறங்க வேண்டும் என முடிவு செய்து தரையிறக்கி இருக்கும்.

மேடு பள்ளத்தையும் தரையிறங்கும் வேகத்தையும் இப்படி நொடிப்பொழுதில் கணித்து தரையிறங்கும்! இது நமது செயற்கை நுண்ணறிவு திறனுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றியாகும்.

ஒருவேளை துர்பாக்கியமாக விபத்து ஏற்பட்டு சிதறி விட்டால்? பல லட்சம் மைல்களுக்கு அப்பால் நிலவின் ஈர்ப்பு சக்தியையும் அந்த தொலைதூர கணினியின் கோட்பாடுகளையும் இங்கிருந்து நாமும் தொடர்பு கொண்டு செயல்பட வைக்கும் திறன் பெற்றிருப்பதும் மகத்தான சாதனை தான்.

வருங்காலத்தில் தானியங்கி வாகனங்கள் இப்படி நொடிப்பொழுதில் நின்று விட வைப்பதும் சற்றே விலகி செல்வதும் முற்றிலும் தானியங்கிகளாக அதாவது செயற்கை நுண்ணறிவு கொண்ட திறன் தர இருக்கும் பாதுகாப்பான சவால்களாக இருக்கப்போகிறது.

முன்பு நாசா விஞ்ஞானிகளும் ரஷ்ய விண்வெளி வீரர்களும் வடிவமைத்த பல விஞ்ஞான கருவிகள் இன்று நம்மிடம் அன்றாட உபயோக கருவிகளாக இருப்பதை அறிவோம்.

தொலைதொடர்பு அதாவது செல்போன் இன்றி வாழ முடியாத இன்றைய தொழில்நுட்பம் நமக்கு கிடைத்தது அல்லவா? அந்த புரட்சிக்கு வித்திட்டது ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள். கையில் இன்றும் நாம் எழுதி கொண்டு இருக்க உதவும் பால்பாயிண்ட் பேனாக்கள் உருவானதில் விண்வெளி வீரர்கள் மைபேனாவை புலி ஈர்ப்பு இல்லா பகுதிகளில் எழுத வழியின்றி இருக்க இப்படி மையை கசிவுயின்றி எண்ணை போன்ற பேஸ்டாக குழைத்து அதை சிறு குழாய் போன்ற டியூப்புகளில் ஏற்றி எழுத ஆரம்பித்தோம்.

சிறு குழந்தைகளுக்கு தேங்காய் கொட்டாச்சியில் கரியை நெய்யாகக் குழைத்து அதை பிசிரேதும் இன்றி குழகுழப்பு தன்மைக்கு அரைத்து கண் மை வைப்பார்கள் அல்லவா? கிட்டத்தட்ட அதே பாணியில் மை உருவாகி பால்பாயிண்ட் பேனாவாக உருவெடுத்தது. புயலில் சிக்கி தவிக்கும் கப்பல்களில் மாலுமிகளால் உபயோகிகப்பட்ட இந்த மாதிரி முன்வடிவம் பின்னர் நாசா விஞ்ஞான ஆய்வகத்தில் இன்றும் உபயோகத்தில் உள்ள பால்பாயிண்ட் பேனாவாக இருக்கிறது.

அதே போன்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கும் பல முன்மாதிரி வடிவமைப்புகள் நம்மை நிலவை எட்டிட வைத்துவிட்டது.

சந்திரயான் 3 தனது வெற்றிகரமான 40 நாள் பயணத்தை முடித்து நிலவை எட்டி விட்ட நிலையில் அந்தச் சாதனையை மூன்றாவது முறையாக செய்து விட்ட சாதனையை பாராட்டியே ஆக வேண்டும்.

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில்செலுத்தப்பட்டது. அதன்பிறகு பூமியை சுற்றிவந்த விண்கலம் கடந்த ஆக.1-ல் புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும்படி அதன் பயணப் பாதை மாற்றப்பட்டது. ஆக. 5-ம் தேதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.

பின்னர் சந்திரயானின் சுற்றுப்பாதை உயரம் 4 முறை படிப்படியாக குறைக்கப்பட்டு நிலவுக்கு அருகே கொண்டு செல்லப்பட்டது. நிலவில் இருந்து 153 கி.மீ உயரத்தில் இருக்கும்போது சந்திரயானின் உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் பாகம் 17-ம் தேதி பிரிக்கப்பட்டது. அதன்பின் உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவை ஒட்டிய சுற்றுப்பாதையில் வலம் வந்தன.

நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமான சுற்றுப்பாதையில் லேண்டர் தற்போது இயங்கி வருகிறது.

நிலவில் தரையிறங்குவதற்கான பகுதிகள் குறித்த புகைப்படங்களை லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக் கருவி அவ்வப்போது படம் பிடித்து அனுப்பி வருகின்றன. கடினமான பாறைகள், ஆழமான குழிகள் இல்லாத பாதுகாப்பான பகுதிகளை கண்டறிந்து நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் இன்று (ஆக.23) மாலை மேற்கொள்ளப்பட உள்ளன.

எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி லேண்டரின் வேகம் படிப்படியாக குறைக்கப்படும். தொடர்ந்து லேண்டர் தனது உட்புற சோதனைகளை செய்து கொண்டு தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் சூரிய உதயத்துக்காக காத்திருக்கும். இறுதியாக லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும் லேண்டர், நிலவின் தென்துருவத்தில் இன்று மாலை 6.04-க்கு தரையிறங்கும்.

அப்போது வெற்றியா, தோல்வியா என்பது தெரிந்திருக்கும்.

நமது சாதனை தரையிறக்கியதில் இருந்தாலும் இல்லாது போனாலும் அதை முயற்சித்து இறுதி நொடி வரை செயல்படுத்தியதில் இருந்ததை மறக்கக் கூடாது.

நிலாவின் வரலாற்றில் சந்திரயான் 3 தனது முத்திரையை பதித்து இருப்பதும் ஓர் அண்டசராசர சாதனை என்பதை நினைக்கும் போது நமக்கு சிலிர்ப்பு ஏற்படத் தான் செய்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *