சிறுகதை

நிலத்துடன் வாழ்க | ராஜா செல்லமுத்து

“நிலத்துடன் வாழ்க” என்ற வார்த்தையை தான் அமர்ந்திருக்கும் சுவருக்கு பின்னால் எழுதி சுவரில் ஒட்டி இருந்தார் முரளி. அவரைப் பார்க்க வரும் வாடிக்கையாளர்கள், நண்பர்கள் நிலத்துடன் வாழ்க என்ற அந்த வார்த்தையைப் பற்றிக் கேட்காமல் போக மாட்டார்கள்.

அப்படி ஒருநாள் ஒரு நண்பர் முரளியின் அலுவலகத்திற்கு வந்தார் . அந்த நண்பரின் பெயர் சுரேஷ். அரக்கப் பரக்க தன் நண்பனின் வேலைகளை பார்த்த சுரேஷ்,

எதேச்சையாக முரளியின் பின்னாலிருக்கும் நிலத்துடன் வாழ்க என்ற வார்த்தையை வாசித்துவிட்டு அந்த அறையே அதிரும் அளவிற்கு சிரித்தார். அவரின் சிரிப்பை பார்த்த முரளிக்கு

ஏன் இப்படி சிரிக்கிறார்? என்று ஒரு பக்கம் எரிச்சல் இருந்தாலும் அவர் சிரிப்புக்கான அர்த்தத்தை முரளி அறிந்துகொண்டான்.

நீங்க ஏன் இப்படி சிரிக்கிறீங்க’ன்னு எனக்குத் தெரியும் என்று முரளி சொல்ல

அது என்னப்பா எல்லாரும் நலத்துடன் வாழ்க அப்படின்னு தானே சொல்லுவாங்க. நீ மட்டும் என்ன நிலத்துடன் வாழ்க என்று சொல்ற என்று சுரேஷ் கேட்டார்.

சுரேஷ் நலத்துடன் வாழ்வதற்கு கையில பணம் வேண்டும்; பொருள் வேண்டும்; இல்ல எங்கேயாவது நிலம் இருக்கணும்; இன்னைக்கு தேதியில தங்கத்துல பணத்தைப் போட்டவர்கள் . நிலத்துல பணத்தைப் போட்டவர்கள் மட்டும்தான் நிம்மதியா வாழந்துகிட்டு இருக்காங்க; நம்ம தங்க வியாபாரம் பண்ணலை. நிலத் தரகு வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கோம். அதனால தான் நலத்துடன் வாழ்க அப்படின்னு சொல்வதைவிட நிலத்துடன் வாழ்க அப்படின்னு எழுதி வச்சிருக்கேன். என்ன நம்ம கையில நிலம் இருந்தால் நலம் தன்னால வந்திடும் இல்லையா ?என்று முரளி விளக்கம் சொன்னான்.

நீ பேசாம இருப்பியா என்ன? உன்கிட்ட பேச்சுக் கொடுத்து ஜெயிக்க முடியுமா? நீ தான் பெரிய ஆள் ஆச்சே என்று சுரேஷ் சொன்னார்.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயத்துக்கு வந்து இருக்கேன் என்று சுரேஷ் சொன்னான்.

சொல்லு சுரேஷ் என்ன பண்ணனும் என்று கேட்டான் முரளி.

ஒன்னும் இல்ல ஒரு பார்ட்டி வந்திருக்காங்க. 65 ஆயிரம் கோடி ரூபா தமிழ்நாட்டில் இன்வெஸ்ட் பண்ண போறாங்க. காலேஜ் ஸ்கூல், இப்படி எதுவா இருந்தாலும் அவங்க கை மேல காசு கொடுத்துட்டு அந்த இடத்தை வாங்குவாங்க. ஆனா அத இங்க இருக்கிற முதலாளியே எடுத்து நடத்தலாம். அவர்களுக்கு சம்பளம் கொடுப்போம். வர லாபத்தை நாங்கள் எடுத்துக் கொள்வோம்

351144 இதெல்லாம் சரியா இருக்கணும் என்றுமுரளி கேட்டான்

அதெல்லாம் சரியா இருக்கும்என்று முரளி சொன்னான்.

அப்படியா அப்படின்னா நாம இன்னிக்கு ஆரம்பிச்சுடலாம் என்றான் முரளி.

ஆமா முரளி இது பெரிய பிராஜக்ட் 65 ஆயிரம் கோடி ரூபாயை தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகம் ,கேரளா ,தெலுங்கானா இப்படி எந்த மாநிலத்தில் சொத்துக்கள் இருந்தாலும் என்னோட பார்ட்டி வாங்க தயாரா இருக்காங்க. ஆள மட்டும் காமிங்க . பிஸ்னஸ் ஒரு சதவீதம் கிடைச்சா போதும் நீங்கள் நானும் பெரிய கோடீஸ்வரன் ஆகலாம் என்று சுரேஷ் சொன்னார்.

ஓகே சுரேஷ் கண்டிப்பா நான் இதுபற்றி நான் மத்தவங்க எல்லாத்தையும் சொல்றேன் எல்லாம் ஒயிட் மணி தானே என்று முரளி கேட்டான்.

எல்லாம் ஒயிட் மணிதான் டேக்ஸ் கொடுத்து மத்த எல்லா பணத்தையும் வச்சிருக்கோம். அந்த பார்ட்டிக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இருக்கு 65 ஆயிரம் கோடி ரூபா அப்படிங்கிறது சாதாரண விஷயம் இல்லையே முரளி . என்னை நம்பி அந்தப் பணத்தை ஒப்படைத்து இருக்காங்க. நான் அதைச் சரியா செய்யணும். அப்படி செஞ்சா நீயும் நானும் ஒரே ராத்திரில கோடிஸ்வரன் என்று சொன்னான்.

அதைக் கேட்ட முரளிக்கு தலையிலிருந்து கால் வரை குளிர்ந்தது.

உடனே தனக்குத் தெரிந்த கம்பெனிகள் கல்லூரிகள் டாக்டர்கள் என்று அத்தனை பேருக்கும் போன் செய்து விவரங்களை சேகரித்து கொண்டிருந்தான்.

உங்க கல்லூரியை விக்கனும்னு சொன்னீங்களே என்னாச்சு என்று கேட்டான்.

எதிர்த் திசையில் சொல்லும் பதிலுக்கு தகுந்தது போல தலையை ஆட்டிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஆமோதிப்பது போல் பேசிக்கொண்டே இருந்தான். முரளி 35 114 என்று அடிக்கடி அவர்கள் பேசிக்கொண்டது அங்கே புதிதாக வேலைக்கு சேர்ந்த மாரிக்கு மட்டும் தெரியவே இல்லை .

அவன் இவர்கள் கோடிக்கணக்கில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கணக்கில் பேசுவதை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே இருந்தான் .

என்ன இது நம்ம இருக்கிற வீட்டுக்கு வாடகை கூட கொடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். இவங்க என்னடான்னா அஞ்சாறு மாநிலங்கள் பெற சொல்றாரு. 65 ஆயிரம் கோடி ரூபா பிசினஸ் வேற சொல்றாங்க. என்னது எங்கிருந்து இவ்வளவு பணம் வருது என்று தனக்குத் தானே வியந்து கொண்டான் மாரி.

அவனின் புருவங்கள் ஆச்சரியத்தை அளந்து அளந்து மேலே ஏறி கீழே இறங்கியது.

முரளியும் சுரேசும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் புரண்டு கொண்டிருந்தார்கள். இதை கேட்கக் கேட்க மாரியின் காதுகளில் தேன் ஆறு வந்து பாய்ந்து கொண்டிருந்தது

இடையில் டீயும் கேட்டார்கள் மாரி டீயை அவர்களுக்கு வாங்கி கொடுத்தான். அப்போது மாரி முரளியிடம்

சார் ஒரு சந்தேகம் 35114 அப்படின்னு சொல்றீங்களே அது என்ன சார் என்று கேட்டான்.

சுரேஷும் முரளியும் வாய்விட்டு சிரித்தார்கள்.

தம்பி என்ன ரியல் எஸ்டேட் பிசினசுக்கு புதுசா என்று சுரேஷ் கேட்டான்.

ஆமா சுரேஷ். இப்பதான் புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்காரு என்று சொல்ல

தம்பி 35 114 அப்படிங்கிறது ரியல் எஸ்டேட் பிசினஸ்ல கோட் வேர்ட் அப்படின்னா இன்கம் டாக்ஸ் வரி மற்ற எந்த வில்லங்கமும் சிக்கலும் இந்த சொத்துக்கு இல்ல .எல்லாமே கரெக்டா இருக்கு .வாங்க வாங்க . இதுக்கு டாக்ஸ் கட்ட அவசியமில்லை . அவங்க சொத்துக்கான பணத்தை மட்டும் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். அது தான் இந்த ஆக்டர் ஓட பெயர் 35 114 அப்படிங்கிறது என்று சுரேஷ் சொன்னான்.

மாரியின் ஆச்சரியம் கூடியது. இப்படி வேற இருக்கா என்று அவன் வியந்து கொண்டான்.

இருவரும் ஆயிரக்கணக்கான கோடிகளில் புரண்டு பேசி சிரித்து மற்றவர்களுடன் பேசி ஏதோ ஒரு வழிக்கு வந்தவர்களால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் களிலிருந்து விடுதலை அடைந்து வெளியே வந்தார்கள்.

அப்போது சுரேஷ் ஓகே முரளி நீங்க பாருங்க .சரி அண்ணா எனக்கு போன் பண்ணுங்க. இந்த பிசினஸ்ல நாம ஒரு ராத்திரியில எங்கேயோ போயிடலாம் என்று சொல்லிய சுரேஷ் முரளியின் அலுவலகத்தை விட்டு வெளியேறினார்.

அப்ப உங்களுடைய பதிலுக்கு காத்துகிட்டு இருக்கேன் முரளி என்று சொன்னான்.

மாரி அவரைப் போய் கீழே ஆட்டோவில ஏத்தி விட்டுட்டு வா என்று முரளி பணிக்க

சரிங்க சார் என்ற மாரி

சுரேசை கூப்பிட்டுக் கொண்டு கீழே இறங்கினான்.

பிரதான சாலை என்பதால் பஸ்களும் வண்டிகளும் விரைவாக விரைந்து கொண்டிருந்தன. ஒரு ஆட்டோவை நிறுத்தினான் மாரி

ஆட்டோ மெல்ல நின்றது.

எங்க போகணும் என்று ஆட்டோகாரர் கேட்டார்.

இருக்கும் இடத்திலிருந்து தியாகராயநகர் என்றார் சுரேஷ்

ஆட்டோக்காரன் கொஞ்சம் யோசித்தவன் 80 ரூபாய் கொடுங்க என்றான்.

80 ரூபாய் போயிட்டு வர்றது கேட்கல . நான் 70 ரூபா தான் தருவேன் என்று சுரேஷ் சொன்னான்.

சார் கட்டுபடி ஆகாது சார். பெட்ரோல் விலை அதிகம். பத்து ரூபாயை பார்க்காதீங்க. ரொம்ப கஷ்டம் சார் . யாரும் இப்போ ஆட்டோ ஏறதில்லை. பத்து ரூபாயை பார்க்காம ஒரு ஏழைக்கு உதவி செஞ்சதா நினைச்சுட்டு கொடுங்க சார் என்று கேட்டான்.

இல்ல இல்ல தரமுடியாது 70 ரூபாய் தான் தருவேன் என்று சுரேஷ் சொல்ல

அந்த ஆட்டோக்காரன் ஓடினான்.

மறுபடியும் மாரி இன்னொரு ஆட்டோவை நிறுத்தினான். அவனிடமும் இதே பேரம் சுரேஷ் பேசினான். அவனும் கிளம்பினான்.

யாரும் 70 ரூபாய்க்கு வர சம்மதிக்கவில்லை. இதுவரை பத்து பதினைந்து ஆட்டோக்களை நிறுத்தி விசாரித்திருப்பான் சுரேஷ்

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாரிக்கு மயக்கமே வந்தது .

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஆயிரக்கணக்கான கோடிகளில் புரண்டு கொண்டிருந்த சுரேஷ் முரளி இப்படி பத்து ரூபாய்க்கு சண்டை போட்டுக் கொண்டிருப்பது, உண்மையிலேயே ஆச்சரியத்தை தந்தது .

இவர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் பேசுகிறார்கள். அது உண்மையா இல்லை? வேறு எதுவுமா? அல்லது புரளி விட்டுக் கொண்டு இருப்பார்களா? என்று மாரி நினைத்துக் கொண்டிருந்தான் .

அப்போது வந்து நின்ற அந்த ஆட்டோவிலும் 70 ரூபாய் தான் தருவேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தான் சுரேஷ்.

பத்து ரூபாயை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் அவர் பேசிக்கொண்டிருந்தார். ஆட்டோகாரன் அவருடன் விவாதம் செய்து கொண்டிருந்தான்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டே நின்று கொண்டு இருந்தான் மாரி.

அவன் காதுகளில் சுரேசும் முரளியும் பேசிய 65 ஆயிரம் கோடி ரூபாயின் பேச்சு வந்து வந்து போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *