சிறுகதை

நினைவு – ராஜா செல்லமுத்து

தம்பி தியாகராஜன் வழக்கம் போல அக்கா சகுந்தலா வீட்டிற்கு அன்றும் வந்திருந்தார். சகுந்தலா, தம்பி வருவதைக் கூட கவனிக்காமல் அவர் வேலைகளில் மும்முரமாக மூழ்கி இருந்தார்.

அது மாலை நேரம் என்பதால் அலுவலக வேலைகளை முடித்த தியாகராஜன் ஆசுவாசமாக அக்காவின் வீட்டில் அமர்ந்தார். அக்காவின் செய்கைகள் அவருக்கு என்னவோ செய்தது .கண்களை முட்டிக்கொண்டு வரும் கண்ணீரை துடைத்துக் கொண்டார்.

ஏனென்றால் ,தான் அழுதால் அக்காவிற்கும் அது சோகத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற எண்ணத்தில் வழியப்போகும் கண்ணுக்குள்ளே கண்ணீரை இருத்திக் கொண்டு அக்கா சகுந்தலாவை பார்த்துக் கொண்டிருந்தார்.

அவர் தன் கணவர் வாசுதேவனின் படத்தில் முன்னால் என்னென்னவோ செய்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த தியாகராஜனுக்கு இப்போதுதான் கண்ணில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது.

வாசு அவர்கள் பயன்படுத்தும் பல் செட் இருந்தது. காலையில் வாசுதேவன் காபி குடிக்கும் காபி தம்ளர் இருந்தது. மதியம் அவர் வழக்கமாக சாப்பிடும் சாப்பாட்டை அவர் படத்திற்கு முன்னால் வைத்திருந்தனர்..

மாலை சிறு தீனி .காபி . என்று வைத்துக்கொண்டிருந்தார் சகுந்தலா .

இதைப்பார்த்த தியாகராஜன் குமுறிக் குமுறி அழ மனம் வந்தாலும் ,அவரால் வாய் விட்டு அழ முடியவில்லை.

ஏனென்றால் அக்கா கணவர் இறந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆன நிலையில், அவரின் நினைவுகளை கொஞ்சம் மறந்து இருக்கும் சகுந்தலா அக்காவின் மனதை மேலும் கிளற வேண்டாம் என்று எண்ணி அவருக்கு தெரியாமல் கைக்குட்டையால் தன் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டார் தியாகராஜன்.

ஒரு பிரமை பிடித்தவள் போல கணவனின் படத்திற்கு முன்னால் மாலை அவர் அருந்தும் காபி. அவர் குடிக்கும் தம்ளரில் வைத்துவிட்டு சிறு நொறுக்குத்தீனி வைத்துக்கொண்டிருந்தார் .விளக்கு ஏற்றி வைத்து விட்டு திரும்பும்போது, தம்பி தியாகராஜன் பார்த்து

தம்பி எப்ப வந்த? என்று கேட்டார்

இப்பதான் வந்தேன் என்று சின்னதாகப் பொய் சொன்னார்.

காபி சாப்பிடுறியா? என்று கேட்டபோது

சரி என்றார் தியாகராஜன்.

இந்தா என்ற சகுந்தலா

சிறிது நேரத்திற்கெல்லாம் காபி டம்ளருடன் வந்து தம்பிக்கு காபியைக் கொடுத்தார்.

அதை வாங்கி உதட்டில் வைத்து உறிஞ்சும்போது அக்காவிடம் கேட்டார்.

‘‘மாமா படத்துக்கு முன்னால என்ன பண்ணிட்டு இருக்க? ’’

என்னடா இப்படி கேக்குற ? மாமா காலையில டிபன் சாப்பிட அவர் பல் செட்டை எடுத்து தொலைக்கி வைப்பேன். பல்லு விளக்காம சாப்பிடக்கூடாது இல்ல. அதற்காகத்தான் அதோ பார் அவருடைய பல்செட் . அதை பேஸ்ட் வச்சு நல்லா தொலக்கி வச்சிருக்கேன் . அவரு சாப்பிடுற டிபன் . காபி சகலம் வச்சிருக்கேன் பாரு . சாப்பாடு மதியம் . அவரு சாப்பிடுற லஞ்சும் வச்சிருக்கேன். பாரு .

அதுவும் சாப்பிட்டார். இப்ப நீ வரும்போது அவர் மாலையில் சாப்பிடுற சிறு தீனி. காபி வச்சிருக்கேன் .சாப்பிட்டுட்டு இருக்காரு .

நீ வந்த … உனக்கும் காபி கொடுக்க… நீயும் சாப்பிட்டு இருக்கே …. என்று ஒரு குழந்தை போல சொன்னது தியாகராஜனுக்கு என்னவோ போல் ஆனது .

என்னக்கா சொல்ற? இது ஏன் இப்படி பண்ற? என்ற போது

அட லூசு பயலே |உனக்கு வேணும்னாா. மாமா எறந்து போயிருக்கலாம் .ஆனா எனக்கு இன்னம் அவரு உசுரோட தான் இருக்காரு. அவரு காலையில் இருந்து சாயங்காலம் வரைக்கும் என்னென்ன பண்ணுவாரோ அதெல்லாம் நான் பண்ணிட்டு தான் இருக்கேன்.

அதுவும் நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் பண்ணித்தான் ஆவேன் இன்னும் உசுரோட என் கூடத் தான் இருக்கார் என்று சொன்னபோது.

வாசுதேவன் படத்திற்குக் கீழே இருந்த அத்தனை பொருட்களையும் வியப்போடு பார்த்தார் தியாகராஜன்.

அவரின் உருவம். அவற்றுக்குக் கீழே வைத்திருந்த பொருட்களை உண்ணுவது போல் இருந்தது.

அக்கா சொல்றது நிஜம் தான். நம்புனவங்களுக்கு ஆத்மா இன்னும் உயிரோட தான் இருக்கு.

நம்பாதவர்களுக்கு தான் இந்த செத்துப்போன உயிர் எதுவும் உயிரோட இல்லை .

அக்கா சகுந்தலா மாமா வாசுதேவன் இன்னும் உயிரோட இருக்குறது தா நினச்சிட்டு இருக்கு. அது அப்படியே இருக்கட்டும் .

செத்துப் போன பிணமா வாழ்த இந்த மனித வாழ்க்கையில செத்துப்போன மனுசன இன்னும் உயிரோடு இருக்காருன்னு நினைக்கிற அக்கா மாதிரி நல்ல மனுஷங்க இங்க இருந்கிறதுனாலதான் இந்த பூமியிலிருந்து ரெண்டு சாெட்டு மழையாவது பெய்யுது.

அக்காவோட ஆசை எப்படியோ அப்படியே இருக்கட்டும் . இத முட்டாள்தனம் . பிரமைன்னு சொல்ல வேணாம்.

அது அவருடைய உள்ளுணர்வு. நல்லது. என்ற தியாகராஜன். புகைப்படத்தில் இருந்த வாசுதேவன் காபி அருந்துவது போல நினைத்துக்கொண்டு அவரும் காபி சாப்பிட்டு கொண்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *