சிறுகதை

நிரந்தர முகவரி! |ரவிக்குமார்

முழு ஊரடங்கில் அந்தப் பிரதான சாலையில் எல்லாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. அங்கே ஆண்டாண்டுக் காலமாக நடைப் பாதையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில குடும்பங்கள் இதனால் திண்டாடிப் போயின!

காலையில் அங்கே கடைகளின் எதிரே பெருக்கி தண்ணீர் தெளித்து பகலில் பூக்கட்டி விற்பது அந்த நடைப்பாதைக் குடும்பப் பெண்களின் வேலை.

ஆண்கள் கடைகளுக்கு அவ்வப்போது வரும் சரக்குகளை வேன்களிலிருந்து இறக்க அல்லது குடோனிலிருந்து எடுத்து வர அந்தக் கடைகளில் கூலி வேலை செய்து பணம் சம்பாதிப்பார்கள். அதில் பெரும்பகுதி குடிக்குப் போக எஞ்சியிருப்பதை வீட்டுக்குத் தருவார்கள்.

இவர்கள் மீது கடையில் வேலை செய்பவர்கள் முதல் முதலாளிவரை ஓர் இனம்புரியாத பரிதாபம் உண்டு. ஏனெனில் இரவில் இவர்கள் கடைகளைக் காவல் காப்பவர்களுக்கு உறுதுணையாகவும் ஓரளவுக்கு இவர்களும் பாதுகாவலாகவும் இருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அக்கம் பக்கத்தில் வெளியிடங்களில் இருந்து திருட வருபவர்கள் இவர்கள் கண்ணிலிருந்து தப்பிக்க முடியாது. இரவில் நடக்கும் திருட்டுக் குற்றங்களுக்கும் இது பொருந்தும்.

எனவே போலீசார் ஊரில் திருட்டு நடந்தால் இவர்களிடம்தான் முதலில் விசாரிப்பார்கள். பல திருட்டுக் குற்றங்களில் துப்புத் துலங்க இவர்கள் போலீசாருக்கு உதவியிருக்கிறார்கள்.

இவர்களைப்பற்றி என் நண்பன் ரகுதான் எனக்கு முதன்முதலில் தகவல் அளித்தான். இவர்களின் வாழ்க்கை முறைகளை என்னிடம் கூறியிருக்கிறான். அவனுக்கு இவர்கள் மீது மிகவும் பொறாமை உண்டு. என் நண்பனின் வாழ்க்கையில் நடந்த ஃப்ளாஸ்பேக் அதை அப்படியே சித்தரிக்கிறேன்:

பதினொரு மாதங்களுக்கு ஒரு முறை போடும் வாடகை வீட்டின் குடியிருப்புப் புது ஒப்பந்தத்தின்போது வீட்டு உரிமையாளர் எழுதச் சொல்லும் கெடுபிடியான நிபந்தனைகளாலும் முன்பிருந்த வாடகையைத் தவறாமல் தன் சுயஉபயோகத்துக்குத் தேவைப்பட்டாலும் விட்டுக் கொடுப்பதாகச் சொல்லி உயர்த்தும் சாதுரியத்தையும் நினைத்துச் சொந்தமான வீடும் நிரந்தர முகவரியும் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம் என்று மனதுக்குள் எண்ணி மறுகுவான் ரகு!

அன்று அந்த நடைபாதையில் இவன் முன்னே சென்றுகொண்டிருந்த தபால்காரர் பாதை ஓரத்தில் வசித்துக் கொண்டிருக்கும் பெண் ஒருத்தியிடம் கடிதம் ஒன்றினை விசாரித்துக் கொடுப்பதைப் பார்த்தான்.

அவரருகில் சென்று விசாரித்தான்…

“வீடு வாசல் இல்லாம இங்க பிளாட்ஃபார்மில் குடியிருக்கிற இவங்கள எப்படிக் கண்டுபிடிச்சி டெலிவரி பண்றீங்க?”

“சார், பல வருஷமா இங்க இருக்கறவங்க, இந்த இடத்துக்கு முன்னால் உள்ள கடையின் பெயரோட அதன் அட்ரஸ மத்தவங்களுக்குக் கொடுத்திருப்பாங்க. இவங்க பெயரில் கடையின் அட்ரஸோட வர்ற கடிதத்தை முதலில் கடையில் விசாரிச்சிட்டு அங்க அந்தப் பெயரில் ஆளில்லைனா இங்க விசாரிச்சா தெரிஞ்சிடும்! சில நேரங்களில் கடைக்காரங்களும் இவங்க இங்க இருக்கிறதச் சொல்வாங்க!”

“எப்படி இப்படி ஓர் எழுதப்படாத ஒப்பந்தமும் புரிதலும் சாத்தியம்?” என்று கேட்ட ரகுக்கு அந்தத் தபால்காரர் சொன்னார்:

“கடைகள் முன்னாலுள்ள நடைபாதையில் பல தலைமுறைகளாகக் குடும்பத்துடன் வாழும் இவர்கள் இரவில் கடைகள் மூடியபின் கடைகளின் பாதுகாப்புக்கு உதவுகிறார்கள். அதிகாலையில் கடைகளின் முன்னே பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கடைகள் சுத்தமாக இருக்கவும் உதவுகிறார்கள். இவற்றிற்காக ஒவ்வொரு கடையிலும் குறைந்த கூலி கிடைத்தாலும் பல கடைகளிலிருந்து கூலி பெறுவதால் இவர்களுக்கு மாதந்தோறும் நல்ல வருமானம் கிடைக்கிறது! இதனால் கடைக்காரர்களுக்கும் அதிக செலவில்லை! ஆனால் இவர்களிடமிருந்து கிடைக்கும் ஆதாயம் அதிகம்! ”

“இவ்வளவு விஷயம் இருக்குதா?” என்று ஆச்சரியப்பட்டவனிடம்

“இவை எல்லாவற்றையும்விட அக்கம் பக்கத்தில் இரவில் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற எந்த அசம்பாவிதம் நடந்தாலும் போலீசாருக்கு இவர்கள் உதவியாகவும் இருக்கிறார்கள்!” என்று மேலும் விவரித்தார் தபால்காரர்.

திறந்த வெளியில் நடைப்பாதையில் வசிக்கும் அவர்களுடன் ஒப்பிடும்போது வாடகை வீட்டில் இருக்கும் தான் எவ்வளவோ மேல் என்றாலும் நிரந்தர முகவரி கொண்டு வாடகை இல்லாமல் எழுதப்படாத ஒப்பந்தத்துடன் வாழும் அவர்களைப் பார்த்துப் பொறாமைப்பட்டான் ரகு!

ஆனால் இப்போது இவர்கள் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாகிவிட்டது. ஊரடங்கு இவர்களின் நிம்மதியைக் குலைத்துவிட்டது.

ரகுவும் இவர்கள் மீது தான் கொண்ட பொறாமையை விட்டுவிட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *