அமரேசன் பட்டப்படிப்பு முடிந்த கையோடு அவன் எழுதிய வங்கிப் பணி தேர்வில் தேர்வாகி வங்கியில் வேலைக்குச் சேர்ந்தான். வங்கியில் படிப்படியாக வேலைகளைக் கற்றுக் கொண்டான். ரூபாய் நோட்டுக்களில் கள்ள நோட்டுக்களை எவ்வாறு கண்டறிய வேண்டும் என்பதனை முழு கவனம் செலுத்தி அறிந்து கொண்டான். தற்போது அதை கண்டுபிடிக்க கருவிகள் இருந்தாலும் அமரேசன் ரூபாய் நோட்டைத் தொட்டவுடன் அதன் தன்மையைக் கூறும் அளவிற்கு திறமை பெற்றிருந்தான். அமரேசன் பணி செய்யும் வங்கியின் பல கிளைகளுக்கு அமரேசன் சென்று நோட்டின் தரம் பற்றி அறிந்து கொள்ளும் முறையை கற்றுக்கொடுத்தான். நாளுக்கு நாள் அமரேசன் திறமை நன்கு வெளிப்படத் தொடங்கியது.
அமரேசனை அவன் கூட வேலை பார்க்கும் தோழர்கள் நன்கு ஊக்கப்படுத்தினார்கள். சீக்கிரம் பதவி உயர்வு பெறும்படி கூறினார்கள். அமரேசனுக்கு கள்ளப் பணப்புழக்கத்தை ஒழிப்பது பற்றிய சிந்தனையே அவன் மனதில் வலம் வந்து கொண்டு இருந்தது. பலவித கோணங்களில் அவன் இது பற்றி யோசிக்கலானான். ஒவ்வொரு யோசனையிலும் ஏதாவது ஒரு மாறுபட்ட கருத்துத் தோன்றி அவனை யோசிக்க வைத்தது . சரி எப்படியிருந்தாலும் ஏதாவது ஒரு யோசனை தோன்றாதா என்ற நம்பிக்கையுடன் வலம் வந்தான் அமரேசன்.
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்னர் வங்கிப் பணி ஆரம்பமானதால் கிளையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. பணம் எடுக்க மற்றும் செலுத்த நிறைய வாடிக்கையாளர்கள் திரண்டதால் கிளை மேலாளர் அமரேசனை அழைத்து கூடுதலாக ஒரு கவுண்டர் திறந்து காசாளாராக அமர்த்தினார். வந்திருந்த தெரிந்த வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கி வைத்து கொண்டு பிறகு எண்ணி விட்டு கணக்கில் வரவு வைப்பதாகக் கூறி அனுப்பினான் அமரேசன். அடுத்தடுத்து வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைந்தவுடன் வாங்கி வைத்தவைகளை எண்ணினான். அதில் ஒரு வாடிக்கையாளர் தந்த பணத்தில் இரண்டு கள்ள நோட்டுக்கள் இருப்பதை ஊர்ஜிதம் செய்த அமரேசன் கிளை மேலாளரிடம் தெரியப் படுத்தினான். மனம் வருந்தினான் அமரேசன் .
அன்று கணக்கை முடித்து கொடுத்து விட்டு மிகவும் சோர்வாகவே அமரேசன் வீடு வந்து சேர்ந்தான். வந்து சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்தவன் மனதில் கள்ள நோட்டு பற்றிய சிந்தனையே வலம் வந்தது. பின்னர் இரவு உணவை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றான் அமரேசன். அப்போது திடீரென வந்த சிந்தனையில் ஆழ்ந்து கண்ணை மூடினான்.
தனது சிந்தையில் உதிர்ந்த அந்த யோசனையை ரிசர்வ் வங்கி சேர்மனுக்குக் கடிதம் மூலம் தெரிவித்தான். அவரும் அதைப் பார்த்து விட்டு அமரேசனை நேரில் வந்து விவரத்தைக் கூறும்படி அழைத்தார்.
*
அமரசேனும் மும்பை சென்று சேர்மனைச் சந்தித்து தனது யோசனைகளைக் கூறினான். அதாவது புழக்கத்தில் உள்ளபணம் பத்து வருடங்களுக்குப் பின்பு தனது நிறம் மாறி வெளிறிப் போகும் அளவில் அச்சடித்தால் கள்ள நோட்டுக்கள் ஒழிப்பிற்கு அடித்தளம் அமைக்கும் என்றான் அமரேசன். அந்த நோட்டில் மேலும் வங்கியில் மாற்றவும் என்று அச்சடித்தால் நலம் என்றான். புழக்கமின்றி வெளிறிய பழைய நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று கூறினால் பணம் எவ்வளவு புழக்கத்திலிருந்து வெளியேறியதையும் கணக்கிடலாம் என்றான். அமரேசன் இது ஒரு சிறிய முயற்சியே என்றதும் சேர்மன் சரி ஆராய்ந்து பார்க்கலாம். உங்களது முயற்சிக்கு என்து பாராட்டுக்கள் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் மத்திய நிதித்துறையில் உள்ள மேலாதிகாரியை தொடர்பு கொண்டு இந்த யோசனையைக் கூற அவர் எல்லா பேப்பர்களையும் அனுப்பச் சொன்னார். நல்ல விதமாக ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால் பிரதம மந்திரியிடம் நேரே காண்பித்து மேற்காண்டு ஆவண செய்ய ஏற்பாடு செய்யலாம் என்றார். சேர்மன் மிகுந்த மகிழ்ச்சியுடன் அமரேசனிடம் சார் அச்சடிக்கப்படும் நோட்டுக்கள் குறிப்பிட்ட காலம் வரை தன் நிறம் மாறாமல் இருக்கும்படியும் அமைய வேண்டுமென கூறினான். உங்களது யோசனை நிறைவேறினால் எல்லா நாடுகளும் இந்த யுக்தியை கையாளலாம் என்றதும் அமரேசன் வானில் பறப்பதைப் போன்ற உணர்வில் மிதந்தான்.
அப்போது அங்கு தொபுக்கடீரென சப்தம் கேட்க அமரேசன் மனைவி சென்று பார்க்க அமரேசன் கட்டிலிலிருந்து கீழே விழுந்திருப்பதைக் கண்டு என்னங்க என்னாச்சு என கேட்க இது நிறைவேறுமா, நிறைவேறுமா என அமரேசன் முனங்க, மனைவி அவரைத் தட்டி சுயநிலைக்குக் கொண்டு வர, அமரேசன் கட்டிலில் ஏறி எதுவும் நடவாதது போல் படுத்து தூக்கத்தைத் தொடர்ந்தான்.