செய்திகள்

நியாய விலை கடைகளில் ஊழியர்கள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை

எந்தவித புகாருக்கும் இடமின்றி பணியாற்றுங்கள்

நியாய விலை கடைகளில் ஊழியர்கள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை

அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை

 

சென்னை, ஜூன் 30–

நியாய விலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்க கொரோனா வைரஸ் தொற்று காலத்தில், கூட்டுறவுத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து உயர் அலுவலர்களுடன் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ ஆய்வு மேற்கொண்டார்.

அம்மா வழியில் செயல்படும், தமிழ்நாடு அரசால், மாநிலத்தில் உள்ள 4,449 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்த 2019–-20 ஆம் ஆண்டு, 13 லட்சத்து 2 ஆயிரத்து 412 விவசாயிகளுக்கு ரூ.9,352.13 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், ரூ.11,000 கோடி கே.சி.சி. கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு, 22.6.2020 வரை 73,552 விவசாயிகளுக்கு ரூ.580.84 கோடி கே.சி.சி. கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், டெல்டா பகுதிகளில் உள்ள 697 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் 22.6.2020 வரை 6,340 விவசாயிகளுக்கு ரூ.14.58 கோடி அளவிற்கு கே.சி.சி. கடன் வழங்கப்பட்டுள்ளது.

2020 ஜூன் 12–ம் தேதி முதலமைச்சரால் மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில், விவசாயம் மேற்கொள்ள ஏதுவாக, ரசாயன உரங்களை போதுமான அளவு கூட்டுறவுச் சங்கங்களில் இருப்பு வைத்துக்கொள்ளவும், தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் தங்குதடையின்றி வட்டியில்லா பயிர்கடன்கள் வழங்கவும் அமைச்சரால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

உரம் கையிருப்பு

தமிழ்நாடு முழுவதும் தற்போது, கூட்டுறவு நிறுவனங்களில் யூரியா 28,340 டன்னும், எம்.ஒ.பி. 12,161 டன்னும், காம்ளக்ஸ் உரம் 19,154 டன்னும், டி.ஏ.பி. 16,183 டன்னும் என மொத்தம் 75,838 டன் உரம் கையிருப்பில் உள்ளது. இதில், டெல்டா மாவட்டங்களில் மட்டும் 18,022 டன் உரம் கையிருப்பில் உள்ளது.

மேலும், குறுவை நெல் சாகுபடிக்கு தேவைப்படும், நடவு எந்திரங்கள், டிராக்டர்கள், சுழற்கலப்பைகள், உழவு இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் கருவிகளை குறைந்த வாடகைக்கு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வழங்கவேண்டும் என்றும், தரமான விதைகள் மற்றும் பூச்சிகொல்லி மருந்துகளை வழங்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

சிறு வணிகர்களுக்கு ரூ.41 கோடி கடன்

நடப்பாண்டில், 1.4.2020 முதல் 19.6.2020 வரை, சாலையோர வியாபாரிகள், பெட்டிகடை நடத்துவோர்கள், இளநீர், பூ, பழ வியாபாரிகள் என 13,664 சிறு வணிகர்களுக்கு ரூ.41.42 கோடி அளவிற்கு சிறுவணிகக் கடன் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளது. விகிதாச்சார குறியீட்டினை எய்தாத கூட்டுறவு வங்கிகள் சிறுவணிகக் கடன் வழங்குவதை விரைவுபடுத்தி குறியீட்டினை முழுமையாக எய்துமாறு அறிவுரை வழங்கப்பட்டது. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், சுயசேவை பிரிவுகள், அம்மா சிறு கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் ரூ.500 மதிப்புள்ள 19 மளிகைப் பொருட்கள் அடங்கியத் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பினை பெற்ற இத்திட்டத்தின் கீழ் 28.6.2020 வரை ரூ.49.58 கோடி அளவிற்கு, அதாவது 99% விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு காலத்தில் பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, ஏற்கனவே செயல்பட்டு வரும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மற்றும் 178 நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் 28.6.2020 வரை 4,940.23 டன் காய்கறிகள் ரூ.13.03 கோடி அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடை பணியாளர்கள் எவ்வித புகாருக்கு இடமின்றி பணியாற்றிட வேண்டும். புகார்கள் ஏதேனும் வரப்பெறின் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

கூட்டுறவுத்துறையின் செயல்பாடுகள், வளர்ச்சித்திட்டங்கள் குறித்து ஒவ்வொரு இரு மாதத்திற்கு ஒருமுறை பதிவாளர் அலுவலகத்தில் மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தொற்று பரவலை முன்னிட்டு இனி வரும் காலங்களில் மண்டல வாரியாக காணொலி காட்சி மூலம் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கி.பாலசுப்பிரமணியம், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், சிறப்பு பணி அலுவலர் க.ராஜேந்திரன், கூடுதல் பதிவாளர்கள் ம.அந்தோணிசாமி ஜான் பீட்டர், கு.ரவிக்குமார், ஆர்.ஜி.சக்தி சரவணன், எஸ்.செந்தமிழ் செல்வி, எம்.முருகன், ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *