செய்திகள்

நிரவ் மோடியின் முறையீடு மனு: பிரிட்டன் நீதிமன்றம் தள்ளுபடி

லண்டன், ஜூன் 24–

இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக பிரிட்டன் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரிய நிரவ் மோடியின் மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்தியாவில் வங்கிக்கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி மீதான விசாரணை தீவிரமடைந்ததால், அவர் கடந்த 2018ஆம் ஆண்டு லண்டனுக்குத் தப்பிச் சென்றார். சிபிஐ வேண்டுகோளின் பேரில், அங்கு கைது செய்யப்பட்ட நிரவ் மோடி, லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன.

நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கோரி இந்தியா சார்பில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

நாடு கடத்தல் உறுதி

மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பான பூர்வாங்க ஆதாரங்கள் இருப்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும், அதனால், அவர் இந்தியாவுக்குத் திரும்பி அந்த வழக்குகளை சந்திக்க வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி கூறினார்.

நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் உத்தரவிட்டார். அதன்பின்னர், நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி, பிரிட்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், அவரது மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் நிரவ் மோடியை நாடு கடத்தும் பணியை அதிகாரிகள் விரைவில் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *