பெங்களூரு, அக். 01–
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்க கர்நாடகா உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக பெங்களூரு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜனாதிகாரா சங்கர்ஷ பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் ஆதர்ஷ் ஐயர் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், தோ்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 8,000 கோடி அளவுக்கு பணம் பறிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறையினருக்கு கடந்த மாதம் 27 ந்தேதி உத்தரவிட்டது.
விசாரிக்க இடைக்கால தடை
இதையடுத்து, பெங்களூரு, திலக் நகர் காவல் நிலையத்தில் ஆதர்ஷ் ஆர்.ஐயர் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 384, 120பி, 34 ஆகியவற்றின் கீழ் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமலாக்கத் துறை அதிகாரிகள், பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மாநிலத் தலைவர் விஜயேந்திரா உள்ளிட்ட நிர்வாகிகள் மீது செப்டம்பர் 28 ந்தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக முன்னாள் பாஜக தலைவர் நளின் குமார் அந்த மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நிர்மலா சீதாராமன் உட்பட பாஜக தலைவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையை அக்டோபர் 22 ந்தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி நாகபிரசன்னா, அதுவரை வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டார்.