செய்திகள்

நிரம்பும் நிலையில் மேட்டூர் அணை; நடப்பு ஆண்டில் 3வது முறையாக இன்று மேட்டூர் அணை நிரம்புகிறது

Makkal Kural Official

சேலம், டிச. 31–

120 அடி நீர்த்தேக்க உயரம் கொண்ட மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 119.97 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இன்று மாலை முழு கொள்ளவை எட்டி நிரம்பும் தருவாயில் நடப்பு ஆண்டில் 3வது முறையாக அணை திறக்கப்படுகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.97 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 516 கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 875 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணையின் நீர்மட்டம் 119.87அடியிலிருந்து 119.97அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.42 டிஎம்சியாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஜூலை 30–ந்தேதி அணை 120 அடியான முழு கொள்ளளவை எட்டியது. மீண்டும் ஆகஸ்ட் 12–ந்தேதி 2வது முறையாக 120 அடியை எட்டியது. அதன் பின் நீர்வரத்து சரிந்த நிலையில், அணையில் இருந்து தொடர்ச்சியாக டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த அக்டோபர் 18–ந்தேதி அணை நீர்மட்டம், 89.26 அடியாக சரிந்தது.இன்று மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப உள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் இருப்பதால் இன்று காலை நீர்வளத் துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் சேலம் கண்காணிப்பு பொறியாளர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர்கள் செல்வராஜ், மதுசூதனன் ஆகியோருடன் மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார்.

அணையின் வலது கரை, இடது கரை ஆய்வு சுரங்க பகுதி ஆகியவற்றை பார்த்தார். மேட்டூர் அணை இடது கரை அமைந்துள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் அதிகாரிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் தயாளகுமார் பேசும் பொழுது ”இன்று மாலைக்குள் மேட்டூர் அணை நிரம்பும். நீர்வரத்து குறைவாக இருப்பதால் அணை நிரம்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. உபரிநீர் திட்டத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டெல்டா பாசனத்திற்கு தேவையை பொறுத்து தடையின்றி தண்ணீர் வழங்கப்படும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *