போஸ்டர் செய்தி

நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை

புதுடெல்லி,நவ.2–

நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கிய தேசிய பசுமை தீர்ப்பாயம், நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தது. தேனி மாவட்டம் பொட்டிபுரம் அம்பரப்பர் மலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2011-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில், அங்கு சுரங்கம் அமைக்கும் பணிகள் தொடங்கின. ஆனால் இந்த ஆய்வகத்தால் மேற்கு தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழலும், பல்லுயிர் பெருக்க இடங்களும் அழியும் என்று இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம் இந்த திட்டத்துக்கு அனுமதி மறுத்தது.

இந்நிலையில் டாட்டா நிறுவனம் சார்பில் மத்திய அரசிடம் புதிதாக ஒரு மனு ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசிடம் ஆலோசனை கேட்காமலேயே ஆய்வக பணிகளை தொடரலாம் என அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

அதில், “நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகுதான் ஆய்வகத்துக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். மேலும் சட்ட விதிகளுக்கு புறம்பாக நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கைக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்தியவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு விசாரணை நடத்தியது. கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசு, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் டாடா நிறுவனம் சார்பில் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த நீதிபதிகள், நியூட்ரினோ திட்டம் தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த இடைக்கால தடை விதிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அதேசமயம் இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். இந்த திட்டத்தினால் வன உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுமா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *