சிறுகதை

நியாயம் | ஆவடி ரமேஷ்குமார்

‘நியாயம் கேட்டுட்டு வரேன்’னு என் மாமனார் வீட்டுக்கு போனீங்களே…

என்னாச்சுப்பா?” வசந்தா கேட்டாள்.

வீட்டுக்குள் நுழைந்த சத்தியமூர்த்தி துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

” தனிக்குடித்தனம் போகனும்னு என் மகள் பிடிவாதம் பிடிச்சதுல உண்மையிலேயே நியாயம் இருக்குதுங்க சம்பந்தினு ஆரம்பிச்சேன். அப்புறம் மாப்பிள்ளை செல்லுகடை வச்சிருக்கார்னு பொய் சொல்லிக் கல்யாணம் பண்ணியது, இப்ப எந்த வேலைக்கும் போகாமல் இருக்கிறது. உன்னையையும் வேலைக்கு போக வேண்டாம்னு தடுத்தது, உன் மாமனார், ரெண்டு மச்சான்டார்கள் வருமானத்துல நீயும் உன் புருஷனும் அண்டி வாழறது, உன் மாமியார் செய்த கொடுமைகள்னு நீ சொன்னது எல்லாத்தையும் எடுத்து சொல்லி…

இந்த காரணங்களால தானே என் மகள் தனிக்குடித்தனம் போனா.

அவளுக்கும் மாப்பிள்ளைக்கும் கௌரவமா இருக்கும்னு ரொம்ப யோசிச்சுத்தான பேச்செடுத்தாள்.

நீங்க நியாமா பேசாம அநியாயமா திட்டித் தீர்த்ததனால வேற வழி தெரியாம பெட்டியை தூக்கிட்டு பிறந்த வீட்டுக்கு வந்துட்டாள்னு சொன்னேன்”

” அதுக்கு ஆளாளுக்கு கத்தியிருப்பாங்களே”

” சம்பந்தி மட்டும் தான் கத்தினாரு. அதுக்கு முன்ன ஒரு விஷயம். நான் சம்பந்திகிட்ட பேசிட்டிருந்த போது… மூத்த மருமகள்கள் சுசீலாவும் கலாவும் சமையல் அறைக்கிட்ட நின்னு நான் பேசறதையே கேட்டுட்டு இருந்தாங்க. நான் அவங்க பக்கம் திரும்பி,’ ஏம்மா நீங்கள்லாம் நியாயத்தை எடுத்துச் சொல்ல மாட்டீங்களா..

உங்களையும் நம்பித்தானே என் மகளை இங்க கட்டிக்கொடுத்தேன்’னு சொன்னேன். அப்ப எனக்கு அழுகையே வந்திடுச்சு.

சுசீலாவும் கலாவும் பதிலுக்கு ஒண்ணும் பேசல. ஆனால் உன் மாமானார்,’ யோவ் வெளில போய்யா… உன் மகளுக்கு புத்தி சொல்லி கூட்டிட்டு வராம எங்களையே குற்றவாளிகளாக்கி இங்க வந்து குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறயா.. எந்திரிய்யா மேல’ னு மரியாதையில்லாம திட்டிட்டார்ம்மா”

இதைக் கேட்டு மனைவி பங்கஜமும் வசந்தாவும் அதிர்ந்தனர்.

” சரி விடுங்க. வசந்தாவோட தலையெழுத்து இது தான்னு நெனச்சு மனசை தேத்திக்க வேண்டியது தான்” என்றாள் பங்கஜம்.

” அப்பா.. என் புருஷன் சரியில்லப்பா. சரியான அம்மா அப்பா கோந்து. என்னை ஒரு மனைவியாவே மதிக்கிறதில்ல. நான் இப்படியே இருந்துக்கறேன்”.

இதைக் கேட்டதும் கண்கள் கலங்கியது சத்தியமூர்த்திக்கு. துடைத்துக் கொண்டார்.

இரண்டு நாட்களுக்கு பிறகு.

வசந்தாவின் கணவன் வெங்கட் திடுதிப்பென்று வீட்டுக்குள் அடி எடுத்து வைக்க மூவரும் அதிர்ந்தனர்.

” வசந்தா… என்னை மன்னிச்சுடு. நான் திருந்திட்டேன். வா நம்ம வீட்டுக்கு போகலாம்” என்றான்.

ஓடிக்கொண்டிருந்த டிவியை அணைத்த வசந்தா, அம்மா அப்பாவை பார்த்துவிட்டு ,”எதை நம்பி நான் உங்க பின்னால வர்றது? உங்களுக்கு வேலையும் இல்ல சொந்தப் புத்தியும் இல்ல. நான் வரலை” என்றாள்.

” நான் இனி வேலைக்கு போறதுனு முடிவு பண்ணிட்டேன். தனிக்குடித்தனம் போகவும் ரெடி. விருப்பப்பட்டா நீயும் வேலைக்கு போகலாம். என்னை மன்னிச்சு நம்ம வீட்டுக்கு வா வசந்தா”

வெங்கட்டின் பேச்சு மூவரையும் மேலும் திகைக்க வைத்தது.

” இதெல்லாம் எப்படி ரெண்டு நாள்ல தலை கீழா மாறுச்சு? நம்பற மாதிரி இல்லையே…என்ன தான் நடந்தது?”வசந்தா கேட்க…

அசடு வழிந்த வெங்கட், ” அது… அது.. வந்து….

வசந்தாவுக்கு நியாயம் கிடைக்கலேனா நாங்களும் எங்க அம்மா வீட்டுக்கு போய்டுவோம்’ னு என் அண்ணிகள் ரெண்டு பேரும் திடீர்னு பெட்டியை தூக்கிட்டாங்க. என் அண்ணன்கள் என்னை திட்ட ஆரம்பிச்சாங்க. எனக்கு இப்ப அங்க மரியாதை இல்ல. அதான் நானே திருந்தி வாழ்றதுனு முடிவு பண்ணிட்டேன். நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். நீ வரலேன்னா என் அண்ணன்கள் வந்து உன்னை சமாதனப்படுத்தி அழைச்சிட்டுப் போக ரெடியா இருக்காங்க. எங்கப்பா’ சம்பந்தியை மரியாதையில்லாம பேசிட்டேன். மன்னிப்பு கேட்கனும்’னு புலம்பிட்டிருக்கார்” என்று அழாத குறையாக சொன்னான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *