செய்திகள்

நியூசிலாந்து அரை இறுதிக்குள் நுழைந்தது: போராடி தோல்வியை தழுவிய இந்தியா

Spread the love

மான்செஸ்டர், ஜூலை 11–
மழையின் காரணமாக நிறுத்தப்பட்டு நேற்று தொடர்ந்து நடந்த முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. கடைசி வரை போராடிய இந்திய அணி தோல்வியை தழுவியது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா–நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது அரை இறுதி ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்தபோது பலத்த மழை பெய்ததால் ஆட்டத்தை தொடர இயலவில்லை. அரை இறுதி சுற்றுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) உண்டு என்பதால் நேற்று இந்த ஆட்டம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தது.இதையடுத்து நியூசிலாந்து அணி தனது ஆட்டத்தை தொடர்ந்து எஞ்சிய 23 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை பறி கொடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 239 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா தனது ஆட்டத்தை தொடங்கியது. ஆனால் ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. மூன்று முன்னணி ஆட்டக்காரர்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பி ரசிகர்களை ஏமாற்றினர்.
இந்த தொடரில் 5 சதங்கள் அடித்து சாதனை படைத்த துவக்க வீரர் ரோகித் சர்மா 1 ரன்னில் ஹென்றி பந்தில் விக்கெட் கீப்பர் லாதமிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி 1 ரன்னில் டிரென்ட் பவுல்ட்டிடம் எல்பிடபிள்யூ முறையில் வீழ்ந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 1 ரன்னில் வெளியேறினார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தனது திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் அதனை அவர் தக்க வைத்துக் கொள்ளாமல் 6 ரன்களில் ஹென்றி வீசிய பந்தில் கேட்ச் ஆனார். ஜேம்ஸ் நீ‌ஷம் பாய்ந்து விழுந்து ஒற்றைக்கையால் கேட்ச் செய்து அவரை ஆட்டமிழக்க செய்தார். இதனால் முதல் 10 ஓவர்களில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 24 ரன்களுடன் தடுமாறியது.
இதைத் தொடர்ந்து 5–வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்டும், ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து அணியை மீட்கப் போராடினர். இந்திய அணியின் ஸ்கோர் 71 ரன்களை எட்டியபோது ரிஷப் பண்ட் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். இதே போல் ஹர்திக் பாண்ட்யாவும் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அப்போது இந்தியா 6 விக்கெட்டுக்கு 92 ரன்களே எடுத்திருந்தது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் விக்கெட் கீப்பர் டோனியும், ஆல்–ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் இணைத்து அணியை மீட்க மிகவும் சிரமப்பட்டனர். இருப்பினும் தனது அதிரடியை காட்டிய ஜடேஜா 39 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். அவருக்கு டோனியும் நன்கு ஒத்துழைப்பு தந்தார். அணியின் ஸ்கோரும் உயர ஆரம்பித்தது. இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்லும் என்று ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தனர். நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் இந்த ஜோடியின் ஆட்டத்தை கண்டு சற்று மிரண்டனர்.
கடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 37 ரன்கள் தேவைப்பட்டது. இந்த பரபரப்பான கட்டத்தில் ஜடேஜா 77 ரன்களில் வெளியேறினார். இதில் 4 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். அதிக ரசிகர்கள் அதிகம் நம்பிக்கை வைத்த டோனியும் 50 ரன்களில் ரன் அவுட்டானார். இதனால் இந்தியாவின் வெற்றி கனவு தவிடுபொடியானது. பின்னர் வந்த புவனேஷ்குமார் ரன் ஏதும் எடுக்காமலும், சாஹல் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை உலக கோப்பையை வெல்லாத நியூசிலாந்து அணி ஏற்கனவே 2015ம் ஆண்டும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரை இறுதியில் தோற்று வெளியேறுவது என்பது இது 4–வது முறையாகும் ஏற்கனவே 1987, 1996, 2015–ம் ஆண்டுகளிலும் அரை இறுதியுடன் வெளியேறியிருந்தது.
இந்திய துணை கேப்டன் ரோகித் சர்மா இந்த ஆட்டத்தில் 27 ரன்கள் எடுத்தால் ஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவரான சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தது. அந்த பொன்னான வாய்ப்பும் அவருக்கு பறிபோனது. இந்த உலக கோப்பையில் ரோகித் சர்மா 9 ஆட்டங்களில் ஆடி 6 சதம் உள்பட 648 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *