செய்திகள்

நியாயவிலை கடைகளில் மேலும் 4 மாதத்துக்கு உணவு தானியங்கள்

மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி, நவ. 26–

நியாயவிலை கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி, நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிற நிலையில், மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்து இந்திய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமைமையில் நேற்று ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், நியாயவிலை கடைகளில் இலவச உணவு தானியங்கள் வழங்குவது மேலும் 4 மாதங்களுக்கு தொடரும் என்றும் 80 கோடி ஏழை மக்களுக்கு மாதம் ஐந்து கிலோ தானியம் வழங்கும் திட்டம் 2022 மார்ச் வரையில் நீட்டிக்க அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்திருக்கிறது என்றும் கூறி உள்ளார்.

4 மாதம் நீட்டிப்பு

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழை, எளிய மக்களின் உணவு தேவையைப் பூர்த்தி செய்ய, ஏழைகள் நலத்திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்கியது. இதன்கீழ், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேசன் கடைகள் மூலம் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மானிய விலை உணவு தானியத்துக்கு மேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக ஐந்து கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

முதலில், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி, நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பிறகு, நீட்டிக்கப்படாது என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இந்நிலையில், அடுத்து ஆண்டு 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்தை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *