போஸ்டர் செய்தி

நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கை வெளியிட்டு மக்களை குழப்பும் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

கிருஷ்ணகிரி, ஏப். 15–

தி.மு.க. கூட்டணி குழப்ப கூட்டணி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார் ஸ்டாலின் என்றும் அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி அண்ணா தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி, ஓசூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளார் எஸ். ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோரை ஆதரித்து நேற்று (14–ந் தேதி) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

மத்தியில் நிலையான, வலிமையான அரசு அமைய வேண்டும் என்பதற்காக அண்ணா தி.மு.க.வின் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தலை சந்திக்கிறது. இந்த கூட்டணி மக்கள் நலன் சார்ந்த கூட்டணி, தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் கூட்டணி என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி, குழப்பம் நிறைந்த கூட்டணி.

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியில் உள்ள ப.சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப்பிறகு யார் பிரதமர் என்பதை முடிவு செய்வோம் எனக் கூறுகிறார். இப்படி முரண்பட்ட கருத்துடைய கூட்டணியால் நிலையான, உறுதியான ஆட்சியை எப்படி தரமுடியும். ஆனால் இந்தியா முழுவதும் மாநிலக் கட்சிகளுடன் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணி வெற்றி பெற்றால் நரேந்திர மோடி தான் பிரதமர் என அனைத்துக்கட்சிகளும் அறிவித்து மக்களிடத்திலே வாக்குகள் கேட்டு வருகின்றனர். நரேந்திரமோடி ஒருவரால் மட்டும் தான் ஒரு நிலையான ஆட்சியை தரமுடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

வைகோ பதில் என்ன?

தி.மு.க. கூட்டணியில் வைகோ கட்சியும் உள்ளது. இந்த கட்சியின் வேட்பாளர் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார். அதாவது ஒருவர் ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்றால் அவர் அந்த கட்சியில் இணைந்து போட்டியிடுகிறார் என்பது தான் அர்த்தம். இதுபற்றி வைகோ என்ன சொல்லப்போகிறார். அதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறது ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தி.மு.க. கட்சி சின்னத்திலும் போட்டியிடுகிறது.

இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்? தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கட்சியின் கொள்கையை விட்டுத்தரக்கூடாது. ஆனால் சில கட்சிகள் கூட்டணிக்காகவும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், கொள்கையை விட்டுக்கொடுத்து கூட்டணி அமைக்கிறார்கள். இந்த கூட்டணி ஒரு குழப்பமான கூட்டணியாகத்தான் இருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் எதிரணியினர் குழப்பத்தில் தான் உள்ளனர்.

ராகுல், ஸ்டாலின் வரவே முடியாது

கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்டப்படும் என ராகுல்காந்தி அறிவித்திருக்கிறார். அவ்வாறு அணை கட்டப்பட்டால் ரூ.2 ஆயிரம் கோடியில் நிறைவேற்றப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்காது. தமிழ்நாட்டில் ஸ்டாலின் எப்படி ஒரு போதும் முதலமைச்சராக முடியாதோ, அதே போன்று தான் இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி ஒருபோதும் வர முடியாது.

கோதாவரி காவிரி நதிநீர் இணைப்புத்திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும். அந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்களில் நீர் நிரப்புவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும். நாடாளுமன்ற தேர்தல் என்பது ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் நடைபெறுகின்ற தேர்தல் இந்த தேர்தலில் யார் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும்.

ஸ்டாலின் எப்படி நிறைவேற்றுவார்

மத்திய அரசின் மூலம் மாநிலத்தில் நிறைவேற்றக்கூடிய திட்டங்களை மத்திய அரசிடம் எடுத்துக் கூறி அந்தந்த மாநிலங்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 2021–ல் தான் தேர்தல் நடைபெறும். ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஏதோ, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெறுவது போல எண்ணிக்கொண்டு, மாநில அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்களை செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

நான் முதலமைச்சராக இருக்கும் போது ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதியை எவ்வாறு நிறைவேற்ற முடியும். வாக்காளர் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக இது போன்ற நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. ஒரு துரும்மைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஆனால் தி.மு.க. தான் காவிரி பிரச்சினைக்கு குரல் கொடுத்தது என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் ஸ்டாலின்.

எந்த கட்சி காவிரி பிரச்சனைக்காக குரல் கொடுக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இந்தப் பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. தொழிலாளர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்து திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து ரூ.2000 வழங்கும் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அத்திட்டம் செயல்படுத்தப்படும்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அரசு மக்களுக்கு என்ன செய்தது என்று மேடைக்கு மேடை கேட்டு வருகிறார்.

உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 2011-ம் ஆண்டு அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது 100க்கு 21 பேர் உயர் கல்வி கற்கும் நிலை இருந்தது. இன்று 46.8 ஆக அது உயர்ந்துள்ளது.

அம்மா கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கினார். மருத்துவ கல்லூரி, வேளாண்மை கல்லூரி, கால்நடை கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை கொண்டு வந்தார். அதே போல வேளாண்மைத் துறைக்காக அதிக நிதியை அம்மா ஒதுக்கினார். விவசாயத்துறைக்காக பல்வேறு திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அவை மு.க.ஸ்டாலினுக்கு தெரியவில்லை.

சட்டம் – ஒழுங்கை சரியில்லை என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். இந்தியாவிலேயே தமிழகம் தான் சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் முதலிடம் என பிரபல ஆங்கில நாளிதழ் விருது வழங்கி உள்ளது. அதை நான் பெற்று வந்துள்ளேன்.

மதுரையில் நுழைய முடிந்ததா?

எங்கள் ஆட்சியில் சட்டம் ஒழுங்கை பற்றி பேசும் ஸ்டாலின், தற்போது மதுரையில் காலையில் நடைபயிற்சி செல்கிறார். டிசர்ட் போட்டபடி சென்று ஓட்டு கேட்கிறார். அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவரால் மதுரையில் நுழைய முடிந்ததா?.

மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாக இருந்த நேரத்தில் நானும் எம்.எல்.ஏ.வாக இருந்தேன். 1974ம் ஆண்டு சிலுவம்பாளையத்தில் கிளை செயலாளராக இருந்து பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஒன்றிய பொறுப்பிலும், அவர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவின் சேவல் சின்னத்தில் ஜெயித்து எம்.எல்.ஏ.ஆனேன். பிறகு எம்.பி., கட்சியில் மாவட்ட செயலாளர் பதவி, தலைமை நிலைய செயலாளர், அமைச்சர் என்று இப்படி படிப்படியாக முதலமைச்சராக உயர்ந்தவன் தான் நான். மு.க.ஸ்டாலினின் தந்தை தி.மு.க. தலைவர். இப்போது அவர் தி.மு.க. தலைவர். நான் உழைத்து கட்சியில் உயர்ந்த பதவிக்கு வந்தவன்.

35 ஆயிரம் போராட்டம் தூண்டிவிட்டார்

ஆனால் மு.க.ஸ்டாலின் எப்போதும் என்னை முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறிக் கொண்டே இருக்கிறார். உங்களிடம் நல்ல எண்ணம் இருந்தால் உங்களை தேடி அந்த பதவி வரும். அண்ணா தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த 35 ஆயிரம் போராட்டங்களை தூண்டிவிட்டவர் மு.க.ஸ்டாலின்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார். அவரது கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. பாலியல் பலாத்கார வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ளார். ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கில் தி.மு.க.வினர் கைதாகி உள்ளனர்.

2ஜி வழக்கில் விசாரணை நடந்த நேரத்தில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மர்மமாக இறந்தார். இன்று அவரது மனைவி ஜனாதிபதியிடம், தனது கணவர், மரணம் குறித்து மறுவிசாரணை நடத்த வேண்டும் என்று கூறி உள்ளார். சாதிக் பாட்சாவின் மனைவி தமிழக காவல் துறையில் புகார் அளித்தால் அது பற்றி விசாரணை நடத்தப்படும். அதே போல மு.க.ஸ்டாலினின் நண்பர் அண்ணா நகர் ரமேஷ் மர்மமாக இறந்தார். நாங்களும் மர்ம மரணம் அனைத்தையும் தோண்டி எடுத்து விசாரணை நடத்துவோம்.

ஓசூர் தொகுதி திட்டங்கள்

ஒசூர் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிறது. இந்த தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டதன் காரணமாக தற்போது தேர்தல் நடைபெறுகிறது. ஒசூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் ரூ.15 கோடி மதிப்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

ரூ.8.50 கோடி செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உள் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ரூ.17 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கட்டிடங்கள் கட்டித்தரப்பட்டுள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் 94,000 கழிப்பறைகள் கட்டித்தரப்பட்டுள்ளது. ரூ.10.50 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி மதிப்பில் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற எண்ணற்றப் பணிகள் இந்த ஒரு தொகுதியில் மட்டும் அம்மாவின் அரசு நிறைவேற்றித் தந்துள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வர வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை வரப்பெற்றுள்ளது. ஓசூரில் விமான நிலையம் ஏற்படுத்தி, புதிய விமான பயணிகள் சேவை தொடங்கும் திட்டம் அரசின் ஆய்வில் உள்ளது. இந்த தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் கழக வேட்பாளர் கே.பி.முனிசாமி வெற்றி பெற்று மத்திய அரசிடம் எடுத்துக் கூறி விமான பயணிகள் சேவை திட்டம் தொடங்க நடவடிக்கை எடுப்பார்.

மலர் ஏற்றுமதி மையம்

தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர் ஏற்றம் செய்து இந்தப் பகுதியில் உள்ள ஏரிகள், குளங்களுக்கு நீர் நிரப்பப்படும். ஒசூரில் உலகத்தரம் வாய்ந்த நவீன மலர் ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும். 12 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் ஏற்படுத்தப்படும். 900 ஏக்கர் பரப்பில் புதிய சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும். இதன் மூலம் 50,000 படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்தப்பகுதியில் செயல்படும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, அரசின் திட்டங்கள் தொடர்ந்து மக்களுக்கு கிடைத்திட கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் கே.பி.முனுசாமிக்கும், ஒசூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளார் எஸ். ஜோதி பாலகிருஷ்ண ரெட்டிக்கும் எம்.ஜி.ஆர் கண்ட, புரட்சித்தலைவி அம்மாவால் கட்டிக்காத்த வெற்றிச் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *