இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
சென்னை, ஆக.8-–
நிலவில் இருந்து அதிகபட்ச தூரமான 4 ஆயிரத்து 313 கி.மீ. தூரத்தில் உள்ள நிலவு சுற்று வட்டப்பாதையில் ‘சந்திரயான்-3’ சுற்றி வரும் நிலையில் உயரம் குறைக்கப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-–
புவிவட்ட சுற்றுப்பாதை யில் இருந்து நிலவு சுற்றுவட்டப்பாதைக்குள் கடந்த 6-ந் தேதி நுழைந்த ‘சந்திரயான்-–3’ விண்கலம் நிலவுக்கு மேலே சுமார் குறைந்தபட்சம் 114 கி.மீ. அருகேயும், அதிகபட்ச தூரமாக 18,072 கி.மீ. தொலைவிலும் சுற்றி வந்தது. இதனுடைய உயரத்தை படிப்படியாக குறைக்கும் பணியில் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு முதன் முறையாக விண்கலத்தின் உயரம் குறைக்கும் முயற்சி நடந்தது. அதன்படி குறைந்தபட்ச தூரம் 170 கிலோ மீட்டரும், அதிகபட்ச தூரம் 4 ஆயிரத்து 313 கிலோ மீட்டர் என்ற அளவிலும் குறைக்கப்பட்டு விண்கலம் நிலவு சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வருகிறது. தொடர்ந்து அடுத்தகட்டமாக நிலவுக்கு சுமார் 121 கி.மீ. அருகிலும், அதிகபட்சம் 4 ஆயிரத்து 303 கி.மீ. தொலைவிலும் சுற்றும் வகையில் அதன் சுற்றுவட்டப்பாதை மாற்றி அமைக்கப்பட உள்ளது. இந்த பணி ஓரிரு நாட்களில் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனைத்தொடர்ந்து 2 வாரத்திற்கு பிறகு நிலவுக்கு 178 கி.மீ. அருகிலும், அதிகபட்சமாக 1,411 கி.மீ. தொலைவிலும் ‘சந்திரயான்-–3’ சுற்றும் வகையில் அதன் சுற்று வட்டப்பாதை மீண்டும் மாற்றப்பட உள்ளது. வருகிற 22-ந் தேதி வாக்கில் சுமார் 126 கி.மீ. அருகிலும், 164 கி.மீ. தொலைவிலும் அதன் சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட உள்ளது.
விண்கலத்தின் ஆரோக்கியம் நன்றாக இருப்பதால் வருகிற 23-ந் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் ‘சந்திரயான்–-3’ விண்கலம் மெதுவாக தரை இறங்கி கால் பதிப்பதற்கான அத்தனை பணிகளும் நடக்கும் என்றனர்.