செய்திகள்

“நிறுத்திய மின்சாரத்தை மீண்டும் கொடு”: விஜய் நடித்த ‘கத்தி’ சினிமா பாணியில் மக்கள் நடத்திய போராட்டம் வெற்றி

அவுரங்காபாத், செப்.12-

எங்கள் கிராமத்துக்கு நிறுத்திய மின்சாரத்தை மீண்டும் கொடு என்று வலியுறுத்தி அவுரங்காபாத்தில் பொதுமக்கள் நடத்திய 3நாள் தொடர் போராட்டம் வெற்றியடைந்தது. நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தில் வந்ததை போலவே மக்கள் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ருசிகர சம்பவம் பின்வருமாறு :

பீகார் மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் 1000 மெகவாட் திறனுடைய அனல் மின் நிலையம் உள்ளது. இந்த அனல்மின் நிலையம், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் மற்றும் ரெயில்வே ஆகியவற்றுக்கு இடையே கூட்டு ஒப்பந்தமாக செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார கிராமங்கள் திருட்டுத்தனமாக 7 ஆண்டுகளாக மின்சாரத்தைப் பயன்படுத்தி வந்துள்ளன. இந்நிலையில், அந்த கிராமங்களுக்கு செல்லும் மின்சார சப்ளையை கடந்த சனிக்கிழமை பாரதிய ரெயில் பிஜ்லீ நிறுவனம் நிறுத்தியது.

ஞாயிற்றுக்கிழமையன்று சுரார், சல்யா, கைரா மற்றும் கோகரா பாந்த் ஆகிய 4 கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்களின் கிராமங்களுக்கு நிறுத்திய மின்சாரத்தை மீண்டும் தர வேண்டும் என்று அந்நிறுவனத்தின் குடியிருப்பு வளாகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். வளாகத்தின் மெயின் கேட்டை முற்றுகையிட்ட அவர்கள் உள்ளே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை. அதேபோல், குடியிருப்புக்குள் இருப்பவர்களையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது.

தவிர பால், காய்கறிகள், மருந்துமாத்திரை ஆகிய அத்தியாவசிய பொருட்களை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் குடியிருப்பு வளாகத்துக்குள் கற்களை வீசி எறிந்தனர். கேட்டின் முன்பு டயர்களை கொளுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அந்நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள், அவர்களின் குடும்பத்தினர் 150 பேர் குடியிருப்புக்குள்ளேயே சிக்கி தவித்தனர். சொல்லொண்ணாத் துயருக்கு ஆளாகினர்.

அடுத்த நாள் திங்கட்கிழமை மின்விநியோக நிறுவனம், போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தது. நேற்று மாலை போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சார சப்ளை மீண்டும் வழங்கப்படும் என உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இது தொடர்பாக நபிநகர் வட்ட அதிகாரி ராகேஷ் குமார்

கூறியதாவது :-

பாரதிய ரெயில் பிஜ்லீ நிறுவன அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சவுத் பீகார் மின்விநியோக நிறுவனம் மின்சார சப்ளையைத் தரும் வரை பாரதிய ரெயில் பிஜ்லீ நிறுவனம் மின்சாரம் சப்ளை செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், போராட்டம் கைவிடப்பட்டது. இவ்வாறு அதிகாரி ராகேஷ் கூறினார்.

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் மேலாளர் விஸ்வநாத் சந்தன் கூறும்போது, “மனிதாபிமான அடிப்படையில் கிராம மக்களுக்கு மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கப்படும்”என்றார்.

2014ஆம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளியான ‘கத்தி’ படத்தில் ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியில், ஊடகங்களின் கவனத்தை பெற நிலத்தின் உரிமையாளர்கள், 5 ஏரிகளில் இருந்து சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் பைப்லைனில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். தண்ணீர் கிடைக்காமல் சென்னை மக்கள் அவதிப்படுவார்கள். அதன்மூலம் அவர்கள் தேசிய ஊடகங்களின் கவனத்தை பெறுவார்கள். அப்போது தான் நிலத்தடி நீர் கார்ப்பரேட் நிறுவனங்களால் சுரண்டப்பட்டு, அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு நீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படும் நிலை தெரிய வரும். முடிவில் பிரச்சினைக்கு திர்வு காணப்படும். அதைப்போல, பீகாரிலும் பாரதிய ரெயில் பிஜ்லீ நிறுவன ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்களை நிறுத்தி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *