சிறுகதை

நினைவுகள் – ராஜா செல்லமுத்து

கூடைப்பந்து விளையாடும் மைதானத்திற்கு கூட்டமாகக் கூடி வந்தார்கள்.

ரசிகர்கள் கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. இரண்டு எதிரெதிர் அணிகள் பந்தை லாவகமாகப் பிடித்து, அதை பாக்கெட் செய்வதற்காக ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்து பந்தை பந்தாடி கொண்டிருந்தார்கள் இருக்கையில் அமர்ந்திருந்த வாசகர்கள்.

‘நானா இருந்தா அந்தப் பந்தை அழகா பாக்கெட் போட்டு இருப்பேன்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னும் இன்னும் கூட்டம் ஆர்ப்பரித்து அலை மோதியது.

அப்போது கிருஷ்ணா, யுவன், ஜேம்ஸ் ஆகிய மூவரும் மூன்று இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கு நடுவில் ஒரு இருக்கை காலியாக இருந்தது.

யார் வந்து கேட்டாலும் அந்த இருக்கையை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. அந்த இருக்கையில் வினோதமாக ஒரு சட்டை வைத்திருந்தார்கள். ஒரு கூலிங் கிளாஸ் அந்த இருக்கையில் இருந்தது.

அந்த சீட்டின் விலை ரூ.1,500. நான்கு சீட்டுக்கு 6 ஆயிரம் கொடுத்து அந்த சீட்டு வாங்கி இருந்தார்கள்.

எத்தனையோ பேர் எத்தனையோ விஐபிகள் வந்து கேட்டும் அந்த காலியான இருக்கையை அவர்கள் 3 பேரும் கொடுக்க சம்மதிக்கவில்லை.

அவர்கள் சீட்டு கேட்டவர்களிடம் இந்த சீட்டுக்கும் சேர்த்துதான் நாங்கள் டிக்கெட் எடுத்து இருக்கோம் என்று கேட்டவர்களிடம் காட்டினார்கள். இருந்தாலும் கூட்டம் அலைமோதியது. கூடைப்பந்து பார்ப்பதற்கு நின்று கொண்டிருந்த ஆட்களில் ஒருவர் ஜேம்சிடம் ‘ஏன் தம்பி அந்த சீட்டு காலியா தான் இருக்கு. யாராவது ஒருத்தர உட்கார வைக்கலாமே?’ என்று கேட்டபோது ஜேம்சுக்கு படாரென கோபம் வந்தது.

‘யார் சொன்னது? அது காலியா இருக்கற சீட்டுன்னு? இங்க பரத் உட்கார்ந்து இருக்கான். என்னோட ஃபிரண்ட். அவனோட சட்டை தான் சீட்டில் இருக்கு. கூடைப் பந்துன்னா அவனுக்கு அவ்வளவு உசுரு. அவன் எங்க கூட தான் இப்ப வந்து பார்த்துட்டு இருப்பான். இப்ப கூட உட்கார்ந்து கைதட்டி விசில் அடிச்சு கூடைப்பந்து பார்த்துக்கிட்டு இருக்கான். அதைப் போய் நீங்க சாதாரணமா காலி சீட்டுன்னு சொல்லிட்டு இருக்கீங்க’ என்று ஜேம்ஸ் கேட்ட நபருக்குப் பதில் சொன்னான்.

யுவனும் வழிமறித்து சீட்டு கேட்டவரை எகிறி அடிக்கப் போனான்.

‘எப்படி நீ என்னுடைய பரத்த தெரியலன்னு சொல்லலாம்? அவன் உட்காந்து கூடைப்பந்து பார்த்துட்டுத்தான் இருந்தான்’ என்று சொல்ல அதையே கிருஷ்ணனும் வழிமொழிந்தான்.

இந்த மூவரும் பேசிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்தவர்கள் இவர்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டது போல என்று கொஞ்சம் அவர்களிடமிருந்து தள்ளி நின்றார்கள்.

ஆனால் இவர்களைப் பற்றி தெரிந்த ஒருவர், ‘தம்பி அவங்கள தப்பா நினைக்காதீங்க. அவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. என்ன ஒண்ணு எப்பவுமே நாலு பேரும் ஒண்ணா தான் இருப்பாங்க. அதுல ஒருத்தன் தான் பரத். தவறிட்டான். அவன் இறந்தத இவங்களால தாங்க முடியல. அதுதான் சினிமா தியேட்டர் போனாலும் இந்த மாதிரி விளையாட்டு பார்க்க வந்தாலும் இல்ல கடையில டீ கூல்டிரிங்ஸ் குடிக்க வந்தாலும் அதுக்குன்னு தனியா வாங்கி வச்சிட்டு தான் குடிப்பாங்க. அவங்களுக்கெல்லாம் நல்ல மனசு தம்பி. நம்ம தான் லூசு. இருக்கிற மனுசங்களுக்கு உதவி செய்யாம இருக்கற இந்த உலகத்துல இல்லாத ஒரு மனுசனுக்கு இவ்வளவு ஈரமா இருக்காங்கன்னா அவங்கதான் தம்பி, நல்ல மனசு உள்ளவங்க. நம்ம தான் பைத்தியக்காரன்க’ என்று அந்தப் பெரியவர் சொன்னபோது,

பந்து பாக்கெட்டில் விழுந்தது. ஜேம்ஸ், கிருஷ்ணா, யுவன் மூவரும் கைதட்டி சிரித்து கொண்டிருந்தார்கள்.

‘பரத் நம்மாளு கோல் போட்டுட்டான்’ என்று காலியாக இருந்த சீட்டைப் பார்த்து பேசினார்கள்.

இப்போது அவர்களைப் பற்றிய பயம் இல்லாமல் உயர்வாக நினைத்து விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அங்கு நின்று கொண்டிருந்தவர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *