சிறுகதை

நிறம் | ஆவடி ரமேஷ்குமார்

தன்னைப் பார்க்க வீட்டிற்குள் நுழைந்தவரை பார்த்து “வா வா நடேஷா, பார்த்து ரொம்ப நாளாச்சு” என்றபடி வரவேற்றார் சிவசாமி.

சிரித்தபடி ஹால் ஷோபாவில் அமர்ந்த நடேஷன், ” சிவசாமி நீ செஞ்சது கொஞ்சங்கூட நல்லா இல்லே” என்றார் கண்டிப்பு கலந்த குரலில்.

” நான் என்ன செஞ்சேன்; எது நல்லா இல்லே; இப்படி தலையும் இல்லாம வாலும் இல்லாம சொன்னா எப்படி நடேஷா!”” உன் பையன் பாண்டியனை நீ வீட்டை விட்டு துரத்திட்டியாமே..!”

“ஆமா.நான் அவனுக்காக அழகழகா சிகப்பான பொண்ணுகளா ஆறேழு பார்த்து வச்சிருந்தேன். போட்டோஸ் கூட காட்டினேன். யாரையும் பிடிக்கலைனுட்டான். அது மட்டுமா நான் பார்க்கிற எந்த பொண்ணையும் கட்டிக்க மாட்டானாம்.அவனே தனக்கு பொண்ணு பார்த்துக்கிறேனுட்டான். என்னை ஒரு அப்பனா மதிக்காத பிள்ளை எனக்கெதுக்கு? அதான் ‘வீட்டை விட்டு போ’னு அனுப்பிட்டேன்.

ஆமா இதெல்லாம் யார் உனக்கு சொன்னா?”

” பாண்டியன் தான் சொன்னான். அவன் இப்ப கல்யாணம் பண்ணிட்டான். என் வீட்டுக்கு எதிர்ல இருக்கிற வாடகை வீட்டுக்கு தான் குடி வந்திருக்கான். நான் தான் அவனை கவனிச்சு அங்க போய் விசாரிச்சேன்.”

” ஓ…கல்யாணமே பண்ணிட்டானா?!””

ம்… உன் புது மருமகளை பார்க்கிறியா…என் செல்லுல போட்டோ எடுத்து வச்சிருக்கேன்””

எங்கே காட்டு” ஆர்வமாக கேட்டார் சிவசாமி . நடேஷன் காட்டினார்.

சிவசாமியின் முகம் அஷ்டகோணலானது.

” ச்சீ, என்ன ரசனையிது…அட்டக்கறுப்பான பொண்ணைப் போய் பிடிச்சிருக்கான். பாண்டியன் என்னை மாதிரியே நல்ல சிகப்பு; அழகும் வேற. ஏன் இப்படி பண்ணினான் ” புலம்பினார் சிவசாமி.”

எல்லாம் நீ செய்த பாவம் தான் சிவசாமி!”

” என்னது, நான் செய்த பாவமா…என்னய்யா சொல்ற?”

” பின்ன உனக்கு உங்கம்மா அப்பா உன் தாய் மாமன் பொண்ணைத்தானே ‘ கறுப்பா இருந்தாலும் குணத்துல தங்கம்’ னு சொல்லி கட்டி வச்சாங்க.

தான் கறுப்பா இருந்தாலும் உன்னை மாதிரியே சிகப்பா அழகாத்தானே பாண்டியனை பெத்துப்போட்டாள். அவளைப்போய் நிறத்தை காரணம் காட்டி பல வருஷமா நீ குத்தி குத்தி பேசிட்டே இருந்தியாமா. மனசு நொந்து போய் தான் அவ தற்கொலை பண்ணிட்டாளாம். இது பாண்டியனோட மனசை ரொம்பவும் பாதிச்சிடுச்சாம். இனி ‘கல்யாணம் பண்ணினால் அம்மா மாதிரி கறுப்பா இருக்கிற பொண்ணைத்தான் கட்டுவேன்’னு அவன் மனசுக்குள்ள ‘ சபதம்’ பண்ணியிருந்தானாம். அதான் நீ பார்த்த பொண்ணுகளை நிராகரிச்சிட்டே வந்திருக்கான். உண்மையை அவன் உன்கிட்ட சொல்ல பிடிக்கலயாம். சரி, இப்ப உனக்கு உண்மை புரிஞ்சுதா?”

‘‘புரிந்தது…… ’’என்று தலையை ஆட்டிவிட்டு மௌனமாய் இருந்தார் சிவசாமி.

மறுநாள்…..

பாண்டியனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மருமகளோடு அவனை தன் வீட்டுக்கு அழைத்து வருவது’ என்ற முடிவுடன் பாண்டியனின் வீட்டுக்கு புறப்பட்டார் சிவசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *