செய்திகள்

நியூசிலாந்தில் வாக்களிக்கும் வயதை 18 இல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு

வெலிங்டன், நவ. 23–

நியூசிலாந்து நாட்டில் தேர்தலில் வாக்களிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும்,” என, அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்து உள்ளார்.

தென் மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தில், தேர்தலில் வாக்களிக்கும் வயது, 18 ஆக இருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் வயது தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பு அளித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம், 16 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களை வாக்களிக்க அனுமதிக்காதது வயது பாகுபாடு என தீர்ப்பு அளித்தது.

இந்தத் தீர்ப்பை ஒரு சில அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ள நிலையில், ஒரு சில கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியதாவது:–

நாடாளுமன்ற வாக்கெடுப்பு

நாடு முழுவதும் தேர்தலில் வாக்களிக்கும் வயதை 18 இல் இருந்து 16 ஆக குறைப்பது குறித்து, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில், உறுப்பினர்கள் தெரிவிக்கும் முடிவை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

தனிப்பட்ட முறையில், தேர்தலில் வாக்களிக்கும் வயதை குறைக்கும் நடவடிக்கையை வரவேற்கிறேன். எனினும் இது நடைமுறைக்கு வர 75 சதவீத உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். வரும் மாதங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

இருப்பினும், நியூசிலாந்தின் இரண்டு முக்கிய பழமைவாத எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்ளன. இது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது நாங்கள் ஆதரிக்கும் ஒன்று அல்ல. வாக்களிக்கும் வயது 18 ஆக இருப்பதே சரியானது என தெரிவித்தார்.

வாக்களிக்கும் வயதைக் குறைக்க வேண்டுமா என்று பல நாடுகள் விவாதித்து வருகின்றன. ஆஸ்திரியா, மால்டா, பிரேசில், கியூபா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகள், 16 வயதில் வாக்களிக்க மக்களை அனுமதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *