செய்திகள்

நிர்மலா சீதாராமனுடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு

பின்னலாடை தொழில் பாதிப்புகளை விளக்கினர்

புதுடெல்லி, மே.19-

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கனிமொழி எம்.பி. தலைமையில் தமிழக எம்.பி.க்கள் சந்தித்து பின்னலாடை தொழில் பாதிப்புகளை விளக்கினர்.

பருத்தி நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, விலை உயர்வை தடுக்க வேண்டும் என்றும், நெசவாளர்களின் பிரச்சினைகளைக் களைய வேண்டும் எனவும் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி மக்களவை தி.மு.க. குழு துணைத்தலைவர் கனிமொழி தலைமையில், நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களவை தொகுதிகளின் எம்.பி.க்கள் சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன், பொள்ளாச்சி கு.சண்முகசுந்தரம் (இருவரும் தி.மு.க.), கரூர் ஜோதிமணி (காங்கிரஸ்), நாமக்கல் ஏ.கே.பி.சின்ராஜ் (கொங்கு மக்கள் தேசிய கட்சி) ஆகியோர் நேற்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து இதுதொடர்பாக வலியுறுத்தினார்கள்.

அதுகுறித்து கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் பின்னலாடைத் தொழிலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. பல பேர் தொழிற்சாலைகளையே மூடிவிட்டுப் போகக்கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது என்பதை எடுத்துச்சொல்லி பிரதமர், நிதி மந்திரி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து கொடுத்தோம். அங்குள்ள பிரச்சினைகள், நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டங்களை எடுத்துச்சொல்லி இருக்கிறோம்.

பின்னலாடை தொழில் நிறுவனங்களுக்கான கடன் கால வரம்பு தற்போது 3 மாதங்கள் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதை 8 மாதங்களாக நீட்டித்தால் அங்குள்ள தொழில்முனைவோருக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தோம். அதைப்போல வங்கிகள் கடன் தருவதற்கான விளிம்புத்தொகை 25 சதவீதமாக உள்ளதை 10 சதவீதமாக குறைக்க வலியுறுத்தினோம். நிதி அமைச்சர் இதுபற்றி கலந்தாலோசித்து அதற்கான வழிவகைகளை செய்வதாக சொன்னார்.

முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இறக்குமதி வரியை செப்டம்பர் 30-ந் தேதி வரை மத்திய அரசு ரத்து செய்து இருக்கிறது. அதை செப்டம்பர் வரை கையெழுத்து ஆகும் அத்தனை ஒப்பந்தங்களுக்கும் பயன்படுத்துமாறு முதலமைச்சர் கோரிக்கை வைத்திருந்தார். அப்படியே செய்வதாக மந்திரி உறுதி அளித்தார்.

ஏற்றுமதி குறைக்கப்பட வேண்டும், இங்குள்ள நிறுவனங்களுக்கு பருத்தி அதிகளவில் தரவேண்டும் என்றும் வலியுறுத்தினோம். அதற்கான நடவடிக்கைகள் என்ன என்பதை ஆலோசித்து சொல்வதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பருத்தி விலை உயர்வுக்கு தீர்வு காண்பதாகவும் சொல்லி இருக்கிறார். வேலைநிறுத்த பாதிப்புகளையும் எடுத்துச் சொன்னோம்.

இவ்வாறு கனிமொழி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.