நியூயார்க், ஜன. 28–
ஒருநாளில் 660 ரெயில்கள் வந்து செல்லும் நியூயார்க் நகரின் “கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்” நிலையம், 44 நடைமேடைகள், 67 ரெயில் பாதைகளுடன் உலகின் மிகப்பெரிய ரெயில் நிலையமாக உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் தான் உலகிலேயே மிகப்பெரிய ரெயில் நிலையம் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
48 ஏக்கர் பரப்பளவிலான இந்த பிரம்மாண்ட ரெயில் நிலையத்தை கட்ட 10 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளனர். 1903 ஆம் ஆண்டு தொடங்கி 1913 வரை கட்டுமானப் பணிகள் நடந்து, 1913 பிப்ரவரி 2 ந்தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு திறப்பு விழா நடைபெற்றது. அதன்பிறகு பல்லாயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்லும் இடமாக மாறிவிட்டது.
அரண்மனை போன்று ஏராளமான கலை நுணுக்கங்களும், அற்புதமான கட்டடக் கலையும் இருப்பதால், ரயில் பயணிகள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்லும் இடமாக இருக்கிறது. 112 ஆண்டுகளை கடந்தும் இன்னும் பிரும்மாண்டமாக காட்சி அளிக்கிறது.
நியூயார்க் கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் ரயில் நிலையத்தில் 44 நடைமேடைகளும் மொத்தம் 67 தண்டவாளங்களும் இடம்பெற்றுள்ளன. அதில் இரண்டு சுரங்க வழி தண்டவாளங்கள் ஆகும். உலகிலேயே மிகப்பெரிய ரெயில் நிலையம் என்ற தகுதிக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. தற்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,25,000 பேர் வந்து செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நாளில் 660 ரெயில்கள்
ஒரு நாளில் 660 ரெயில்கள் நியூயார்க் கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் ரயில் நிலையம் வழியாக கடந்து செல்கிறதாம். ஹாலிவுட் படங்களின் ஷூட்டிங் பலவும் இந்த ரெயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் ரயில் நிலையத்தில் 61 வது நடைமேடை, ரகசிய நடைமேடையாக இருந்து வருகிறது. அது வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலுக்கு அடியில் சுரங்க வழிப் பாதையாக உள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் ஒருமுறை ஓட்டலில் இருந்து ரகசிய நடைமேடைக்கு சென்று பயணம் செய்ததாக கூறப்படும் நிலையில், பொதுமக்கள், பயணிகள் யாரும் இந்த நடைமேடையில் அனுமதிக்கப்படுவது இல்லை.