புதுடெல்லி, ஜூலை 23–
நாடாளுமன்றத்தில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
கடந்த மார்ச் மாதம் 2024–25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில், முழு பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மோடி அரசின் கீழ் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7வது பட்ஜெட் இதுவாகும்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பட்ஜெட்டின் முன்னோட்டமாக கடந்த 2023–24 நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நேற்று நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.
இன்று காலையில் நிதியமைச்சகத்துக்கு வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், வழக்கம்போல் அங்கே நிதியமைச்சக அதிகாரிகளுடன் பட்ஜெட் உரை அடங்கிய டேப்ளட்டுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிர்மலா சீதாராமனுக்கு திரவுபதி முர்மு இனிப்பு ஊட்டினார்.
அப்போது 2024–25 மத்திய பட்ஜெட் அறிக்கையை ஜனாதிபதியிடம் கொடுத்து ஒப்புதலைப் பெற்றார் நிர்மலா சீதாராமன்.
அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்றார் நிர்மலா சீதாராமன்.
கடந்த 3 ஆண்டு காலமாக காகிதப் பயன்பாடு இல்லாமல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்றும் அதே நடைமுறை தொடர்ந்தது.