செய்திகள்

நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணிக்க துவங்கியது சந்திரயான்–3

இஸ்ரோ தகவல்

ஸ்ரீஹரிகோட்டா, ஆக.1–

புவி வட்டத்தின் இறுதி சுற்றுப் பாதையை வெற்றிகரமாக நிறைவு செய்து சந்திரயான்–3 விண்கலம், நள்ளிரவு நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணிக்க துவங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நள்ளிரவு (ஆக 1–ந்தேதி) 12.05ல் இருந்து 1 மணி வரை நிலவை நோக்கிய பயணத்துக்கான பணிகள் நடந்து முடிந்ததாகவும், சந்திரயான் விண்கலத்தில் உள்ள த்ரஸ்டர்களில் உந்து விசை ஏற்படுத்தப்பட்டதை அடுத்து அது நிலவை நோக்கிய பயணத்தை மேற்கொண்டு வருகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்–3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்–3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14–ந்தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதையை நீட்டிக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டன.

கடந்த 26ம் தேதி சந்திரயான்–3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தூரம் 5–வது முறை வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் அடுத்தகட்டமாக சந்திரயான் விண்கலம் இன்று புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளப்பட்டது. அதன்பிறகு திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23–ந்தேதி விண்கலம் நிலவில் மெதுவாக (சாப்ட் லேண்டிங்) தரையிறக்கப்படவுள்ளது.

இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள தகவலில், “சந்திரயான்–3 விண்கல பயணத்தின் மிக முக்கியமான படி, புவி வட்டப் பாதையிலிருந்து, நிலவின் சுற்றுப்பாதைக்குள் செல்வது. அதன்படி, நிலவின் சுற்றுப்பாதைக்குள் சந்திரயான் நுழைய 28 முதல் 31 நிமிடங்கள் எடுத்துக் கொண்டுள்ளது. சரியான பாதையில் எதிர்பார்க்கப்பட்டதைவிட மேலும் கூடுதலான வேகத்தில் நிலாவை நோக்கி சந்திரயான் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த ஸ்டாப் நிலா தான்” என தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *